Wednesday, January 11, 2012

இரவினில் ஆட்டம்! -இளசுகள் தடுமாற்றம்!

எரிச்சநத்தம் என்ற குக்கிராமத்தில் அது ஒரு பெட்டிக்கடை சலூன். நியூஸ் பேப்பர் வாங்கிப் போட்டிருந்தார் கடைக்காரர். அந்த ஒரு பேப்பரைப் படிக்க மூன்று பேருக்கிடையே போட்டா போட்டி. ஒரு வரி படிப்பார்கள் பத்து வார்த்தை பேசுவார்கள். அவர்களின் காலைப் பொழுது இப்படிப் போய்க் கொண்டிருக்க.. அந்தக் கடையின் ஒரே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த நபர் தனக்கு முடி வெட்டியதில் திருப்தி அடையாதவராக குறை சொல்லிக் கொண்டிருந்தார்.

புறப்படும்போது ""இப்பல்லாம் நீ முன்ன மாதிரி இல்ல.. கால் நகம் வளர்ந்திருக்கா.. கை நகம் வளர்ந்திருக்கான்னு அக்கறையா பார்த்து வெட்டி விட்ட காலமெல்லாம் மலையேறிப் போச்சு.. என்ன செய்யிறது? டவுன் கணக்கா இங்கயும் எல்லாச் சாதியும் ஒண்ணாயிப் போச்சுல்ல.. சரிப்பா.. கொஞ்சம் நகத்த வெட்டி விடு...''’என்றார். இதைக் கேட்ட அந்த மூவரில் ஒருவர் நியூஸ் பேப்பர் மீதிருந்த பார்வையை நகம் வெட்டியவர் மீது திருப்பினார்.

""நம்ம ஊருலதான்ணே நகம் வெட்டிக்கிறது ஓசி.. மெட்ராஸ்ல எங்க முதலாளிக்கு கார் ஓட்டிட்டுப் போனேன்.. அவரு தங்கினது ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல.. அவரு இருந்த சூட்டுக்கு ஒரு நாள் வாடகை 40,000 ரூபாய்ன்னாரு.. பொய்யோ நெசமோ.. யாரு கண்டா? நான் ஒருத்தன் தேவையில்லாதத பேசிக்கிட்டிருக்கேன்.. அந்த ஓட்டல்ல கை, கால் நகம் வெட்டிக்க பீஸு எவ்வளவு தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட.. 1650 ரூபாய் பில் போடுறான்.. எங்க முதலாளி ஒரு ரெண்டாயிரத்த நீட்டிட்டு மிச்சத்த டிப்ஸா வச்சுக்கன்னு சொல்லிட்டாரு.. நகம் வெட்ட ரெண்டாயிரம் வாங்கிறவன் மெட்ராஸ்ல இருக்கான்.. இவன்பாரு உனக்கு ஓசில வெட்டிட்டிருக்கான்.. நேரம் காலத்தப் பத்தி பேசுனில்ல.. இவன் நேரம் இப்படியிருக்கு..''’என்றார் அந்த டிரைவர்.

“வேற என்னென்னத்த அங்க பாத்த..?’""சாதி ஒன்றாகி விட்ட கவலையை மறந்து அத்தனை ஆர்வமாகக் கேட்டார் முடியையும் நகத்தையும் வெட்டிக்கொண்ட நபர். ""இப்ப புது வருஷம் பொறக்குது.. அந்த கிளப்ல டான்ஸு.. இந்த ஓட்டல்ல கும்மாளம்ன்னு பேச்சு கிளம்பிக்கிட்டிருக்கு.. போலீஸ் கெடுபிடி பண்ணும்னு டி.வி.ல செய்தி வாசிக் கிறான்.. அதப் பத்திச் சொல்லுறேன்.. கேளு.. நான் பார்த்த அந்தப் பெரிய ஓட்டல்லயும் ராக் டான்ஸு.. டப்ளின் டான்ஸுன்னு நடத்து றானுவ.. நாமள்லாம் அம்புட்டு சுளுவா உள்ள போயிற முடியாது. ரெண்டு மணி நேரத் துக்கு ஐநூறுங்கிறான். அங்க அவனவன் கூட் டிட்டு வர்றான்ல.. சத்தியமா அவ பொண்டாட்டியா இருக்க மாட் டா.. எவளயோ ஒருத்திய இழுத் திட்டு வந்தாத் தான் அங்க உள்ள போக விடுவானுவ.. கால்ல ஷூ இல் லைன்னாலும் வெளிய நிப்பாட்டிருவானுவ.. எவ எவளயோ கட் டிப் பிடிச்சு ஆடுற துக்கு.. யானை விலை, குதிரை விலைன்னு வச்சி விக்கிற சரக்க உள்ள தள்ளி போதை ஏத்திக்கிர்றதுக்குத்தான் இத்தனை ரூல்ஸ் வச்சிருக்கானுவ.. கொடு மைடா சாமி...''’’என்றார் அந்த டிரைவர்.

