Wednesday, February 1, 2012

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?

கடந்த 2006 -ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்த நேரம். பா.ம.க.வுக்கு அதிக மான நெருக்கடியைக் கொடுத்ததாக அ.தி.மு.க. பிரமுகர் சி.வி. சண்முகம் கருதப்பட்டார். (இன்று வணிக வரித் துறை அமைச் சராக இருக்கிறார்!) மே 8-ம் தேதி அன்று அன்று சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. அவருடன் பேசிக்கொண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை வெட்டிச் சாய்த்தது

உயிருக்குப் பயந்த நிலையில், பதுங்கித் தப்பித்தார் சண்முகம். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு உள்ளிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சி.வி.சண்முகம்.

ஆனால், அப்போது ஆளும் கட்சியான தி.மு.க.வில் பா.ம.க. அங்கம் வகித்ததால், விசாரணை சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தச் சமயத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். அதன் பிறகு இரண்டு முறை, 'சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் காரணமாக, அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கைக்கு மாறியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

இந்த நிலையில் திண்டிவனம் வந்த சி.பி.ஐ. போலீஸார் தங்களது விசாரணையைத் துரிதப் படுத்தினார்கள். கூலிப் படையைச் சேர்ந்த எட்டு பேரைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமதாஸ், அன்புமணி, சீனுவாசன் ஆகியோரை, சி.பி.ஐ. எந்த நேரமும் கைது செய்யலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், கடந்த 25-ம் தேதி ராமதாஸின் தம்பி சீனுவாசனை திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. கைது செய்து பரபரப்பைக் கூட்டியது. அவருடன், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதியையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அந்த செய்தி பரவியதும், திண்டிவனத்தில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால், திண்டிவனம் பதற்றமானது.

கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை முடிந்து, மாலை சுமார் 4.30 மணியளவில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

''ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டுக்கு கொலை வெறியோடு தாக்குதல் நடத்த வந்தவர்கள்தான். இப்போது கைதாகியிருப்பவர்கள்தான் அந்தக் கும்பலை சி.வி.சண்முகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள். அதிவிரைவில், இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த பெரிய தலைகளும் கைதாகும். ஆளும்கட்சித் தயவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாகத் தப்பித்து வந்தவர்களை இன்று சட்டம் கைது செய்கிறது. விரைவில், முருகானந்தம் கொலைக்குக் காரணமானவர்கள் கைது ஆவார்கள்'' என்கிறார்கள் சி.வி. சண்முகத்தின் விசுவாசிகள்.

இந்தச் சம்பவம் குறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ''சீனுவாசன் பா.ம.க.வைச் சேர்ந்தவர் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கருணாநிதி எனது சகோதரியின் மருமகன் தானே தவிர, அவருக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. வேறு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ''தன்னுடைய வழக்கில் இருந்து தப்பிக்கவே சீனுவாசன் காங்கிரஸில் இணைந்தார்'' என்றும் சொல்கிறார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மருத்துவர் ராமதாஸ் மீது இன்னொரு கொலை முயற்சி வழக்கும் பதிவாகி இருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்குச் சொந்தமான திண்டிவனம், கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிபவர் அரங்க. மாயக்கிருஷ்ணன். இந்தக் கல்லூரி நிர்வாகத்தில், சம்பந்தம் இல்லாமல் பா.ம.க.வினர் தலையிடுவதையும் மாணவர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதையும் இவர் தட்டிக்கேட்டாராம். இதனால், கடந்த 23-ம் தேதி கல்லூரியின் இயக்குநர் அரிய நாராயணன், அவரது உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர், 'நீ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடு. நாளை ஐயா வருகிறார். அவர் வந்தால், நீ உயிருடனே இருக்க மாட்டாய்’ எனக் கூறித் தன்னை அடித்ததாக அன்று இரவே ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் மாயக்கிருஷ்ணன். இந்தப் புகாரில் ராமதாஸையும் அவர் சேர்த்திருக்கிறார்.

இது சம்பந்தமாக, கடந்த 25-ந்தேதி ஒலக்கூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் புகார் குறித்து முழுமையாக விசாரணை நடத்த ஒலக்கூர் போலீசுக்கு, விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸுக்கு, சி.பி.ஐ. ஒரு பக்கம் வலைவிரித்து வரும் இந்த நேரத்தில், அவர்களைத் தமிழக போலீசார் முந்திக்கொள்வார்களோ என்ற பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

பா.ம.க. தரப்பில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வனிடம் பேசினோம். 'உதவிப் பேராசிரியர் அரங்க. மாயக்கிருஷ்ணனின் சொந்த ஊர் பண்ருட்டி. இதுல இருந்தே அந்த வழக்கோட பின்னணியை நீங்க தெரிஞ்சுக்கோங்க. மாணவர்களிடம் வன்முறையையும் தீவிரவாதத் தையும் தூண்டக்கூடிய வகையில் தொடர்ந்து அவர் பேசி வந்தார். இதற்காக ஏற்கனவே பலமுறை அவரை நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தபோது அவரது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து மன்னிப்பு கேட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை மன்னித்தது. இப்போது யாரோ ஒருவரின் தூண்டுதலால் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த உள்ளூர் அமைச்சர் ஒருவர்தான் புகாரில் ஐயாவின் பெயரையும் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

கடந்த ஐந்து நாட்களாக ஐயா கட்சி நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து வெளியூரிலேயே இருந்து வருகிறார். அப்படியிருக்கும் போது ஐயாவின் பெயரை இந்த வழக்கில் சேர்த்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக சேர்த்தார்களா..? மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கருணாநிதியை குற்றவாளியாக சேர்த்தார்களா..? அப்படி இருக்கும் போது எங்கள் மருத்துவர் ஐயாவுக்கு மட்டும் இது என்ன புது சட்டமா..? தமிழ்நாடு முழுக்க எங்கள் சின்ன ஐயாவின் பேச்சுக்குப் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கடுப்பில்தான் இப்படி பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

இந்த நெருக்கடியான சூழலில் 25-ம் தேதி ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, விழுப்புரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குப் போன் செய்து, 'இந்தப் பொய் வழக்கை எதிர்த்து நாம் போராட வேண்டும்'' என்று உத்தரவிட்டாராம். கைது நடவடிக்கைக்கு முன்பே பதற்றத்தை பா.ம.க.வினர் பற்றவைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது!

No comments:

Post a Comment