சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார். 4.55 மணிக்கே, சென்னை விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டவருக்கு வழியெங்கிலும் வரவேற்பு. சலனம் இல்லாத புன்னகையின் மூலம், வரவேற்பையும் வாகனத்தின் மீது தூவப்பட்ட மலர்களையும் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் மனதில், பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருந்த 21 நாட்கள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தின என யாருக்கும் தெரியாது.
‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் தனக்கு நெருக்கமானவர்களாக, தனக்கு விசுவாசமானவர்களாகக் காட்டிக்கொண்ட அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டு, 18 வருடப் பழியை 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கும் 18 மாதங்களுக்குள் உடைக்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்’ என்கிறார்கள்.
இத்தனை வருடங்களாகத் தன் தூக்கத்தைத் தொலைக்கச் செய்து துரத்திய வழக்கில், சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் பரிசோதித்துப் பார்த்தும் விடுதலை பெற முடியாமல், குற்றவாளியாகி, முதலமைச்சர் நாற்காலியை இழந்து, எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டு, 66 வயதில் 21 நாட்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தபோது சூழ்ந்த தனிமையும் வேதனையும் அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள், அதாவது செப்டம்பர் 26-ம் தேதி இரவு வரை, தன்னைச் சுற்றி இருந்தவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் என அத்தனை பேரிடமும் பல கட்ட ஆலோசனைகள் நடத்தியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பின் முடிவு நமக்குப் பாதகமாக வரும் என்றால், வேறு வழி யோசிக்கலாம் என்றும் சொல்லியுள்ளார். ஆனால், சுற்றி இருந்த அனைவரும், ஒரே குரலில் கோரஸாக, ‘நாளை வரப்போகும் தீர்ப்பு முழுக்க முழுக்க நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும். இந்த வழக்கில் நிச்சயம் நீங்கள் விடுதலை ஆவீர்கள். தைரியமாகச் செல்லுங்கள்’ எனச் சொன்னார்களாம்.
ஜெயலலிதாவும் அந்த நம்பிக்கையிலேயே செப்டம்பர் 27-ம் தேதி காலை, போயஸ் கார்டன் வீட்டை விட்டுக் கிளம்பினார். ‘இந்த 18 வருடத் தலைவலி இன்றோடு ஒழியப்போகிறது. இனிமேல்தான் எனக்கு நிம்மதி’ எனத் தெம்பாகவே புறப்பட்டார். வழியில் கோட்டூர்புரத்தில் இருக்கும் விநாயகரை வணங்கிவிட்டு நிம்மதியான மனநிலையோடுதான் விமானம் ஏறினார். ஆனால், ‘நீங்கள் குற்றவாளி’ என நீதிபதி குன்ஹா தீர்ப்பு சொன்னபோதுதான், சுற்றி உள்ளவர்களால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நாளில், ‘பெங்களூரில் இருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள் எப்படி வந்தன, அதில் உண்மை உள்ளதா?’ என்பதைக் கேட்டு அறிந்துள்ளார் ஜெயலலிதா. அப்போதுதான் தன்னைச் சுற்றி இருந்தவர்கள், தன்னுடைய விவகாரத்திலேயே எவ்வளவு அசட்டையாக இருந்துள்ளனர் என்பது புரிந்துள்ளது. இந்த வழக்கு பற்றி விசாரிக்க தமிழகக் காவல் துறை அதிகாரிகள் செய்த அதிகபட்ச விஷயம், பெங்களூரு உளவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதுதான். பெங்களூரு உளவுத் துறைக்கு, இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள இருந்த ஒரே சோர்ஸ் பவானி சிங் மட்டும்தான். அதைத் தாண்டி அவர்களால், நீதிபதி குன்ஹாவை நெருங்க முடியவில்லை. பவானி சிங்கிடம் இருந்தும் உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களை அவர்கள் தமிழக உளவுத் துறையிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அதையே விதவிதமாக தோட்டத்தில் ஒப்பித்துள்ளனர். அதன் விளைவு, இப்போது 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யும் பட்டியல் தயார்.
வழக்குரைஞர்கள் செய்த குளறுபடிகள் தனி அத்தியாயம். செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதி ரத்னகலா வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் வந்து மனுக்களை டிக்டேட் செய்தது ஜெயலலிதா தரப்பு. அதுவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார் என்றே தெரியாமலும் போய் நின்றார்கள். நீதிபதி ‘அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார்?’ எனக் கேட்டபோது எல்லோரும் பவானி சிங்கைப் பார்க்க, அவர் தனக்கு அப்படி ஓர் உத்தரவே வரவில்லை எனச் சொன்னது, அதையடுத்து நீதிபதி அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தது போன்றவற்றைக் கேட்டு, கொந்தளித்துப்போனார் ஜெயலலிதா. இந்த வழக்கு பற்றி தான் கேட்டபோது எல்லாம், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனச் சொல்லிவிட்டு, உருப்படியாக யாரும் ஒன்றும் செய்யவில்லை என்ற கோபம் ஜெயலலிதாவுக்குக் கடுமையாக உள்ளது. இந்த மனக்கசப்பை உண்டாக்கிய அனுபவங்களால், இனி தகுதியானவர்கள் மட்டுமே கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். கட்சிக்காரர்கள், விசுவாசிகள் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு இனி யாரும் அந்தப் பதவிக்கு வந்துவிட முடியாது.
போயஸ் கார்டன் வீட்டில் முடங்கிக்கொண்டு, கட்சியையும் ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்குவதைப் பற்றி ஜெயலலிதா யோசிக்கக்கூட இல்லை. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுழன்றடித்த மோடி அலையை எதிர்த்தே, 42 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வென்றவர். அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் 22 மட்டும்தான். கைது, தண்டனை போன்ற விவகாரங்கள், அ.தி.மு.க-வின் வாக்கு சதவிகிதத்தை சற்றே குறைத்தாலும், அதனால் பாதிப்பு இருக்காது. முன்கூட்டியே தேர்தல் வைத்தாலும் தனி மெஜாரிட்டியில் மீண்டும் அ.தி.மு.க ஜெயித்துவிடும். ஆனாலும், முதலமைச்சர் பதவி மூலம் அதிகாரம் நேரடியாக தன்னிடம் இருக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா திட்டவட்டமாக விரும்புகிறார். அதற்காக விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதற்கான வேலைகள் அனைத்திலும் கடந்த காலத்தில் நடந்ததுபோல் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என உஷாராக இருக்கிறார். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க தனியாக ஓர் அணி அமைக்கப்பட உள்ளது. இவ்வளவு உள்ளே நடந்துகொண்டிருந்தாலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றி, புயலுக்குப் பின் நிலவும் கனத்த மௌனம்தான் உறைந்து நிற்கிறது.
கட்சிக்காரர்களில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி என்ற மூன்று பேரைத் தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்கவில்லை. அதனால் இந்தக் கனத்த மௌனத்துக்குப் பிறகு நடக்கப்போகும் பூகம்பத்தை யாராலும் கணிக்க முடியவில்லை!
ஜாமீனில் உள்ள சாதகமும் பாதகமும்…
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் மனோஜ் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜெயலலிதாவுக்கு ஜாமீனில் விடுதலை வழங்கி உள்ளது. ஆனால், அதில் ஜெயலலிதாவுக்கு சாதக மற்றும் பாதக அம்சங்கள் சரிசமமாகவே இருக்கின்றன.
சாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்திவைத்தது. மேல்முறையீட்டுக்கு ஜெயலலிதா தரப்பு கேட்ட 6 வார கால அவகாசத்தைவிட கூடுதலாக இரண்டு வாரங்கள் கொடுத்து 8 வார கால அவகாசம் வழங்கி இருப்பது. மேல்முறையீட்டு விசாரணைக்கு ஜெயலலிதா நேரில் வரத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலே போதும் எனச் சொல்லியிருப்பது.
பாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 17-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்தத் தேதிக்குள் வழக்கின் 35 ஆயிரம் பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால்கூட ஜாமீனை ரத்து செய்வோம் எனக் கண்டிப்பு காட்டியிருப்பது.
இந்த வழக்கின் மனுதாரர்கள் சுப்ரமணியன் சுவாமி, க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டதாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினால், அதை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளாது.
மேல்முறையீட்டை ஒரு நாள்கூட ஒத்திவைக்க முயற்சிக்கக் கூடாது!
நன்றி-விகடன்
No comments:
Post a Comment