Friday, May 20, 2011

திகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பலத்த போலீஸஅ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.


இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


நீதிபதி சொல்லியிருப்பது என்ன? : இன்றைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஓ.பி., சைனி கூறியிருப்பதாவது: கனிமொழிக்கு ஜாமின் கொடுக்க இயலாது, காரணம் இவர் புரிந்துள்ள குற்றம் மிக பெரிய அளவிலானது. இவர் மீதான குற்ற முக்கியத்துவம் அடிப்படையில் இவர் பெண் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்பதை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள முடியாது. இத்துடன் இந்த வழக்சில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. எனவே இந்த தருணத்தில் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும் இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நாளை காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.


“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .


கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.


“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.



சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா,யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா,கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:

இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
உத்தரவுக்கு காத்திருக்கிறேன்-கனிமொழி

முன்னதாக கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

மதியம் 1 மணிக்கு கனிமொழியின் ஜாமீன் மீது உத்தரவு

டெல்லி சிபிஐ நீதிமன்றம், மதியம் ஒரு மணிக்கு கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப் படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

Thursday, May 19, 2011

அழகிரி!

“இந்த நாட்டைவிட, ‘அந்த’ வீட்டைக் கவனிப்பதுதான் அவருக்கு (கருணாநிதி) முக்கியமாகப் போச்சு… இன்னும் 1 மாதத்தில் நாட்டைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் அவர் இருக்கமாட்டார். சந்தோஷமாக ‘அந்த’ வீட்டில் இருந்து, ‘அவர்களையே’ கவனித்துக் கொள்ளட்டும்”

மேலேயுள்ள வாக்கியத்தைச் சொன்னது ஒரு அ.தி.மு.க. தலைவராகவோ, தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகராகவோ இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நம்புங்கள், மேலேயுள்ள வார்த்தைகள் வெளிவந்தது தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி என்று கூறப்படும் அழகிரியின் வாயிலிருந்து! தேர்தல் தினத்துக்குச் சில நாட்களுக்குமுன், கோபத்துடன் அவர் கூறிய வார்த்தைகள் அவை!

தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தி.மு.க. ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை ஊகிக்காதவர்கள் மிகக்குறைவு. ஆனால், இப்போது நடந்திருப்பதுபோல மிகக் கேவலமான தோல்வியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை.

ஆனால் அழகிரி அதை ஊகித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

மதுரையில் தான் கட்டியெழுப்பிய சாம்ராச்சியம் இப்போது சரசரவெனச் சரிவதை, அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. இனி எச்சரிக்கை ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியதில்லை. வெள்ளம் தலைக்கு மேல்!

அவரது ஆட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மதுரையிலிருந்து கிளம்ப பெட்டியைக் கட்டி விட்டார்கள். மதுரை மாநகருக்கு உள்ளேயுள்ள பல பில்டிங்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள், அவசர அவசரமாக ரிஜிஸ்தார் ஆபீசில் மாறுகின்றன.

மதுரை மத்தியில் கட்சிக் கொடியுடன் பந்தாவாகப் பவனிவந்த பல சுமோக்கள் இப்போதெல்லாம் மதுரை எல்லைக்குள்ளேயே தென்படுவதில்லை. இவற்றில் பல, மதுரைக்கு வெளியே கிராமங்களில் உள்ள பண்ணை வீடுகளில் கீற்றுக் கொட்டகைகளில் தற்காலிகமாகத் தூங்குகின்றன. கடந்த ஓரிரு தினங்களாக சில மதுரை வீடுகளில் டெம்போக்கள் இரவு நேரத்தில் வந்து நிற்கின்றன. பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இரவோடு இரவாக மதுரை மாநகர எல்லைக்கு வெளியே பறக்கின்றன.

ஒரு சாம்ராச்சியம் காலி செய்யப்படுகின்றது.

