கேட்ட செய்தி: டிவிட்டரில் யாரோ எழுதி, என் நண்பர் எனக்கு மொபைல்போனில் சொன்னது. "எத்தனை நாள்தான் நான் திகார் சிறையில் தனியாக இருப்பது. எனக்கு துணையாக, கனிமொழியை அனுப்பு வையுங்கள்' என்பதுதான் கேட்ட செய்தி.
இரண்டாவதாக இருக்கும் செய்தி நடக்குமோ நடக்காதோ என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி ராசா ஆசைப்பட்டாலும் தவறில்லை. சதியாளர் இருக்க வேண்டிய இடத்தில்தானே கூட்டுச் சதியாளரும் இருக்க வேண்டும். அதில் ஒன்றும் தவறில்லையே.
ஆனால், கோர்ட்டுக்குள் வந்த ராசாத்தியின் காலில் ஆ.ராசா ஏன் விழ வேண்டும். கட்சித் தலைவர் கருணாநிதியின் காலில், பலர் பார்க்கும்படி விழுவது கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், ராசாத்தி காலில் விழுவது சரியா?
அப்படியென்ன அவசியம் ராசாவுக்கு. "எப்படியாவது உங்கள் மகள் கனிமொழியை காப்பாற்றுவது போல, என்னையும் காப்பாற்றுங்கள்' என்று காலில் விழுந்து கேட்கிறாரா?
அதெப்படி முடியும். மகளைத்தானே முதலில் காப்பாற்றியாக வேண்டும். அப்புறம் ராசா உள்ளே... வெளியே எப்படி இருந்தால் என்ன?
அதுதான் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நாறிவிட்டதே. ராசாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி அடித்து சொல்லிவிட்டாரே? அப்புறம் ராசாவை எப்படி தி.மு.க. காப்பாற்றும். பதிலுக்கு அடித்த பணத்தில், கொடுத்த தொகையைச் சொல்லி ராசா கட்சித் தலைமையை வழிக்கு கொண்டு வர முடியுமா?
அப்படியே ராசா மிரட்டினால் கருணாநிதி சும்மா விடுவாரா?
திகார் சிறைக்குள்ளேயே ராசா கதை முடிந்துவிடுமே!
அதற்குத்தான் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அண்ணாநகர் ரமேஷ், ராசாவின் பார்ட்னர் சாதிக் பாஷா போன்றவர்களின் கதைகள் இருக்கவே இருக்கிறது.
ஆக, ராசா இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை.
ஸ்பெக்டரம் வழக்கில் ராசா ஆதாயம் பெற்றதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அதை கோர்ட்டில் சி.பி.ஐ. வலுவாக எடுத்து வைக்கும்.
ராசாவுக்கு இந்த ஊழலில் பங்கு இருக்கும் போது, கனிமொழிக்கு எந்த பங்கும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் என்பதுதான் அடுத்த கேள்வி?
ராசாவுக்கு அதே அமைச்சர் பதவியை வாங்கித்தர, கனிமொழியும் நீரா ராடியாவும் பேசிய பேச்சுக்கள் இருக்கிறதே.அப்படியென்ன ராசா மீது கனிமொழிக்கு பாசம். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை யாருக்கு போனால் இவருக்கு என்ன? தனக்கு விமான போக்குவரத்துத்துறை அதுவும், கேபினட் அல்லது தனி இலாகாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கனிமொழி, நீரா ராடியாவிடம் கேட்கிறாரே? அது ஏன்?
வானத்தில் கண்களுக்கு தெரியாத அலைக்கற்றை வைத்து அடித்தாகிவிட்டது. அடுத்து என்ன?
அடுத்து, வானத்தில் பறக்கும் விமானங்களை வைத்து பறந்து பறந்து கோடிக் கணக்கில் சுருட்ட திட்டமா?
என்ன ஆசை. என்னே ஆசை.
கருணாநிதியின் மகள் என்பதாலே கனிமொழிக்கு எத்தனை வழி வகைகள்.
கட்சியில் இவர் செய்த தியாகங்கள் என்ன?
சென்னை சங்கமம் நடத்தி கிராமிய கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாராம்- இப்படி கலைஞர் கதைக்கிறார்.
இதே பார்முலாவை ஒரு நூர்ஜஹானோ அல்லது சங்கரி நாராயணனோ அல்லது குப்பமாளோ எடுத்துக் கொண்டு வந்து, 'ஐயா... இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். உங்கள் அறக்கட்டளையிலிருந்தும், அரசு கஜானாவிலிருந்தும் ஒரு கோடி கொடுங்கள்" என்று கேட்டிருந்தால்.... கலைஞர் என்ன செய்திருப்பார்?
அடுத்து, தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாராம்.
தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியினரை எல்லாம் அழைத்து, அதுவும் ஒவ்வொரு மாவட்ட மந்திரிகளையும் அழைத்து, என் மகள் வந்தால், அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுங்கள் என்று நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதுமட்டுமா, உங்கள் மகள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமுக்கு இரண்டு பிரத்யேக அமைச்சர்கள் பூங்கோதை, தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் துணைக்கு வர வேண்டும்.
அதில், தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பூங்கோதை, எல்லா கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் அழைத்து, வேலை வாய்ப்பு முகாமுக்கு ஸ்டால் வைக்க வேண்டும். இப்படி எல்லா அதிகார பீடங்களையும் அனுப்பி வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த, வேறு யாருக்காவது முன் வந்திருப்பீர்களா?
இன்று தி.மு.க.வும், உங்கள் குடும்பத்தினரும் இத்தனை அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டிருப்பது யாரால்?
எல்லாம் வல்ல கலைஞர் கருணாநிதியால்தானே.
இதற்கு தமிழ் லீடர் முடிவுரை எழுதுவதற்கு முன்பு, எல்லா நேரமும் கலைஞரை வாழ்த்தி ஏத்தும் வாலியின் வரிகளே போதுமானது.
"...கம்பன் கண்ட நாட்டில் கல்வியில் முதலில்
வருபவர்களுக்கு முன்னுரிமை இருக்காது
கல்விக்கு விலை இருக்காது..
இன்று இருக்கும் 2ஜி பிராப்ளம் அன்று இல்லை
அதாவது எல்.கே.ஜி.. யூ.கே.ஜி... காவல்துறையில்
காவல் அதிகாரியாய் சின்ன கவுண்டர்,
பெரிய கவுண்டர் என்று எந்த கவுண்டர் இருந்தாலும் என்கவுண்டர் இருக்காது.
அமைச்சுவில் ராஜா ராஜாவாகத்தான் இருக்க முடியும்.
மந்திரி மந்திரியாகத்தான் இருக்க முடியும்.
ராஜாவே மந்தியாக வாய்ப்பில்லை
எனவே புகாருக்கும் திகாருக்கும் வேலையில்லை"
என்று கம்பன் விழாவில் வாலி வாய் திறந்திருக்கிறார்.
இதுகாறும் கொடநாடு ராணியை கேலி செய்த வாலியே, உங்கள் கட்சியின் அமைச்சராக இருந்த ராசாவை சாடி இருக்கிறார் என்றால், அடுத்து கனிமொழி மீதும் கடு(ம்) மொழி பொழிவார் வாலி என்பது வெகு தொலைவில்லை.
அதற்கு முன்பாவது..... திருந்த முடியுமா என்று பாருங்கள்!
No comments:
Post a Comment