Wednesday, February 15, 2012

சல்மான் குர்ஷித் தேர்தல் பேச்சு சர்ச்சை: தேர்தல் கமிஷன் முடிவு எப்போது?

புதுடில்லி: உத்தரபிரதேச பிரசாரத்தின் போது, தான் பேசிய பேச்சு உள்நோக்கம் கொண்டது அல்ல என, அமைச்சர் வருத்தம் தெரிவித்து, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தின் மீது, எந்த முடிவும் எடுக்கவில்லை என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று தெரிவித்தாலும், இப்பிரச்னையை தேர்தல் கமிஷன் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என தெரிகிறது.

உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டு பேசுகையில், "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு, 9 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவேன்' என்றார். இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று, பா.ஜ., உட்பட பல கட்சிகளும், கண்டனம் தெரிவித்தன. இருப்பினும், அவர் அதை பொருட்படுத்தாமல், பாருக்காபாத் கூட்டத்தில் பேசுகையில், "தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டாலும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவேன்' என, மீண்டும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. அமைச்சரது இந்த பேச்சு குறித்து, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலையிடவேண்டும் என, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தை ஜனாதிபதி பரிசீலித்து, பிரதமர் மன்மோகனின் பார்வைக்கு அனுப்பினார். இதை அடுத்து, அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் மன்மோகன் சிங் அழைத்து விசாரித்தார். அப்போது, பிரதமரிடம் அமைச்சர் சல்மான் குர்ஷித் தான் பேசியது குறித்து விளக்கமளித்தார்.


இந்நிலையில், அமைச்சரின் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான பேச்சு குறித்து, அலகாபாத்தில் பிரசாரத்தில் இருந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்பாக பேச வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது' என்றார். மேலும், காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும், பொது வாழ்க்கையில் உள்ள விதிமுறைகளை மீறாமல் பேச வேண்டும்' என்றார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தின் போது, நான் பேசிய பேச்சுக்கள் எந்த உள்நோக்கமும் கொண்டது அல்ல. தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு தலை வணங்குகிறேன். துரதிர்ஷ்டவசமாக நான் அவ்வாறு பேசியதற்காக வருந்துகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவே, அவரது கடிதம் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, நேற்று காலை, தலைமை தேர்தல் கமிஷனர் ஒய்.எஸ்.குரேஷி கூறுகையில், "அமைச்சரின் கடிதம் குறித்து, நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அது குறித்து, விரைவில் முடிவெடுப்போம். தற்போது, எங்களுக்கு அதை விட முக்கியமான வேறு பணிகள் உள்ளன' என்றார். அமைச்சரின் கடிதத்தை அடுத்து, தேர்தல் கமிஷன் இப்பிரச்னையை இதோடு முடித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment