Wednesday, February 1, 2012

உனக்குள்ளே நிம்மதி!

தேடுங்கள்; கண்டடைவீர்கள்’ என்பது ஏசுநாதர் வாக்கு.

‘எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா? என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள்.


அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக நிற்கிறது.

பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமனும் வனவாசம் சென்றான்; தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.

கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.

நிம்மதிக் குறைவு என்பது எல்லாருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.

பணக்காரனாயினும், ஏழையாயினும் வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு சக்கரத்தில் காலைக் கொடுத்து விடுகின்றான்; கொஞ்சக் காலம் அவனை வாட்டி எடுக்கிறது.

ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு.
கொஞ்சம் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். அதில் ஒருவகை நிம்மதியுண்டு.

’மெளனம் கலக நாஸ்தி’ என்பார்கள்.

’மெளனம் கலக நாஸ்தி’ என்பார்கள்.

அளந்து பேசி, அளந்து வாழ்கிறவனுக்கு அதிகபட்ச ஆசை கிடையாது.

ஆசை குறையக் குறையத் துன்பமும் குறைந்து போகிறது.

வாழ்க்கை கட்டுக்குள் வந்தால், மனமும் கட்டுக்குள் வந்து விடுகிறது; துன்பமும் கட்டுக்குள் நின்று விடுகிறது.

எதுவும் அளவு கடந்து போகும்போதுதான் ஒரு எதிரொலியைக் கொண்டுவந்து காட்டுகிறது.

இருட்டு-வெளிச்சம், இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும்படி பகவான் கீதையிலே போதித்தான்.

பகலிலே, குருடனுக்கும் கண் தெரியும். ஆனால் இருட்டிலே எவனுக்குக் கண் தெரிகிறதோ அவனே ஞானி.

முதுகு சொரணையற்றுப் போய் எவனுக்கு வலி தெரியாமல் போய் விடுகிறதோ, அவனே நிம்மதியடைந்தவன்.

“உடம்பிலுள்ள எல்லா வாசல்களையும் செம்மையாக அடக்கி, மனத்தை உள்ளேயே நிலை நிறுத்தி, உயிரை அறிவோடு நன்றாக நிலை நாட்டித் தியானத்தைக் கைக்கொண்டு என்னையே நினைத்தவனாய் எவன் தன்னை மறந்து விடுகிறானோ, அவன் பரம்பொருளை அடைகிறான்”” என்கிறான் பகவான் கீதையிலே.

நீங்கள் பரம்பொருளை அடைகிறீர்களோ ,இல்லையோ நிம்மதியை அடைகிறீர்கள்.

பகவத் கீதையிலே, ‘க்ஷேத்திரம்’ பற்றியும் ‘க்ஷேத்திரக்ஞன்’ பற்றியும் பேசப்படுகிறது.arththamulla

‘க்ஷேத்திரம்’ என்பது உடல், ‘க்ஷேத்ரக்ஞன்’ என்பது உயிர்.

எது நிம்மதி இழக்கிறது? க்ஷேத்திரமா? க்ஷேத்ரக்ஞனா?

உடலுக்கு நிம்மதி இல்லையென்றால். மருத்துவன் உண்டு. உயிருக்கு நிம்மதி இல்லையென்றால் நீங்களே மருத்துவர்கள்.

கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த புத்தியும் தலைமுறைக்கு வரமாட்டார்.

இந்த நூலில் கண்டபடி, நீங்கள் நடந்து கொண்டு விட்டாலும் கூட, உங்களை நீங்களே வாதித்துக் கொண்டிருந்தால் நெஞ்சுக்கு நிம்மதி வராது.

ஆன்மாவின் சொரூபத்தை உணர்ந்து. அதன் இயக்கத்திற்கு ஒத்துழைப்பதுதான் தேகம் என்பதை அறிந்து ஒழுங்காக இயங்கினால், நிம்மதி நெஞ்சுக்குள்ளே இருப்பதைக் காணலாம்.

அது ஒன்றும் கடையில் விற்கும் கத்திரிக்காய் அல்ல... வசதியுள்ளவன் வாங்கிக் கொள்வதற்கு!

மீண்டும் சொல்கிறேன், மனசுதான் காரணம்.

ஒன்றைச் ‘சரி’ என்று நினைத்து விட்டால் மனசு நிம்மதியடைகிறது. ‘தவறு’ என்று நினைத்து விட்டால் மனசு தாவிக் குதிக்கிறது.

அதனால்தான் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்கிறார்கள். நல்ல மனைவியின் மேல் சந்தேகப்பட்டே, வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும் உண்டு.

மோசமான மனைவியையே முழுக்க நம்பி, நிம்மதியாக வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துப் புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு; இருநூறு ரூபாய்ச் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.

அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு; சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்துக் கொண்டவர்களும் உண்டு.

மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது.

அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது.

மோசம் என்று தோன்றிவிட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது.

பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற் கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறு கட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

மாறுதல் மனிதன் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி.

‘இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது’ என்று சில சமயங்களில் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம்.

காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே பொருள்.

உலகத்தில் எது தவிர்க்க முடியாதது?

பிறந்த வயிற்றையும் உடன் பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்குரியவை’ என்று.

மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்; தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம்.

மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன?

மனது நம்முடையது; நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் அமைதியாக இருந்து செத்தவர்களல்ல.

இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.

“அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை; அறியாத மானிடர்க்கு அக்கரையில் பச்சை” எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனத்தை எளிமையாக வைத்திருங்கள். கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள். நிரந்தரமான நிம்மதிக்கு ஈஸ்வரனை நாடுங்கள். “நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!”

- கவிஞர் கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்)

No comments:

Post a Comment