Thursday, July 28, 2016

ஐயோ பாவம், ஆணின் வலிகள்!




ஐயோ பாவம், ஆணின் வலிகள்!

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது...

"டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரியுதா?"

ப்ளஸ்1 போகும்போது....

"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ஏதாவது ஒர்க்ஷாப்தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல.. 2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்... ச்சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்... ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு. உசிரோட இருந்து பிரயோஜனமில்ல. அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.

" பொட்டை புள்ளைன்னா பரவால்ல. கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம். நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும். வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும். எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்.. எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து.. இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக்கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு... உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும் சமாளித்து....கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ.. சீக்கிரம்  ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."

இங்கேதான் தொடங்குகிறது.. ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...திருமணம் நடந்து மனைவியிடம் அன்பாக நடந்து கொண்டால் "அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்" என்று குடும்பத்தினரிடமும் அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்...." ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு... இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்  தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்" என்று பெண்டாட்டியிடமிருந்து  புறப்படும்  ஒரு உத்தரவு....

வேலை இடத்தில் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது. வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் . பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும் என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல், மனைவி பேச்சையும் தட்ட முடியாமல் இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து இரண்டுபக்கமும் கெட்ட பெயர்  வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில் 'சிடுமூஞ்சி'யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும். குடும்பத்தில் விசேஷம் என்றால் மனைவிமக்களுக்கு நல்லதாய் தேடித்தேடிக் துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிளை தனக்கு 'பை ஒன் கெட் டூ' என டிஸ்கௌன்ட்டிற்கு அலைவான். தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்  நல்லபடியாக செய்து.. உறவு நட்பில் வரும்.... கல்யாணம் கருமாதிக்கு மொய்யெழத பொய்சொல்லிக் கடன் வாங்கி,, வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?

"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல... இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக ஒரு வீடு வாங்கினாலோ? கார் வாங்கினாலோ? அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்... "ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க.. எனக்கும் வாச்சுதே ஒன்னு...  அரைக்காசுக்கு பொறாத மனுசன்... எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.." என்கிற பிலாக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்...'பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'
கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... 'பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா? எப்பப்  பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து அதை பார்க்கும் நிலை வந்தால் பெண்களுக்கு அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.
'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா? என்னால முடியாது பீ மூத்திரம் வழிக்க...உந்தம்பிய பாக்கச் சொல்லு..'

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான், பழிதான், தூசனயும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.
ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள் அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்
 ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
 ஒரு ஆணுக்கு எந்தக் பெருமையும் இல்லை. எந்தப்புகழும் இல்லை. புகழ் வேண்டாம்,  பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்

"நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு.. இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி.. என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் பதினாறு வயது வரைதான் அதன்பிறகு அவன் சாகும்வரையிலும் "கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்."

எல்லா ஆண்களுமே இப்படித்தான் என்று நான் அடாவடி பேசவில்லை. பெருவாரியா நல்ல ஆண்களின் நிலைதான் இது! குடிகார்கள், பொறுப்பற்றவர்களும் இருக்கிறார்கள். நான் பேசியது பொறுப்புள்ள நல்ல ஆண்களைப் பற்றித்தான்.!

விதிவிலக்குகள் ஆண்களிலும், பெண்களிலும் இருபாலரிடத்தும் உண்டு

No comments:

Post a Comment