‘என்ன கொடுமை அது?’ நேரில் பார்த்து எழுத சென்னையில் ஓரளவு செல்வாக்கான நண்பர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்னையில் இருக்கின்ற அந்த ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் இரவு 8 மணிக்கே ஆஜரானோம். அது முற்றிலும் வேறு உலகமாக இருந்தது. யாரோ ஒரு சினிமா தயாரிப்பாளரின் பேரனுக்கு பிறந்த நாளாம். 13-வது தளத்தில் அங்கே பார்ட்டி நடந்தது. ஏகப்பட்ட சினிமா நடிகர், நடிகைகள் நம்மை ‘க்ராஸ்’ பண்ணினார்கள். டப்ளின் ஆட்டம் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிந்து விடும் என்றார்கள். பெண் துணை இல்லாமல் ‘என்ட்ரி’ ஆக முடியாது என்பதில் கறாராக இருந்தார்கள். துணைக்கு யாரை அழைக்கலாம் என்று அந்த நண்பர் தேடுதலில் இறங்கினார்.

ஆட்டோக்களிலிருந்து இறங்கி வந்த அந்த இளம் பெண்கள் நிச்சயம் நடுத்தர வகுப்பின ராகத்தான் இருக்க முடியும். ஆனால்.. அவர்கள் அணிந்திருந்த உடையோ.. நாம் சினிமாக்களில் கூட அத்தனை கவர்ச்சியாக பார்த்திருக்க முடியாது.. அந்த அளவுக்கு உடலின் பெரும் பகுதியை உரித்துக் காட்டுகின்ற காஸ்ட்லி காஸ்ட்யூம். ஒரு கோடி.. ஒன்றரை கோடி விலை மதிப்புள்ள லம்போர்ஜினி, பி.எம்.டபிள்யூ. ஆடி, வல்வோ என தினுசு தினுசான கார்களில் வந்திறங்கிய இளைஞர்களுக்காக உள்ளே லவுஞ்சில் காத்திருந்தார்கள் இந்த ஆட்டோ பெண்கள். சில பெண்களோ அங்குமிங்கும் நடந்தபடியே "“ஐ அம் வெயிட்டிங் டியர்...'’என்று செல்போனில் சிணுங்கிக் கொண்டிருந்தார்கள். தப்பித்தவறி ஒரு வார்த்தை கூட அவர்கள் தமிழில் பேசவில்லை. அவரவர் ஆள் வந்தவுடன் இடுப்பில் கை போட்டுக் கொண்டு டப்ளினுக்குள் நுழைந்தார்கள். நமது நண்பரும் ‘எப்படியோ’ இருவரை மடக்கி, அவர் களின் துணையுடன் நம்மை உள்ளே நுழையச் செய்தார்.

உள்ளே நுரை வழிந்த பீர் பாட்டில்கள்.. மதுக் கோப்பைகளுடன் அரை மயக்கத்தில் இருந்த பெண்கள், ஒவ்வொரு சிப்புக்கு இடையில், சிகரெட்டை ஊதித் தள்ளுவதில் ‘சமத்துவம்’ காணத் துடித்தார்கள். பெரிய பெரிய ஸ்பீக்கர் களில் காட்டுக் கத்தலாக இசை.. இருட்டுக்குள் அவ்வப்போது பல்வேறு வண்ணங்களில் பாய்ச்சப்படும் ஒளி வெள்ளம் என அந்தச் சூழல் அவர்களை நன்றாகவே ஆட்டுவித்தது. வந்த ஜோடியுடன்தான் ஆட்டம் என்றில்லை.. வலையில் விழுவது யாராக இருந்தாலும் ஓ.கே.தான் என்று பாரபட்சமில்லாமல் கூடி ஆடினார்கள்.

இசைக்கப்படும் ஆங்கில ஆல்பத்தின் வரிகள் அவர்களுக்கு அத்தனை மனப்பாடம் போல.. தேசிய கீதம் ரேஞ்சுக்கு எல்லோரும் ஒரே குரலில் பாடினார்கள் ஆட்டத்திலும் குறை வைக்காமல்.. ஒய் திஸ் கொலை வெறிடிக்கு அப்படி ஒரு ரெஸ்பான்ஸ்.. ஓரிரு வினாடிகள் மட்டுமே ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடிந்த பளிச்சென்ற ஒளி வெள்ளம் அவ்வப்போது மின்னி மறைகின்ற வேளையில் அவர்கள் போடும் சத்தம் இருக்கிறதே.. படிக்காத கிராமத்தான் தோற்று விடுவான்.. அடி வயிற்றிலிருந்து அப்படி ஒரு கூச்சல்.. யார் கை யார் மீது எந்த இடத்தில் பட்டாலும்.. இல்லை தொட்டாலும் ஸாரி..’’சொல்வது கூட அங்கே அவசியமில்லாத ஒன்றுதான்.. அத்தகையவர் களை முறைத்துப் பார்த்து மூடை கெடுத்துக் கொள்கின்ற மனநிலையில் யாரும் இல்லை. ஆனாலும், ஆடும் அரங்கில் மட்டும் யாரும் பெரிதாக அத்து மீறிவிடக் கூடாது என்று கண்காணித்தபடியே இருந்தார்கள் சபாரி செக்யூ ரிட்டிகள். அங்கங்கே ஓரமாக கிஸ்’ பண்ணிக்கொண்டி ருந்தவர்களையும், கட்டி அணைத்து சில்மிஷங்களில் ஈடுபட்டவர்களையும் ஏனோ அவர்கள் கண்டு கொள்ள வில்லை. யாரும் யாரையும் செல்போன்களில் க்ளிக்கிக் கொள்வதற்கும் அங்கே தடையில்லை. யாரோ ஒருவர் வீடியோ கேமராவில் இளசு களின் வெறியாட்டத்தை வளைத்து வளைத்து ஷீட் பண்ணியதைக் கூட யாரும் சட்டை செய்யவில்லை.

வந்தவர்களில் சிலர் வேடிக்கை பார்க்கின்ற ரகமாக இருந்தார்கள். இவர்களுக்கு ஆடவும் வரவில்லை.. ஆட் டத்தில் யாருக்கும் கம்பெனி கொடுக்கவும் தெரியவில்லை.. யார் பக்கத்திலாவது போய் நிற்பார்கள்.. ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.. பிறகு பின் வாங்கி விடுவார்கள். அங்கே தொப்பி அணிந்திருந்தவர்கள் ஓரிரு பேர்தான்.. மற்ற வழுக்கைத் தலையர்களெல்லாம் முழுவது மாக மழித்துக் கொண்டு மொட்டை யடித்தவர்களாக இருந்தார்கள். இதுதான் லேட்டஸ்ட் ஃபேஷனாம்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களே ஹேர்ஸ்டைலில் கலக்கினார்கள். ஆட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு காரியத்தில் இறங்க காரில் கிளம்பிய ஜோடிகளும் உண்டு. 11 மணிக்கு அந்த அரங்கு இரைச்சலை நிறுத்திக் கொண்டு, நார்மல் வெளிச்சத்துக்கு வந்து விட, தள்ளாடியபடியே வெளியே வந்து, பாய் ஃப்ரண்ட்ஸுக்கு ஹாய் சொல்லி கையசைத்து விட்டுக் கிளம்பி னார்கள் பலரும். ராத்திரி யாரோடும் தங்குகின்ற கெட்ட பழக்கம் இல்லாத நல்ல குடும்பத்துப் பெண்களாம் இவர்கள்.

கல்லூரி மாணவிகள், ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல.. சொர்ப்ப சம்பளத்தில் வறு மையில் வாடும் பெண்களைக் கூட, பாரம்பரிய செல்வச் செழிப்பில் பணத்தை ஊதாரித் தனமாக இறைக்கும் இளை ஞர்கள் "சும்மா ஆடத்தான்.. வாயேன்.. அங்கே என்ன நடக்குதுன்னு பாரேன்.. ரொம்ப ஜாலியா இருக்கும்.. இது தப்பே இல்லை.. நான் ஒண்ணும் கட்டாயப்படுத்தல...' என்று ’கிக்கான வார்த்தைகள் பேசி.. அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்களாம்.

அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவரிடம் பேச்சுக் கொடுத் தோம்.

""கிராமங்கள்ல ரெகார்ட் டான்ஸ் நடக்கும்.. அதுல ஆடற பொண்ணுகளுக்கு அது தொழில்.. கரகாட்டம் நடக்கும்.. அது ஒரு கலை.. அட, கொட்டுச் சத்தத்துக்கும் உறுமி மேளத் துக்கும் நம்ம பொம்பளைக தலைய விரிச்சுப் போட்டு சாமியாட்டம் கூட ஆடுவாங்க.. அது பக்தி.. இது எதுலயும் சேர்த்தி இல்ல..

இந்தப் பொம்பளப் புள்ளகளப் பார்க் கிறப்ப.. அய்யோ.. யாரு பெத்த புள்ளகளோ.. ஏன் இப்படிச் சீரழியுதோன்னு மனசு கிடந்து தவிக்கும்.. நாங்க என்ன பண்ண முடியும்? இது எங்க டூட்டியாச்சே'' என்றார் நாளும் இவர்களைப் பார்த்து அலுத்துப்போன வெறுப்பில்.

சினிமாக்களில் நாம் பார்த்த காட்சிகள்தான்.. எங்கோ.. ஏதாவது ஒரு நாட்டிலோ இதைப் பார்த்திருந்தால் கூட இத்தனை வலி நமக்கு இருந்திருக்காது..

-சி.என்.இராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment