Monday, February 20, 2012

இன்று சிவராத்திரியில் எவ்வாறு தரிசனம் செய்ய வேண்டும்?

பிப்ரவரி 20,2012
சம்போ மகாதேவா
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிடவேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.

லிங்கம் உருவான சிவராத்திரி: சிவன் அபிஷேகப் பிரியர். சிவராத்திரியன்று அவருக்கு அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்கிறது. சிவலிங்கம் ஏன் வட்ட வடிவமாக இருக்கிறது தெரியுமா? வட்டமான ஸ்வரூபத்துக்குத் (வடிவம்) தான் அடி முடியில்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது. இது சரியான வட்டமாக இல்லாமல், நீள் வட்டமாக இருக்கிறது. பிரபஞ்சமே நீள் வட்டமாகத் தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டாலும் கிரகங்களின் அயனம் (பாதை) நீள் வட்டமாகத்தான் இருக்கிறது, என்று நம் நவீன விஞ்ஞானம் சொல்வதும், ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ஒற்றுமையாக இருக்கிறது. அன்போடு பக்தி செய்து உருகினால், சிவன் விரைவில் அகப்பட்டு விடுவார். அன்பினால் மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் என்பதால், அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. கேட்ட மாத்திரத்தில் அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல் தான் ஆசுதோஷி. சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்தது (உருவானது) சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில். அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து (உள் வாங்கி) அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதை விட ஆனந்தம் வேறு இல்லை.

No comments:

Post a Comment