Thursday, December 6, 2018

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. nமேலும், இவை இருந்த இடத்தில் இருந்தே பல ஆயிரங்களில் சம்பாதிக்க வைக்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இணையத்தில் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்பு இணையதளங்கள் உள்ளன. இவை வெவ்வேறு வகையான பணிகளை கொண்டுள்ளன. இங்கு ஒரு தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ பதிவு செய்து, தங்களுக்கேற்ற பணிகளை செய்து முடித்து, அதற்கான ஊதியத்தையும் பாதுகாப்பாக பெறக்கூடிய வகையில் தற்போது அனைத்து அம்சங்களுமே ஆன்லைனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பகுதி நேர வேலை
இணையதளங்கள் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும் இந்திய மதிப்பில் ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான ஊதியம் வழங்கக் கூடிய பல நூற்றுக் கணக்கான வேலைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற சில வகையான வேலைகளை மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
பகுதி நேர எழுத்தர் வேலைகள் :
இந்த வகையான ஆன்லைன் வேலைகள் இ-புத்தகம் எழுதுதல், கதை எழுதுதல், டேட்டா என்ட்ரி மற்றும் பல எழுது வேலைகள் வழங்குகின்றன. சாதாரணமாகவே நீங்கள் ஒரு பிளாக் (Blog) இணையம் தொடங்கி சம்பாதிப்பதை விட வளர்ந்த நிறுவனத்தின் கீழ் இவ்வேலையைச் செய்வதன் மூலம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
பகுதி நேரத் தொழில்நுட்ப வேலைகள் :
நீங்கள் தொழில் நுட்பத் துறையை சார்ந்தவராக இருந்தால் அல்லது தொழில் நுட்ப அறிவு இருப்பின் இந்த வேலை உங்களுக்கு தாராளமாகப் பொருந்தும். C, C++, Java, .Net Framework, HTML, Delphi போன்ற கணினி மொழியில் புரோகிராம் எழுதுவதே இப்பணியாகும். இதன் மூலம் ஆன்லைன் வேலை ஒன்றிற்கு ஆரம்பமாகவே ரூ.15 ஆயிரம் வரையில் சம்பாதிக்க முடியும்.
இணையதள (WEBSITE) வடிவமைப்பு :
நீங்கள் இணையதள வடிவமைப்பதில் வல்லவராக இருந்தால் அல்லது அதுகுறித்தான அறிவு உள்ளவராக இருந்தால் இது உங்களுக்கான ஆன்லைன் வேலை தான். இதன் மூலம் கணிசமான தொகையினை பெறலாம்.
லோகோ (LOGO) தயாரித்தல் :
உங்களுக்குக் கணினியில் கிராபிக்ஸ் வடிவமைப்பு, போட்டோ எடிட்டிங் தெரியும் என்றால் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஆன்லைன் வேலையாகும். இதன் மூலம் நீங்கள் வடிவமைக்கும் ஒவ்வொரு லோகோவிற்கும் குறைந்தது ரூ.2 முதல் ரூ.3 ஆயிரம் வரையில் சம்பாதிக்க முடியும்.
பகுதி நேரப் புகைப்பட பணியாளர் :
உங்க கையில் நல்ல புகைப்படக் கருவியும், அதனை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய திறமையும், கற்பனையும் மட்டுமே போதும். ஆயிரம் என்ன உங்களது திறமைமிகு புகைப்படத்திற்கு ஏற்ப லட்சங்களில் கூட சம்பாதிக்கலாம். உங்கள் புகைப்படங்களை விற்பதன் மூலமாகவோ அல்லது அவர்களுக்கான புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதன் மூலமாகவோ ஈசியாகவே இத்துறையில் பணத்தை ஈட்ட முடியும்.
மெய்நிகர (VIRTUAL) உதவியாளர் :