இவற்றில் ஏதும் அவருடன் (அழகிரி) நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவையெல்லாம் அவரைச் சுற்றி வளைய வந்துகொண்டிருந்த ஆட்களின் சொத்துக்களாம். “தேர்தல் முடிவுகள் வருமுன்னரே, அண்ணன் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டார்… தெரியுமோ?” என்று கண்ணடிக்கிறார்கள் அவர்கள்.

சரி. நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று ‘அண்ணனுக்கு’ எப்படித் தெரிந்தது?

தேர்தல் பிரசார டைமிலேயே அண்ணனை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்களாம். அவசரப் படாதீர்கள். அப்படிச் செய்தது எதிரணியினர் அல்ல… அவரது சொந்தக் கட்சித் தலைமைதான்!

அப்படி என்னதான் நடந்தது என்று அழகிரியுடன் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். சுவாரசியமான விஷயங்கள் வெளிவருகின்றன.

தேர்தல் கமிஷன் கடுமை காட்டப்போகின்றது என்பது உறுதியானவுடன், முதன்முதலில் ‘மாற்று வழிகளை’ கண்டுபிடித்தது மதுரையில்தான். அந்தளவுக்கு அழகிரி அலேர்ட்டாக இருந்திருக்கிறார்.

தென்மாவட்ட வேட்பாளர் தேர்விலும் ஓரிரு நெருடல்கள் இருந்தாலும், ஓவர்ஆல் நிலைமை அவருக்குத் திருப்தியாகவே இருந்தது. நிதி நிலைமையில் எப்போதும், எந்தக் கவலையும் இல்லை. மொத்தத்தில் யுத்தத்துக்கு 100% அஞ்சாநெஞ்சர் ரெடியாகவே இருந்தார்.

ஆனால் அதன்பின்தான் சென்னையிலிருந்து சரம்சரமாக உத்தரவுகள் வரத் தொடங்கின.

மதுரைப் படப்பிடிப்பில் இவர்தான் டைரக்டர் என்பதே அதுவரை இருந்த நிலை. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க, டைரக்ஷன் உத்தரவுகள் சென்னையிலிருந்து வர, இவர் உதவி டைரக்டர்போல ஆகிவிட்டார்!

ராசா-கனிமொழி ஊழல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருக்க, தென்மாவட்டங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அப்படியான நிலையில் மக்களை வாக்களிக்க அனுப்பி வைத்தால், ‘கோவிந்தா’ தான் என்பது பலவருட அரசியல்வாதியான அவருக்கும் தெரியும்.

போதும் போதாதற்கு, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வேறு! காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் களம் இறங்கியிருந்த தமிழின உணர்வாளர்களின் ஸ்ட்ராங் ஸ்பாட்டே, தென் மாவட்டங்கள்தான். சீமான் போன்றவர்களுக்குக் கூட்டம் அதிகம் கூடியதும் தென்மாவட்டங்களில்தான்.

இதற்காக அழகிரி வகுத்திருந்த வியூகம், வாக்களிக்கச் செல்லும்போது மக்களை மகிழ்ச்சியான மனநிலையில் செல்ல வைப்பது. ஆடல், பாடல், வடிவேலு காமடி என்று மக்களின் மனநிலையை லேசாக்கும் வேலையில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்க-

பிரசாரத்துக்கு கனிமொழியைக் களம் இறக்குவது என்ற முடிவு சென்னையில் எடுக்கப்பட்டது.

இந்தத் தகவல் மதுரையை வந்தடைந்தபோது, அழகிரி முதலில் அதை நம்பவில்லை. “தலைமை அப்படியெல்லாம் செய்யாது. பிரச்சினையே அவங்கதானே (கனிமொழி). பிரசாரத்துக்காக அவங்க வெளியே வரமாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, சென்னையைத் தொடர்பு கொண்டு கேட்டால், கிடைத்த சேதி நிஜம்!

அப்போதே “இந்த விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை, அப்போது ஆஃப் ஆகிவிட்டார்.

“தலைமை என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். தென் மாவட்டங்களில் எங்கள் வேலையை நாங்கள் தொடர்வோம். கனிமொழி நம்ம ஏரியாவுக்கு வரமாட்டார்” என்று தன்னையும் சமாதானப்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், இதுகூட ஓரிரு மணிநேரத்துக்குமேல் நீடிக்கவில்லை. அடுத்த தகவல் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது – “கனிமொழி தென்மாவட்டங்களிலும் சூறாவளிப் பிரசாரம்!”

பொங்கியெழுந்தார் அஞ்சாநெஞ்சர்! தலைமையுடன் டெலிபோனில் அவர் போட்ட சண்டையில் ‘காரமான’ சொற்களும் வந்து விழுந்தன என்கிறார்கள். நான்கைந்து தடவைகள் போன் போட்டுப் பேசியபின், “இல்லை.. நிச்சயம் கனிமொழி நம்ம ஏரியா பக்கம் வரப்போவதில்லை” என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குச் சொல்லி உற்சாகப் படுத்தினார்.

ஒருவேளை சென்னையிலிருந்து அப்படியொரு உறுதிமொழி அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சென்னைக்கு என்ன அழுத்தமோ(!), ‘டாண்’ என்று தெற்கே வந்திறங்கினார் கனிமொழி! நடப்பதை நம்ப முடியாமல், திகைத்துப்போய் ஓரடி பின்வாங்கினார் அழகிரி.

“என்னய்யா… அவங்க (கனிமொழி) பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாயிருக்கு. அதையெல்லாம் மக்களை மறக்க வைக்கலாம் என்று நான் கிடந்து அல்லாட, அவங்களையே கொண்டுவந்து இறக்கிறாங்களா? எதுக்கு? மக்களுக்கு ஞாபகப்படுத்தவா?” என்றெல்லாம் நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் அவர்.

“நிலைமை கையை மீறிப் போய்விட்டது. தெற்கே இனியும் நான் ராஜா இல்லை” என்று அப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது அவருக்கு. அதன்பின்தான் ஒதுங்கிக் கொண்டார். ஏதோ, சம்பிரதாயத்துக்கு தலையைக் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, ஆட்சி மாற்றம் வந்தால் என்ன செய்வது என்ற ‘தனது வேலைகளை’ பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது நிஜமாகவே ஆட்சி மாறிவிட்டது. அழகிரி, ‘தனது விஷயத்தில்’ மதுரையை கிளீன் ஸ்லேட்டாக மாற்றி வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள். புதிய அரசு தலைகீழாக முயன்றாலும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளில் அவரைச் சிக்க வைக்க முடியாதாம்! ஆட்சி முடியும் முன்னரே, முடிக்க வேண்டிய விஷயங்கள் முடிக்கப்பட்டு விட்டனவாம்!

நம்புவோம். இவ்வளவு கால அவகாசத்தில் அதைச் செய்திருக்க முடியும்தான்.

ஆனால், புதிய அரசு பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைத் தொடாமல், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் கவனத்தைத் திருப்பினால்?

ஏனென்றால் அவை அசையாச் சொத்துக்களைப் பற்றியவையல்ல… (எந்தப் பக்கமும்) அசையக்கூடிய சாட்சிகளைப் பற்றியவை அல்லவா!

கி. வீரமணி

ராசாத்தி காலில் ராசா விழுந்தது ஏன்

மே 8ம் தேதியிட்ட 'தினமணி' நாளிதழில், "2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு கனிமொழி வந்த போது, அவருக்கு துணையாக ராசாத்தியம்மாள் வந்தார். அப்போது, அங்கிருந்த மத்திய முன்னாள் அமைச்சர் ராசா, ராசாத்தியம்மாள் காலில் விழுந்து வணங்கினார்"

கேட்ட செய்தி: டிவிட்டரில் யாரோ எழுதி, என் நண்பர் எனக்கு மொபைல்போனில் சொன்னது. "எத்தனை நாள்தான் நான் திகார் சிறையில் தனியாக இருப்பது. எனக்கு துணையாக, கனிமொழியை அனுப்பு வையுங்கள்' என்பதுதான் கேட்ட செய்தி.

இரண்டாவதாக இருக்கும் செய்தி நடக்குமோ நடக்காதோ என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி ராசா ஆசைப்பட்டாலும் தவறில்லை. சதியாளர் இருக்க வேண்டிய இடத்தில்தானே கூட்டுச் சதியாளரும் இருக்க வேண்டும். அதில் ஒன்றும் தவறில்லையே.

ஆனால், கோர்ட்டுக்குள் வந்த ராசாத்தியின் காலில் ஆ.ராசா ஏன் விழ வேண்டும். கட்சித் தலைவர் கருணாநிதியின் காலில், பலர் பார்க்கும்படி விழுவது கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், ராசாத்தி காலில் விழுவது சரியா?

அப்படியென்ன அவசியம் ராசாவுக்கு. "எப்படியாவது உங்கள் மகள் கனிமொழியை காப்பாற்றுவது போல, என்னையும் காப்பாற்றுங்கள்' என்று காலில் விழுந்து கேட்கிறாரா?

அதெப்படி முடியும். மகளைத்தானே முதலில் காப்பாற்றியாக வேண்டும். அப்புறம் ராசா உள்ளே... வெளியே எப்படி இருந்தால் என்ன?

அதுதான் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நாறிவிட்டதே. ராசாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி அடித்து சொல்லிவிட்டாரே? அப்புறம் ராசாவை எப்படி தி.மு.க. காப்பாற்றும். பதிலுக்கு அடித்த பணத்தில், கொடுத்த தொகையைச் சொல்லி ராசா கட்சித் தலைமையை வழிக்கு கொண்டு வர முடியுமா?

அப்படியே ராசா மிரட்டினால் கருணாநிதி சும்மா விடுவாரா?

திகார் சிறைக்குள்ளேயே ராசா கதை முடிந்துவிடுமே!

அதற்குத்தான் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அண்ணாநகர் ரமேஷ், ராசாவின் பார்ட்னர் சாதிக் பாஷா போன்றவர்களின் கதைகள் இருக்கவே இருக்கிறது.

ஆக, ராசா இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை.

ஸ்பெக்டரம் வழக்கில் ராசா ஆதாயம் பெற்றதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதை கோர்ட்டில் சி.பி.ஐ. வலுவாக எடுத்து வைக்கும்.

ராசாவுக்கு இந்த ஊழலில் பங்கு இருக்கும் போது, கனிமொழிக்கு எந்த பங்கும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் என்பதுதான் அடுத்த கேள்வி?

ராசாவுக்கு அதே அமைச்சர் பதவியை வாங்கித்தர, கனிமொழியும் நீரா ராடியாவும் பேசிய பேச்சுக்கள் இருக்கிறதே.

அப்படியென்ன ராசா மீது கனிமொழிக்கு பாசம். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை யாருக்கு போனால் இவருக்கு என்ன? தனக்கு விமான போக்குவரத்துத்துறை அதுவும், கேபினட் அல்லது தனி இலாகாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கனிமொழி, நீரா ராடியாவிடம் கேட்கிறாரே? அது ஏன்?

வானத்தில் கண்களுக்கு தெரியாத அலைக்கற்றை வைத்து அடித்தாகிவிட்டது. அடுத்து என்ன?

அடுத்து, வானத்தில் பறக்கும் விமானங்களை வைத்து பறந்து பறந்து கோடிக் கணக்கில் சுருட்ட திட்டமா?

என்ன ஆசை. என்னே ஆசை.

கருணாநிதியின் மகள் என்பதாலே கனிமொழிக்கு எத்தனை வழி வகைகள்.

கட்சியில் இவர் செய்த தியாகங்கள் என்ன?

சென்னை சங்கமம் நடத்தி கிராமிய கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாராம்- இப்படி கலைஞர் கதைக்கிறார்.

இதே பார்முலாவை ஒரு நூர்ஜஹானோ அல்லது சங்கரி நாராயணனோ அல்லது குப்பமாளோ எடுத்துக் கொண்டு வந்து, 'ஐயா... இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். உங்கள் அறக்கட்டளையிலிருந்தும், அரசு கஜானாவிலிருந்தும் ஒரு கோடி கொடுங்கள்" என்று கேட்டிருந்தால்.... கலைஞர் என்ன செய்திருப்பார்?

