ரஞ்சிதா சி.டி. விவகாரம் வெளியான நேரத்தில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தார் நித்தியானந்தா. இப்போது, ஆர்த்தி ராவ் விவகாரத்தில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைச் சீண்டியதால், மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். தினம் தினம் கர்நாடகாவில் நித்தியானந்தா விவகாரம்தான் ஹாட். மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்தில் இருந்தவருக்கு பிடதியும் பறிபோகும் சூழ்நிலை!
அடுத்த சாட்சி ரெடி!
கர்நாடக சி.ஐ.டி. போலீஸின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் அமலா என்று குறிக்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவின் வாக்குமூலம்தான் நித்தியை ஆட்டிப்படைக்கிறது. சில நாட்களில் அமெரிக்காவில் இருந்து இன்னும் ஒரு சாட்சியும் வருகிறாராம். அவர், நித்தியானந்தாவின் அமெரிக்க ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்த விநய் பரத்வாஜ். 'நித்தியானந்தாவுக்கு பெண்களோடு மட்டுமல்ல... ஆண்களோடும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவுக்கு வந்தால் நைட்கிளப், ரேபான் கண்ணாடி, ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பப்களில் சுற்றுவார். என்னிடம் அதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன’ என்று தெரிவித்து இருக்கிறாராம் விநய். அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
சிக்கலாகிப்போன அவசர உத்தரவு!
கல் எடுத்த கன்னட அமைப்புகள்!
தமிழனுக்கு எதிராக எப்போது கல் எறியலாம் என்று காத்துக்கிடந்த கன்னட அமைப்புகளுக்கு, லட்டு மேட்டராகச் சிக்கினார் நித்தி. அன்று மாலையே கன்னட நவநிர்மாண் வேதிகே, ஜெய் கர்நாடகா ஆகிய அமைப்பினர் பிடதி ஆசிரமத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். 'மதுரை இளைய ஆதீனமான பிறகு, கர்நாடகத்தில் என்ன வேலை? தமிழ்நாட்டுக்கு ஓடிப் போ!’ என்று கோஷம் எழுப்பினர். அவர்களை நித்தியின் சீடர்கள் திடீரென தாக்கத் தொடங்கவே, நிலைமை மேலும் சிக்கலானது. உடனே தலையிட்ட போலீஸ், ஆசிரமத் தரப்பில் எட்டுப் பேரையும், கன்னட அமைப்பினர் 16 பேரையும் கைது செய்தது.
கொந்தளிக்கும் கர்நாடகா!
ரஞ்சிதாவுடன் இருந்த காட்சிகள் வெளியானபோதுகூட, கர்நாடகத்தில் இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பவில்லை. ஆனால் இப்போது பெங்களூரு, பிடதி மட்டுமின்றி மைசூர், மங்களூர், பெல்லாரி என கர்நாடகம் முழுக்கவே போராட்டங்கள் நடக்கின்றன. நித்தி படங்களைக் கிழிப்பதும் உதைப்பது என்று பல்வேறு வகைகளில் கேவலப்படுத்தினர். கன்னட நவநிர்மாண் வேதிகே, ஜெய் கர்நாடகா ஆகிய அமைப்புகள் தினமும் பிடதி ஆசிரமத்தை முற்றுகையிட்டு, நித்தி படத்துக்கு சாணி அடிக்கின்றனர். பொதுமக்களும், எதிர்க் கட்சிகளும், மற்ற அரசியல் கட்சிகளும் நித்தியை எதிர்த்து, தங்கள் கருத்துகளைச் சொல்லத் தொடங்கவே இதுவரை அமைதியாக இருந்த பி.ஜே.பி. அரசும் நித்திக்கு எதிராக வாளைச் சுழற்றத் தொடங்கியது.
களம் இறங்கிய அரசு!
''நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம், அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்'' என்று, முதல் குண்டு வீசியவர் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமார். ''நித்தியானந்தா ஆசிரமத்தால் பிடதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் நடப்பதாக அரசுக்குத் தகவல்கள் வருகின்றன. அதனால் முதல்வரிடமும், உள்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து பிடதி ஆசிரமத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதா அல்லது தனி அதிகாரியை நியமிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
எஸ்கேப் நித்தி!
கடந்த 7-ம் தேதி கன்னட அமைப்புகளும், பொதுமக்களும் பிடதி ஆசிரமத்தைத் தாக்க ஆரம்பித்ததும் நித்தியானந்தா உடனே ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நித்ய சதானந்தா, நித்ய பிரானானந்தா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், மறுநாள் பிரஸ்மீட் நடத்தி மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று திட்டம் வகுக்கப்பட்டதாம். ஆனால் அன்று இரவே ராம்நகர் போலீஸ், நித்தியானந்தா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது கொலை மிரட்டல், வெறித்தாக்குதல், பொதுஅமைதியைச் சீர்குலைத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக நித்தியை சேர்த்துவிட்டு, 'உடனே கைது செய்வதா... வேண்டாமா?’ என்று மேலிடத்தின் பதிலுக்காகக் காத்திருந்தார் எஸ்.பி. அனுபம் அகர்வால். இந்தத் தகவல் காவல் நிலையத்தில் இருந்த நித்ய சாந்தானந்தா மூலமாக நித்திக்குத் தெரியவரவே, அன்று இரவே நித்தி எஸ்கேப். ''எந்தக் காரணம்கொண்டும் எங்கள் மதுரை இளைய ஆதீனத்தைக் கைது செய்யக் கூடாது... கூடாது... நெவர்’ என்று போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாராம் மதுரை மூத்த ஆதீனம்.
நித்தி ஆசிரமத்துக்கு சீல்!
பிடதி ஆசிரம விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக திங்கள் கிழமை காலை, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ராம் நகர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நித்தியானந்தா ஆசிரம விவகாரம் குறித்து இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்தனர். ''நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் முழுவதும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. அதனால் ஏற்கெனவே அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். புதிய வழக்கில் விரைவாகக் கைது செய்ய வேண்டும். நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தைத் தற்காலிகமாக சீல் வைக்கவும், ஆசிரமத்தை முழுமையாக சோதனை செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உள் துறை அமைச்சர் தலைமையிலான குழுவுக்கு, கர்நாடக முதல்வர் உத்தரவு போட்டுள்ளார். ஆக... ஆசிரமத்துக்கு மட்டுமல்ல நித்திக்கும் ஆப்புதான்!
மதுரையிலும் பூட்டு!
மதுரை ஆதீனத்தின் செய்தித் தொடர்பாளர் பாண்டிச்செல்வத்திடம் கேட்டபோது, 'பிடதியில் உள்ள ஆசிரமம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆசிரமத்துக்கு சீல் வைக்கலாமா என்று ஆலோசிக்கப்படுவதைத்தான் மீடியாக்கள் மிகைப்படுத்துகின்றன. தமிழக அரசும், தமிழகக் காவல் துறையும் நித்தியானந்தா தரப்பு நியாயங்களை உணர்ந்து செயல்படுகிறது. அவர் சைவ மதத்தோடு தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுவது, சில கன்னட அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பிரச்னைகளைக் கிளப்பு கிறார்கள். இந்த நேரத்தில் லோக்கல் ரவுடிகள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மதுரை ஆதீன மடத்தைப் பூட்டி வைத்துள்ளோம்'' என்றார் கூலாக.
Thanks to Junior vikatan.
No comments:
Post a Comment