இதன் மூலம் நீங்கள் ஒருவரின் நேர்முக உதவியாளராக வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். அவர்களுக்கான முன்னேற்பாடுகளைச் சரிசெய்தல், அவர்களின் அன்றாட பணிகளை பட்டியலிடுதல், அவர்களின் மின்னஞ்சல்களைப் படித்து அதற்கான பதில்களை அனுப்புதல் போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு உங்களுக்கான வருமானமாக ரூ.500 முதல் ரூ.800 வரையில் சம்பாதிக்கலாம்.
டாப் 5 வேலை வாய்ப்பு இணையதளங்கள்
இங்கே சிறந்த 5 பகுதி நேரப் பணியாளர் இணையதளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்க் கண்ட அனைத்து இணையதளங்களும் பல வருடங்களாக ஆன்லைன் வேலையை வழங்கி வருகிறது. மேலும் பல பகுதி நேரப் பணியாளர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டுள்ளது.
Elance (ஈலேன்ஸ்)
Elance
ஈலேன்ஸ் பகுதி நேரப் பணியாளர் இணையதளம் உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஏராளமான ஆன்லைன் வேலைகள் மற்றும் பணியாளர்களை இது கொண்டுள்ளது. உங்கள் முன்அனுபவங்களை குறித்து ஒரு சுயவிபரம் தயாரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பணியை பெறுவதற்கும் நீங்கள் அந்தப் பணிக்கேற்ற விலையைக் கேட்க முடியும். எனவே நல்ல புரொபைல் மற்றும் குறைந்த விலை கேட்டல் முதலியவை உங்களின் பணி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.
Odesk (ஓடெக்ஸ்)
Odesk
ஈலேன்ஸ் இணையதளத்திற்கு மாற்றாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஓடெக்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இங்கு நீங்கள் Sign Up செய்த முதல் நாளே உங்களுக்கான பணியை பெற முடியும். முதன் முதலில் பணியை தொடங்குபவர் மற்றும் முன் அனுபவமுள்ளவர் என அனைவருக்கும் எண்ணற்ற பணிகளை கொண்டுள்ள ஒடெக்ஸ் இணையதளமானது அதற்கேற்ற பணத்தையும் வழங்குகிறது. இன்றே நீங்கள் இந்த இணையதளத்தில் சேர்ந்து உங்களின் வருமானத்தைத் துவக்கலாம்.
Freelancer (ஃப்ரீலான்சர்) https://www.freelancer.in/
Freelancer
ஃப்ரீலான்சர் இணையதளமானது கடந்த பல வருடங்களாகப் பகுதி நேர வேலைப் பணிகளை இணையத்தில் வழங்கிவருகின்றது. மேலும் இதன் எண்ணற்ற வேலைகள் பல பணியாளர்களைக் கொண்டுள்ளதோடு, பணியாளர்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ளது.
Fiverr (பைவ்வர்) https://www.fiverr.com/
Fiverr
பைவ்வர் இணையதளத்தில் உங்களின் பணிகளை விற்கலாம். ஒவ்வொரு பணியும் கிக்ஸ் எனப்படும். ஒவ்வொரு கிக்ஸ்ம் ரூ.350 மதிப்புடையதாக இருக்க வேண்டும். எந்த வகையான பணிகளையும் நீங்கள் விற்கலாம். உதாரணத்திற்குப் படம் வரைதல், கற்பனையான ஓவியம், லோகோ வடிவமைப்பு, மொழிபெயர்ப்பு, சிறுகதை எழுதுதல் என உங்களது திறமைக்கு ஏற்ப இதில் பணியாற்றலாம்.
Guru (குரு) https://www.guru.com/
Guru
குரு, பகுதி நேரப் பணியாளர் இணையதளமாகப் பிற இணையதளங்களைப் போலவே கடந்த சில வருடங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்லைன் வேலைகள் அனைத்துத் தர பணியாளர்களுக்கும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது. நீங்கள் உங்கள் பணியை தொடர இது உகந்த இணையதளமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Friday, November 30, 2018

காவிரிமைந்தன் என்னும் போலி நடுநிலைவாதி

திரு காவிரிமைந்தன் அவர்களை ஏன் போலி நடுநிலைவாதி என் அழைக்க காரணம் அவர் எப்பொழுதும் குறிப்பிட்ட மதம் சேர்ந்தவர்ளை மட்டும் விமர்சிக்கிறார் நான் அதற்கு பின்னூட்டங்கள் ( கமெண்ட் ) கொடுத்தால் அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை நான் எந்த ஒரு தவறான வார்த்தைகளையே , கீழ்த்தரமான விமர்சனமோ பதிவிடவில்லை , இருந்தாலும் அவர் அவருக்கு  சார்பாக யார் comment (பின்னூட்டங்கள்) பதிவிடுகிறார்களோ அவர்களையும் அவர் சார்ந்த comment மட்டுமே வைத்துக்கொள்கிறார் மற்றவர்களுடைய பின்னூட்டங்கள்     ( கமெண்ட் ) நீக்கி ( delete ) விடுகிறார் . விமர்சனம் என்று தன்னுடைய wordpress.com பெயர் வைத்துக்கொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோழை என்று கூட சொல்லலாம்  .                     திரு காவிரிமைந்தன் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் அனால் அவரை ( அவருடைய பதிவு or எழுத்துக்களை ) யாரும் விமர்சனம்  செய்யக்கூடாது என விரும்புகிறார் . இதை படிப்பர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் வேண்டுமானால் அவருடைய பதிவை விமர்சித்து பாருங்கள் உடனே உங்களுடைய பதிவை நீக்கி விடுவார் , நீங்களே புரிந்துகொள்ளுங்கள் அவரை பற்றி.
நன்றி
s.ஞானசேகரன்

Tuesday, November 13, 2018

STAN LEE - 65 க்கும் மேற்பட்ட கேமியோஸ், பல சூப்பர் ஹீரோக்களின் காட்ஃபாதர்... ஸ்டேன் லீ ஏன் கொண்டாடப்படுகிறார்?

65 க்கும் மேற்பட்ட கேமியோஸ், பல சூப்பர் ஹீரோக்களின் காட்ஃபாதர்... ஸ்டேன் லீ ஏன் கொண்டாடப்படுகிறார்? #StanTheMan

அது ஒரு சூப்பர்ஹீரோ படம். அதிரடி சண்டைக் காட்சிகள், பிரமாண்டமான அரங்க அமைப்புகள், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் எனத் திரையரங்கில் விசிலடித்துக் கொண்டாட நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. இடையில் ஒரு காட்சி. அதில் இப்படிப்பட்ட சமாசாரங்கள் எதுவும் இல்லை. கதைக்குச் சம்பந்தமே இல்லாத உரையாடல்தான் அதில் நிகழ்கிறது. ஆனால், அதை ஒட்டுமொத்த திரையரங்கமும் விசிலடித்துக் கொண்டாடுகிறது. அப்படி என்னதான் இருக்கிறது அந்தக் காட்சியில்? ஒரு வயதான மனிதர் திக்கித் திணறி ஏதோ பேசுகிறார். அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இது ஒரு படம், இரண்டு படங்களில் நடக்கும் விஷயமல்ல. அனைத்து மார்வெல் காமிக்ஸ் சம்பந்தப்பட்ட படங்களிலும் இது தொடர்கிறது. யார் அந்த மனிதர்?
மார்வெல் காமிக்ஸ் வாசித்தவர்களுக்கும், அதன் சூப்பர்ஹீரோ படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் எந்தவித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்காது. சொல்லப்போனால் ``என்னடா இன்னைக்கு சவுண்டு கொஞ்சம் கம்மியில்ல?" என்றுதான் பேசியிருப்பார்கள். காரணம், அவர்களுக்கு எல்லாம் அந்த வயதான மனிதர்தான் சூப்பர்ஹீரோ! அவருக்கு மட்டுமல்ல, மார்வெல்லுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூப்பர்ஹீரோ கதைகளுக்கும் பிதாமகன் அவர். இன்று நாம் கொண்டாடும் ஸ்பைடர்மேன், தி ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், தி ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில், ப்ளாக் பேந்தர், எக்ஸ் மென், ஏன்ட்மேன், அயர்ன்மேன், தோர் என அனைவரும் உருவாக உழைத்த மனிதர் இவர். அவர்தான் #StanTheMan என்று கொண்டாடப்படும் ஸ்டேன் லீ!
Stan The Man
ஸ்டேன் லீ என்று அழைக்கப்படும் இந்த ஸ்டேன்லி மார்ட்டின் லீபர் டிசம்பர் 28, 1922 அன்று பிறந்தார். தன் பதின்பருவம் முதலே கடினமான உழைப்பாளி. அதைவிட முக்கியம் புதிய வேலைகளைத் தேடிச் செல்லும் விநோதர். அப்படி அவர் தேடலுக்குக் கிடைத்தது பெரும்பாலும் பார்ட்-டைம் வேலைகள். ஒரு செய்தித் தொடர்பு நிறுவனத்தில் இரங்கல் செய்திகள் எழுதும் வேலை, தேசிய காசநோய் மையத்தில் செய்திக் குறிப்புகள் வெளியிடும் வேலை, சேன்ட்விச்களை அலுவலகங்களுக்கு டெலிவரி செய்யும் வேலை, டிரவுசர்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் வேலை, புகழ்பெற்ற பிராட்வே நாடகங்களுக்கு டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை, `தி நியூயார்க் ஹெரால்டு ட்ரிப்யூன்' செய்தித்தாளுக்குச் சந்தா பிடித்துக் கொடுக்கும் வேலை எனப் பல களங்களில் பல தளங்களில் பயணித்தார்.
தன் 17-வது வயதில் டைம்லி காமிக்ஸ் நிறுவனம் `வேலைக்கு ஆட்கள் தேவை' என்று விளம்பரம் செய்ததைப் பார்த்துவிட்டு அதன் கதவைத் தட்டினார் ஸ்டேன் லீ. சுவாரஸ்யம் என்னவென்றால் அது ஒரு காமிக்ஸ் நிறுவனம் என்றே ஸ்டேன் லீக்குத் தெரியாது. 1939-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் அசிஸ்டென்ட்டாக இணைகிறார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகள் கீழே இறங்கிச் சென்று மதிய உணவு வாங்கிவருவது, ஓவியர்கள் காமிக்ஸ் பக்கங்களை வரைந்து முடித்தவுடன் வெளியே தெரியும் பென்சில் கோடுகளை ரப்பர் வைத்து அழிப்பது என ஒரு கடைநிலை ஊழியனுக்கான வேலை மட்டுமே. சிறிது நாள்களில் காமிக்ஸின் `ப்ரூஃப் ரீடிங்' வேலை இவருக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு அந்நிறுவனத்தின் ஜோ சைமன் மற்றும் ஜாக் கிர்பி இருவரும் இவரை எடிட் செய்யும் பணியில் அமர்த்துகின்றனர். காமிக்ஸுக்கான `கதை உதவி' வேலைகளைச் செய்கிறார். சில வருடங்களில் காமிக்ஸ் புத்தகங்களுக்குக் கதை எழுதும் அளவுக்கும் அசுர வளர்ச்சி அடைகிறார்.
Stan The Man
1960 களில் டைம்லி காமிக்ஸ் நிறுவனம் `மார்வெல்' காமிக்ஸாக உருவெடுக்கிறது. மார்வெல் காமிக்ஸ் தவிர்த்து வேறுசில காமிக்ஸ் நிறுவனங்களுக்கும் ஸ்டேன் லீ கதை எழுதியிருந்தாலும், 1960களில் மார்வெல் காமிக்ஸின் ஆஸ்தான முகமாகி போயிருந்தார் ஸ்டேன் லீ. அப்போதே மார்வெல் காமிக்ஸின் கதைகளைத் தூக்கிக்கொண்டு பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் கதவைத் தட்டினார். 1966-ம் ஆண்டு வெளிவந்த `தீ மார்வெல் சூப்பர்ஹீரோஸ்' என்ற கார்ட்டூன் தொடர்தான் இவருக்குக் கிடைத்த முதல் வெற்றி. மார்வெல் காமிக்ஸ் கதைகள் புத்தகம் தாண்டி திரையை ஆக்கிரமித்ததும் அப்போதுதான். அதன் பிறகு 1980-களில் இவரின் ஹல்க் கதை முதன்முதலாக லைவ் ஆக்ஷன் டிவி தொடராக வெளியானது. 1989-ம் ஆண்டு அந்தத் தொடரின் `தி ட்ரெயல் ஆப் தி இன்கிரெடிபிள் ஹல்க்' என்ற எபிசோடில்தான் முதன்முதலாக கேமியோ (சிறப்புத் தோற்றம்) வேடத்தில் தோன்றினார். மார்வெல் காமிக்ஸில் எழுத்தாளராக இருந்தவர் அதன் பின், எடிட்டர், தயாரிப்பாளர், பப்ளிஷர், பொறுப்பாசிரியர், தலைவர் எனப் படிப்படியாக முன்னேறி சூப்பர்ஹீரோ உலகில் ஒரு முக்கிய அங்கமாகிப் போனார்.