அடுத்து, தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாராம்.

தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியினரை எல்லாம் அழைத்து, அதுவும் ஒவ்வொரு மாவட்ட மந்திரிகளையும் அழைத்து, என் மகள் வந்தால், அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுங்கள் என்று நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதுமட்டுமா, உங்கள் மகள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமுக்கு இரண்டு பிரத்யேக அமைச்சர்கள் பூங்கோதை, தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் துணைக்கு வர வேண்டும்.


அதில், தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பூங்கோதை, எல்லா கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் அழைத்து, வேலை வாய்ப்பு முகாமுக்கு ஸ்டால் வைக்க வேண்டும். இப்படி எல்லா அதிகார பீடங்களையும் அனுப்பி வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த, வேறு யாருக்காவது முன் வந்திருப்பீர்களா?

இன்று தி.மு.க.வும், உங்கள் குடும்பத்தினரும் இத்தனை அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டிருப்பது யாரால்?

எல்லாம் வல்ல கலைஞர் கருணாநிதியால்தானே.

இதற்கு தமிழ் லீடர் முடிவுரை எழுதுவதற்கு முன்பு, எல்லா நேரமும் கலைஞரை வாழ்த்தி ஏத்தும் வாலியின் வரிகளே போதுமானது.

"...கம்பன் கண்ட நாட்டில் கல்வியில் முதலில்

வருபவர்களுக்கு முன்னுரிமை இருக்காது

கல்விக்கு விலை இருக்காது..

இன்று இருக்கும் 2ஜி பிராப்ளம் அன்று இல்லை

அதாவது எல்.கே.ஜி.. யூ.கே.ஜி... காவல்துறையில்

காவல் அதிகாரியாய் சின்ன கவுண்டர்,

பெரிய கவுண்டர் என்று எந்த கவுண்டர் இருந்தாலும் என்கவுண்டர் இருக்காது.

அமைச்சுவில் ராஜா ராஜாவாகத்தான் இருக்க முடியும்.

மந்திரி மந்திரியாகத்தான் இருக்க முடியும்.

ராஜாவே மந்தியாக வாய்ப்பில்லை

எனவே புகாருக்கும் திகாருக்கும் வேலையில்லை"

என்று கம்பன் விழாவில் வாலி வாய் திறந்திருக்கிறார்.

இதுகாறும் கொடநாடு ராணியை கேலி செய்த வாலியே, உங்கள் கட்சியின் அமைச்சராக இருந்த ராசாவை சாடி இருக்கிறார் என்றால், அடுத்து கனிமொழி மீதும் கடு(ம்) மொழி பொழிவார் வாலி என்பது வெகு தொலைவில்லை.

அதற்கு முன்பாவது..... திருந்த முடியுமா என்று பாருங்கள்!


தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச கோளாறு மற்றும் இரைப்பை நோய் காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.

அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு நேற்று நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கை:

நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு மற்றும் குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சிகிச்சைகளின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேற்கொண்டு நடக்கும் சிகிச்சையின் தன்மை கருதி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவு?

ரஜினியின் முழு உடல் பரிசோதனை முடிவுகள் மற்றும் திசு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு பிரச்சினையையும் மிக கவனமாக சரிசெய்து வருகின்றனர் மருத்துவர்கள்.

ரஜினிக்கு சுவாசக் கோளாறு சீரடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து சிறுநீரகங்களை ஒழுங்காக செயல்பட வைக்க சில சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியாக இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டயாலிஸிஸ்

சிறுநீரகங்கள் இன்னும் சீரான செயல்பாட்டுக்கு திரும்பாததால், ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு அவசரம் கருதி, அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே மார்புப் பகுதியில் தேங்கியிருந்த திரவத்தை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இந்த டயாலிஸிஸுக்குப் பிறகு சிறுநீரகங்கள் சீரான செயல்பாட்டுக்குச் திரும்ப வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.