Thursday, January 19, 2012

ராவணனை சிக்க வைப்பாரா மகேஸ்வரன்?

கோவை, கவுண்டம்பாளையத்தில் இருக்கிறது தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான மொத்த விற்பனைக் கிடங்கு. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மண்டலத்தின் மேலாளர் மகேஸ்வரன். கடந்த 10-ம் தேதி இந்த அலுவலகத்துக்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், கணக்கில் வராத 3.5 லட்சப் பணத்தைக் கைப்பற்றினார்கள். மகேஸ்வரனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தத் தகவல் தெரிந்ததும், நான்கு மாவட்டங் களிலும் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள். அப்படி என்ன சந்தோஷம்?
''கடந்த தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மேனேஜராக இருந்த மகேஸ்வரன், ஊழியர் களுக்கு ஏகப்பட்ட டார்ச்சர்களைக் கொடுத்தார். அதனால் பலரும் புகார் கொடுத்த காரணத்தால், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவல கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், சசிகலா உறவினரான ராவணனை சந்தித்து... பதவி உயர்வு பெற்று மண்டல டாஸ்மாக் மேலாளர் பதவிக்கு வந்துவிட்டார். இந்த ஏழு மாதங்களில் அவர் பெரும் ஆட்டம் போட்டு விட்டார். நான்கு மாவட்டங்களிலும் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்
கடையில் இருந்தும் 3,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை மாதந்தோறும் அவருக்கு மாமூல் கொடுத்தே ஆகணும். மாமூல் வசூல் செய்து கொடுக்காத அதிகாரிகளை, ரெவின்யூ மீட்டிங்கில் வெளிப்படையாகவே திட்டுவார்.


எந்தக் கடையிலாவது மாமூல் பிரச்னை இருந்தால்... அந்தக் கடைக்குப் போய், 'கடை சுத்தமா இல்லை, ஒட்டடை இருக்குது. பில் போடலை’ன்னு உப்புச் சப்பில்லாத காரணங்களைக் காட்டி வேலையை விட்டே ஊழியர்களைத் தூக்கிவிடுவார். அவரை யாரும் எதிர்த்துக் கேட்க முடியாமத்தான் வேலை பார்த் தோம். இதுவரைக்கும் அவரைப்பத்தி ஏராளமான புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போ, கட்சியை விட்டு ராவணனை, அம்மா வெளியேற்றிய பிறகுதான்... எங்கள் புகாருக்கு நியாயம் கிடைச்சிருக்கு'' என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
கோவை மாவட்ட டாஸ்மாக் பணியாளர் (சி.ஐ.டி.யு.) சங்கச் செயலாளரான ஜான் ஆண்டனிராஜ், ''டாஸ்மாக் ஊழியர்கள் யாருக்கும் பணிநிரந்தரம் கிடையாது. இதைக் காரணமாக வச்சிக்கிட்டுத்தான் மகேஸ்வரன் எல்லோரையும் மிரட்டிட்டு இருந்தார். குடோன்ல இருந்து வர்ற லோடுகளை கடையில் இறக்கத் தனியா ஆள் கிடையாது. வேலை செய்றவங்கதான் ஆட்களைப் பிடிச்சு இறக்கணும். அதுக்கும் கூலி கொடுக்க மாட்டாங்க. பாட்டில்களில் இருக்கும் டேமேஜும் எங்க தலையில்தான் விடியும். கடையோட மின்சார பில் முழுசாக் கொடுக்க மாட்டாங்க. அதையும் நாங்கதான் கட்டணும். போலீஸ்ல இருந்து மண்டல மேலாளர் வரைக்கும் மாமூல் கொடுக்கவும் வேண்டியிருக்கு. இதுக்கெல்லாம் பணத்துக்கு நாங்க எங்க போறது?


இவை தவிர, ஒரு கடையில் இருந்து இன்னொரு கடைக்கு டிரான்ஃஸ்பர் போடுறதுக்கு பல லட்சங்களைப் பிடுங்கிடுவார். மக்கள் விரும்பாத சில சரக்குகளைத்தான் அதிகப்படியா அனுப்புவார். நாங்க சொன்னாலும் கேட்க மாட்டார். இப்போ இந்தப் பிரச்னை மொத்தமாத் தீர்ந்துடுச்சி. அதான் எங்க ஆளுங்க சந்தோஷப்படுறாங்க.

டாஸ்மாக் கடையில் வேலை பார்ப்பதால், எங்களுக்குப் பொண்ணு கொடுக்கக்கூட யோசிக்கிறாங்க. எங்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையா சம்பளம் கொடுக்கணும். முதல்வர், எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யணும்'' என்றார்.

மகேஸ்வரனின் வழக்கறிஞர் ஏ.பி.குமாரிடம் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினோம். 'திட்டம் போட்டு மகேஸ்வரனை இந்த வழக்கில் சிக்க வெச்சிருக்காங்க. அவர் மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மையில்லை. அதை நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்'' என்று சொன்னார்.

மகேஸ்வரனின் பினாமிகள் சிலரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினார் களாம். அதில், மகேஸ்வரனே பல இடங்களில் பினாமிகள் பெயரில் பார் நடத்தி வந்ததும் தெரிய வந்திருக்கிறதாம். மகேஸ்வரன் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்? அவருக்கும் ராவணனுக்கும் என்ன தொடர்பு? ராவணனின் பணம் மகேஸ்வரனிடம் இருக்கிறதா? என்ற ரீதியிலும் விசாரணை விரிவடைகிறதாம்.

மகேஸ்வரனை அப்ரூவராக மாற்றி... ராவணனை வளைத்துப்பிடிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் காதைக் கடிக்கிறார்கள்!

No comments:

Post a Comment