Stan The Man
மார்வெல் காமிக்ஸ் புத்தகங்கள் தாண்டி டிவி, அனிமேஷன், லைவ் ஆக்ஷன் படங்கள் எனக் களமிறங்கியவுடன் அனைத்திலும் கேமியோ ரோல்களில் தோன்றினார் ஸ்டேன் லீ. 2000த்தின்போது வெளியான எக்ஸ்-மென் படத்தில்தான் முதன்முதலாகத் திரையில் தோன்றினார் ஸ்டேன் லீ. அதன்பிறகு இவர் இல்லாத மார்வெல் படங்களே இல்லை எனலாம். விதவிதமான கதாபாத்திரங்கள், தான் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்களைத் தானே கிண்டலடிக்கும் வசனங்கள் என கேமியோ ரோல்களில் மட்டுமே தோன்றி ஒரு சூப்பர்ஸ்டாராக உருமாறினார். இவருக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. `இந்தப் படத்தில் ஸ்டேன் லீ என்னவாக வருவார்?' என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 
2000த்தின் தொடக்கத்தில் மார்வெல்லின் போட்டி காமிக்ஸ் நிறுவனமான DC காமிக்ஸ் தன்னுடைய சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களை ஸ்டேன் லீ வடிவமைத்தால் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து இவர் உதவியுடனே சில காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. தன் போட்டியாளர்களும் மதிக்கும் அளவுக்கு அவரின் புகழ் இருந்தது. `Excelsior' என்று இவர் உருவாக்கிய ஒரு காமிக்ஸ் சொல் மிகப் பிரபலம். பின்னாளில் அதுவே இவரின் முத்திரையாகிப் போனது. ஸ்டேன் லீ அந்த வார்த்தையைச் சொல்வதை கேட்பதற்கே கூட்டம் கூடும் அளவுக்கு அந்தச் சொல் பிரபலமாகிப் போனது. 
Stan The Man
இன்று வால்ட் டிஸ்னி நிறுவனம் `பிளாக் பேந்தர்' என ஒரு கறுப்பின சூப்பர்ஹீரோவை மையப்படுத்தி பெரும்செலவில் படம் எடுத்ததற்கே நாம் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால், 1960களில் அமெரிக்காவில் சமூக சம உரிமைகளாக கறுப்பின மக்கள் போராடிக் கொண்டிருந்த `Civil Rights Movement'-ன் போதே `பிளாக் பேந்தர்' கதாபாத்திரத்தை ஒரு கறுப்பின சூப்பர்ஹீரோவாக ஜாக் கிர்பியுடன் இணைந்து உருவாக்கினார் ஸ்டேன் லீ! பதின்பருவத்திலிருந்தே உழைக்கும் இந்த மனிதர் தன் 95 வயது வரையும் உழைத்துக் கொண்டேதான் இருந்தார். எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாளில் இவர் அளவுக்குக் கதைகள் எழுதியிருக்க முடியாது. அத்தனை காமிக்ஸ் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் இவர். இத்தனை சாதனைகளைச் செய்தவர் நேற்று தன் 96-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருப்பார். ``நான் உருவாக்கிய கதாபாத்திரங்களை திரையில் பார்க்கையில் நான் ஒரு படைப்பாளியாக நிச்சயம் இருக்க மாட்டேன். அப்போது நான் ரசிகன் மட்டுமே! எல்லோருடனும் சேர்ந்து படத்தைப் பார்த்துவிட்டு இறுதியில் அதைப் பாராட்டவே நான் விரும்புகிறேன். ஒவ்வொருமுறை நான் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்கள் படங்களாக வெற்றி பெறுகையில் என்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால், அதில் நடித்த நடிகர்கள், அதை உருவாக்கிய இயக்குநர்கள் எல்லோருமே அந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள். இது ஒரு கூட்டு முயற்சிதான். நானும் அதில் ஒரு பங்களித்துள்ளேன். அவ்வளவே! இத்தனை வருடங்கள் கடந்தும் அந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய என்னைத் தேடி வந்து பேட்டி எடுக்கிறீர்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். என்னைக் கேட்டால் 100 வருடங்களுக்குப் பிறகு என் பெயரை யாரேனும் கேட்டால், ஒருவேளை என் பெயர் அப்போதும் பேசப்பட்டால், `அவரின் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவை எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தந்தன' என்று மக்கள் பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதுதான் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்பார்க்கும் அங்கீகாரம்!"
Stan The Man
நிச்சயம் உங்களின் கதைகளும் கதாபாத்திரங்களும் பேசப்படும் ஸ்டேன். அப்போது ஒலிக்கும் ஒவ்வொரு கரவொலியும், விசிலும் உங்களுக்கானதுதான்!
பின்குறிப்பு: இனி மார்வெல் படங்களில் ஸ்டேன் லீயின் கேமியோக்களைப் பார்க்கவே முடியாதா என வருத்தம் கொள்ளவேண்டாம். இனி வரப்போகும் மூன்று படங்களுக்கான (கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் 4, ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்) கேமியோ காட்சிகளை முன்னரே ஸ்டேன் லீயை வைத்து எடுத்துவிட்டனர். அந்தப் படங்களில் எல்லாம் அவர் நிச்சயம் தோன்றுவார். நம்மை ரசிக்க வைப்பார்! 

Tuesday, July 4, 2017

கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!


*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

Cine Songs

 இசை மதிப்பீடு:*

*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக் காவியம் என்றால் மிகை ஆகாது.*

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும்
ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.
ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !

அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர்
மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார்

கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் –

தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன்
,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –

இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர்
வேடத்தில் வந்து யாசிக்கிறான்-

அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான்

இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் –

மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில்
பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –

‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘

அருமையான இந்தப் பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!

இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது-

P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-

இது ராக மாலிகை;

முதலில் வருவது – காபி ராகம் ;

பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல்

“மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !

இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில்
வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் !

இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே
எனக்கு தெரியவில்லை .

இந்த பாடல் அமைந்த ராகங்கள் :

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று
மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து
கொண்டிருக்கின்றன இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.....
வஞ்சகன் கண்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன்
கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி
பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை
ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை
பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை
நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி

படித்து மகிழ்ந்தது: கேட்டு மகிழ்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்

Tuesday, February 7, 2017

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?



சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் ஒரு வீடு வாங்க முடிவுசெய்தார் ஒரு நண்பர். வங்கியில் வீட்டுக் கடன் பெற்று அதை வாங்கத் தீர்மானித்தார். ஒவ்வொரு வங்கியிலும் தேர்வுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உண்டு. வங்கிக் கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் வீட்டுக் கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும்.
வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்வதற்குமுன் தற்செயலாக என் வீட்டுக்கு அந்த ஆவணங்களுடன் வந்திருந்தார் அந்த நண்பர். அவற்றை வாங்கிப் பார்த்த நான், “இவை நகல்கள்தானே. அசல் இல்லையே!’’ என்றேன். “நானும் கட்டுநரிடம் கேட்டேன். ‘ஒரிஜினல் ஆவணங்களைத் தருவது எங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. தவிர இந்த நிலத்தில் 32 வீடுகளைக் கட்டப் போகிறோம். அவ்வளவு பேருக்கும் நாங்கள் அசல் ஆவணங்களைத் தர முடியாது’ என்று சொல்லி விட்டார்” என்றார் நண்பர்.
அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வழக்கறிஞர் சான்றிதழ் கொடுக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இரண்டே நாட்களில் நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல். வழக்கறிஞர் ‘க்ளியர்’ செய்துவிட்டாராம். அதாவது நகல் ஆவணங்களைப் பார்த்தே தன் பரிந்துரையை அவர் அளித்திருக்கிறார்.
நகல் அசலாகுமா?
இந்தப் போக்கு அதிகமாகிவருகிறது என்பதைக் காண முடிகிறது. வங்கி எதற்காக இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை யோசியுங்கள். ‘சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். இதற்காகத்தான் வங்கிகள் ‘வழக்கறிஞர் கருத்து’ (Lawyer’s opinion) என்பதைப் பெறுகிறது. அதுவும் திறமையான அனுபவமுள்ள வழக்கறிஞர்களைத்தான் இந்தக் குழுவில் வங்கி சேர்த்துக் கொள்ளும்.
வழக்கறிஞருக்கு சில ஆயிரங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக் கடன் பெறவில்லை என்றால்கூட நீங்களாகவே கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வழக்கறிஞரின் மூலம் அந்த ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஆனால் இப்போதெல்லாம் ஆவண நகல்களை மட்டும் சரிபார்ப்பது என்பது வழக்கமாகி வருகிறது. இது ஆபத்தான ஒரு பழக்கம். கட்டுநருக்கு அவர் தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதும் இயல்புதான். எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் உங்களை நம்பி அவர் எப்படி அசல் ஆவணங்களைக் கொடுப்பார்? அதே சமயம் உங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் அதற்கு முன்பாக அந்த ஆவணங்களின் நம்பகத் தன்மையை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
இந்த இரண்டு எதிர்கோணங்களையும் சந்திக்க வைக்கும் புள்ளி ஒன்று உண்டு. என் நண்பருக்கு நான் கூறிய ஆலோசனை இது. (இந்த வழிமுறையை நானும் முன்பு பின்பற்றி இருக்கிறேன்).
ஒரு மாற்று யோசனை
வழக்கறிஞரே நேரடியாகக் கட்டுநரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். இதற்கு கட்டுநர் மறுப்பு சொல்ல மாட்டார். (கூடவே அவரும் உட்கார்ந்து கொண்டிருப்பார், அவ்வளவுதான்).
ஆனால் இதில் ஒரு சங்கடம் உண்டு. அதிகமாக அலுவல்கள் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு உடன்பட மறுக்கலாம். அல்லது இதற்கான நாளை தள்ளிப்போட்டுக் கொண்டடே செல்லலாம். அதற்கான தீர்வு இது. நீங்கள் அளிக்கும் நகல் ஆவணங்களை அந்த சீனியர் வழக்கறிஞர் தனது இருப்பிடத்திலேயே சரிபார்க்கட்டும். பில்டரின் அலுவலகத்துக்கு அவர் தன் ஜூனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாம். அந்த ஜூனியரின் முக்கிய வேலை அந்த நகல் உண்மையான நகல்தானா என்பதை அசலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.
பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறைக்கும் வழக்கறிஞர் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதுதான் நல்லது. அல்லது குறைந்தபட்சமாக அந்த ஜூனியர் வழக்கறிஞருக்குப் பதிலாக நீங்களே கட்டுநரின் அலுவலகத்துக்குச் சென்று அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுங்கள்.
நகல்களில் எந்தவித ஏமாற்று வேலைகள் பொதுவாக நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கலாம். கையெழுத்தில் இது நடைபெற வாய்ப்பு உண்டு.
பிரச்சினைகள் என்னென்ன?
இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வீட்டின் உரிமையாளர் யாருக்குமே ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுக்காத போதும் மோசடிக்காரர் ஒரு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணத்தை முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து அதற்குக் கீழே வேறொரு இடத்திலிருந்து உரிமையாளரின் கையெழுத்தை அந்த ஆவணத்தில் நகல் செய்யலாம்.
அசல் ஆவணத்தைப் பார்த்தாலே இந்த வித்தியாசம் புரிந்துவிடும். ஆனால் அதன் நகலைப் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் போகலாம். (ஒரு சின்ன குறிப்பு: இதுபோன்ற நகல்களில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட கையெழுத்து கொஞ்சம் மங்கலாகத் தெரியும். அதைக் கொண்டு ஓரளவு அது மோசடி ஆவணம் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பிரிண்டர் செட்டிங்கை மாறுதல் செய்து இப்படி ஒட்டப்பட்ட கையெழுத்தும் தெளிவாகவே இருக்கும்படி மோசடி மன்னர்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்).
எனவே மீண்டும் நாம் கூறுவது இதைத்தான். அசல் ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஒருபோதும் எந்தச் சொத்தையும் வாங்காதீர்கள்.

Tuesday, January 17, 2017

நிலம் வாங்கும் முன்...



நிலத்தில் முதலீடு செய்வது என்பது மற்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக வருமானம் ஈட்டித் தரும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் நிலத்தில் முதலீடு செய்யும் முன் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. தாய்ப் பத்திரம் கடந்த 30 ஆண்டுகளுக்குச் சரி பார்க்கப்பட வேண்டும்.
2. தற்போது உரிமையாளாரின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் தற்போதைய விற்பனையாளரின் பெயரில் பட்டா உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்தப் பட்டாவை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.
3. நில அளவைப் படங்கள் (Field Measurement Book FMB) சரிபார்க்கப்பட வேண்டும்.
4. நில உபயோக வரைபடத்தை (Land Use Maps) ஆன்லைன் மூலம் சரிபார்க்க வேண்டும். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கீழ் உள்ள அனைத்து கிராமங்களிலும் நில உபயோக வரைபடம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இதில் குடியிருப்புப் பகுதிகளில் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அங்கு வணிகம் அல்லது தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
5. நிலம் அங்கீகரிக்கப்பட்ட மனையில் உள்ளது என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நகர ஊரமைப்புத் திட்ட இயக்ககம் (DTCP) அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்க வேண்டும். பஞ்சாயத்துத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்கக் கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டைப் பொருத்த வரை வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துத் தலைவருக்கு இல்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் (இச்சேவை சிஎம்டிஏவின் இணையதளத்தில் 2000-ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அதே டிடிசிபியால் கடந்த 5-6 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
6. அங்கீகரிக்கப்பட்ட மனையின் நிபந்தனை ஏதேனும் இருந்தால் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும்.
7. உயரழுத்த மின் கம்பிகள் மனையின் மேல் இருக்கக் கூடாது.
8. மனை வாங்கும் முன் அந்த மனையின் மீது அரசாங்கத்திடமிருந்து கட்டுபாடுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அரசாங்கத்தால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்படும். அந்த நிலத்தில் இச்சமுதாயத்தைச் சார்ந்தவரைத் தவிர வேறு எவருக்கும் சம்பந்தப்பட்ட நிலங்களை பயனாளி விற்கக் கூடாது போன்ற சில நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
9. 2,500 சதுர மீட்டருக்கு மேல் (26,900 சதுர அடி) அங்கீகரிக்கப்பட்ட மனை இருப்பின் 10 சதவீத நிலத்தைத் திறந்த வெளி இட ஒதுக்கீடு (Open Space Reservation-OSR) ஒதுக்க வேண்டும். இந்த இடத்தை தானப் பத்திரம் மூலம் அரசுக்குப் பதிவு செய்ய வேண்டும். 10,000 சதுர மீட்டர்க்கு மேல் (1,07600 சதுர அடி) அங்கீகரிக்கப்பட்ட மனை இருப்பின் (சாலையைத் தவிர்த்து) பொதுச் சேவைகளுக்குக் (கல்விக் கட்டிடம், தபால் நிலையம், காவல் நிலையம், பூங்கா) ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் 10 சதவிகித நிலத்தைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருவேளை ஒதுக்கீடு செய்ய முடியாவிட்டால் அந்த 10 சதவீத நிலத்தை நில அமைப்பில் இருந்து 5 கீ.மி. சுற்றளவை உள்ள இடத்தில் அரசாங்கத்திற்குத் தானமாக வழங்க வேண்டும்.
10. நில உரிமையாளாரின் பெயரில் நில வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும் (சென்னையைப் பொறுத்தவரை 4,800 சதுர அடிக்கு மேல் இருக்கும் நிலங்களுக்கு மட்டும் நில வரி வசூலிக்கப்படுகிறது).
11. ஒரு வேளை நில உரிமையாளர் பவர் பத்திரம் மூலம் முகவருக்குச் சில அதிகாரம் வழங்கியிருந்தால் அந்த அதிகாரம் நிலுவையில் உள்ளதா மற்றும் முதன்மையாளர் (நில உரிமையாளர்) உயிருடன்தான் உள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து விற்பனையாளர் நகல் ஆவணப் பத்திரம் (Copy Document)) விண்ணப்பித்துப் பெற வேண்டும். மேலும் அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளர் ஆவணத்துடன் சரிபார்க்க வேண்டும். இவ்வாறாகச் செய்தால் மட்டுமே விற்பனையாளாரின் பத்திரத்தின் அசல் தன்மையை உறுதி செய்ய முடியும்.
12. நிலங்களின் அளவீடு பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். (நிலத்தைச் சரியாக அளக்க வேண்டும்).
13. நிலத்தின் வழிகாட்டு மதிப்பு (Guidline Value) என்னவென்று பத்திரப் பதிவு இணையதளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்புக்கு முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
14. கடந்த 30 ஆண்டுகளுக்கான சொத்தின் வில்லங்கச் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும். சொத்தின் மேல் எந்த ஒரு வில்லங்கமோ அல்லது நீதிமன்ற ஆணையின் இணைப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் விவரங்கள் சரிபார்க்க வேண்டும் (இச்சேவை தற்போது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஜார்க்கண்டில் மட்டும்தான் உள்ளது).

Monday, January 2, 2017

சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?

புதிதாக சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவி, மானியம் பற்றிய தகவல்களைக் கூறுகிறார் சென்னை எம்.எஸ்.எம்.இ (MSME- Ministry of Micro, Small & Medium Enterprises) வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநரான புனிதவதி.
புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு புதிதாக இயந்திர – தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க அரசு மூன்று திட்டங்களில் கடனுதவி வழங்க உதவி செய்வதுடன், அவற்றில் 25 சதவிகித தொகையை மானியமாகவும் வழங்குகிறது.
1. வேலை இல்லாதோருக்கு வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
2. பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு http://bit.ly/2aCchF8 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3. புதிய சுயதொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  

* முதலில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், தொழிற்சாலை அமைக்கும் இடம், தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்ல திட்டமிட்ட பிளான் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தொழில் தொடங்கவிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள வங்கியில் வழங்க வேண்டும். திட்ட அறிக்கையை  வங்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தப் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட தொழில் மையத்தில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
முதல் திட்டத்துக்கு மட்டும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். பின்னர் அம்மையத்தினரால், விண்ணப்பதாரர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார். தொடர்ந்து மேற்கண்ட மூன்று திட்டங்களில் உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வுசெய்து, உங்களுக்கு கடனுதவி செய்யலாம் என நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு சிபாரிசு செய்வார்கள். தொடர்ந்து வங்கியில் கடனுதவி பெறலாம்.

* எம்.எஸ்.எம்.இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் சுயதொழில் செய்வ தற்கான ஒரு நாள், ஒரு வாரத்துக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவும் கட்டண முறையிலும் நடத்தப்படுகின்றன. இதில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், அதை வெற்றிகரமாகச் செய்வது, மார்க்கெட்டிங், லோன் பெறும் வழிமுறைகள் உள்பட சுயதொழில் பயிற்சியாக அளிக்கப்படும். குறிப்பாக dcmsme.gov.in இணையதளத்தில் சுயதொழில் தொடர்பான தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சி நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியிடப்படும். உள்நாட்டில், வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு செல்லும் பெண் சுயதொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கு ஆகும் பயணச் செலவில் 80-100 சதவிகிதத்தொகை மானியமாகக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை mahilaehaat-rmk.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக டிஸ்ப்ளே செய்யலாம்.
* சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுக்கான துறையை சரியாகத் தேர்தெடுத்து தங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என பலமுறை யோசித்து, அதற்கு ஏதாவது தடை இருந்தால் சரிசெய்ய வேண்டும். பின்னர் தாங்கள் தயாரிக்க உள்ள பொருளின் தேவை, போட்டியாளர்கள், அதனை எந்த வழிகளில் விற்பனை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே, புதிய தொழிலைத் தொடங்க வேண்டும். உற்பத்திப் பொருளை சிறிய அளவில் அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்து பார்த்தாலே, சாதக பாதக அம்சங்கள் ஓரளவு தெரிந்துவிடும். பின்னர் அதனை மெருகூட்டி, மேம்படுத்தி தொழில் தொடங் கலாம். சுயதொழில் செய்யும் பலருக்கும் மார்க் கெட்டிங் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. தரமான பொருளை உற்பத்தி செய்து விற்கத் தெரியாமல் இருப்பவர்களும், மட்டமான பொருளை உற்பத்தி செய்து நன்றாக மார்க்கெட்டிங் செய்பவர்களும் கூட இருக்கிறார்கள். நம் பொருள் தரமாக இருப்பதுடன் அதனை எந்தெந்த வழிகளில் எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ, அந்த யுக்திகளைக் கையாளுவது பலன் கொடுக்கும். பணம் கொடுத்து மீடியாக்களில் விளம்பரம் செய்வது ஒரு ரகம். தரமான பொருட்களை விற்பனை செய்வதால் ஒரு வாடிக்கையாளர் மூலமாக அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் கிடைப்பது மற்றொரு ரகம். கால மாற்றத்துக்கு ஏற்ப நம் பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வதும் அவசியத்தேவை.

* சுயதொழில் தொடங்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், தொடங்கிய வுடன் ஒருமுறை முறைகூட நெகடிவாக யோசிக்கக் கூடாது. சுயதொழில் செய்தால் ஏற்ற இறக்கம் கட்டாயம் வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் லாபத்தை நோக்கிய பாதையில் செல்ல வேண்டும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் புனிதவதி.

Thursday, July 28, 2016

ஐயோ பாவம், ஆணின் வலிகள்!




ஐயோ பாவம், ஆணின் வலிகள்!

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது...

"டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரியுதா?"

ப்ளஸ்1 போகும்போது....

"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ஏதாவது ஒர்க்ஷாப்தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல.. 2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்... ச்சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்... ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு. உசிரோட இருந்து பிரயோஜனமில்ல. அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.

" பொட்டை புள்ளைன்னா பரவால்ல. கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம். நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும். வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும். எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்.. எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து.. இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக்கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு... உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும் சமாளித்து....கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ.. சீக்கிரம்  ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."

இங்கேதான் தொடங்குகிறது.. ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...திருமணம் நடந்து மனைவியிடம் அன்பாக நடந்து கொண்டால் "அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்" என்று குடும்பத்தினரிடமும் அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்...." ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு... இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்  தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்" என்று பெண்டாட்டியிடமிருந்து  புறப்படும்  ஒரு உத்தரவு....

வேலை இடத்தில் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது. வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் . பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும் என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல், மனைவி பேச்சையும் தட்ட முடியாமல் இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து இரண்டுபக்கமும் கெட்ட பெயர்  வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில் 'சிடுமூஞ்சி'யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும். குடும்பத்தில் விசேஷம் என்றால் மனைவிமக்களுக்கு நல்லதாய் தேடித்தேடிக் துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிளை தனக்கு 'பை ஒன் கெட் டூ' என டிஸ்கௌன்ட்டிற்கு அலைவான். தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்  நல்லபடியாக செய்து.. உறவு நட்பில் வரும்.... கல்யாணம் கருமாதிக்கு மொய்யெழத பொய்சொல்லிக் கடன் வாங்கி,, வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?

"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல... இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக ஒரு வீடு வாங்கினாலோ? கார் வாங்கினாலோ? அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்... "ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க.. எனக்கும் வாச்சுதே ஒன்னு...  அரைக்காசுக்கு பொறாத மனுசன்... எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.." என்கிற பிலாக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்...'பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'
கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... 'பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா? எப்பப்  பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து அதை பார்க்கும் நிலை வந்தால் பெண்களுக்கு அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.
'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா? என்னால முடியாது பீ மூத்திரம் வழிக்க...உந்தம்பிய பாக்கச் சொல்லு..'

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான், பழிதான், தூசனயும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.
ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள் அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்
 ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
 ஒரு ஆணுக்கு எந்தக் பெருமையும் இல்லை. எந்தப்புகழும் இல்லை. புகழ் வேண்டாம்,  பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்

"நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு.. இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி.. என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் பதினாறு வயது வரைதான் அதன்பிறகு அவன் சாகும்வரையிலும் "கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்."

எல்லா ஆண்களுமே இப்படித்தான் என்று நான் அடாவடி பேசவில்லை. பெருவாரியா நல்ல ஆண்களின் நிலைதான் இது! குடிகார்கள், பொறுப்பற்றவர்களும் இருக்கிறார்கள். நான் பேசியது பொறுப்புள்ள நல்ல ஆண்களைப் பற்றித்தான்.!

விதிவிலக்குகள் ஆண்களிலும், பெண்களிலும் இருபாலரிடத்தும் உண்டு

Monday, March 14, 2016

கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் 
பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த 
வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. 
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்  கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா 
உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை 
நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு  விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப்  போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க 
ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க  அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து 
மகனே..!!

எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது?

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.

பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.

உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.

கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
 (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்
வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம்  ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)