Tuesday, January 24, 2012

ஷாங்காய் ஆகுமா சென்னை? அடிப்படை பிரச்னைகள் தீர அபார வழி!

தண்ணீர், சுகாதாரம், சாலை போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளுடன் அல்லாடுவதே தமிழக மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்குத் தீர்வுதான் என்ன? ‘நகரங்களைத் திட்டமிட்டு நிர்மாணித்தால் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முடியும்’ என களம் இறங்கியிருக்கிறது இந்திய நகரமைப்பு கல்வியகம் என்ற தன்னார்வ நிறுவனம்.


இந்தியா முழுக்க கிளைகளைக் கொண்டு இயங்கும் இதன் தமிழக பிரிவின் தலைவர் கே.ஆர்.தூயவனை சந்தித்தோம்.

‘‘1951ல் டெல்லியில் நிறுவப்பட்டது இந்நிறுவனம். தேர்ச்சி பெற்ற கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள்தான் இதன் உறுப்பினர்கள். இன்று ஆயிரத்துக்கும் அதிக நகரத் திட்டவியலாளர்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களின் நகரத் திட்டங்களுக்கும் ஆலோசனைகளை வழங்குவதே எங்களது அடிப்படைப் பணி’’ என்றவரிடம், அண்மையில் இந்த அமைப்பு தமிழக அரசுக்கு கொடுத்திருக்கும் நகர திட்டமிடலுக்கான அறிக்கை பற்றி கேட்டோம்.

‘‘தமிழகம் இந்தியாவிலேயே மிகவும் நகரமயமான மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தின் 44 சதவீத மக்கள் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். கிராமங்களில் வாழ்வதற்கு வழியற்றுப்போய் நகரத்தில் பிழைக்க வரும் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே காரணம். இதைத் தடுக்க ஒரே வழி, தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களும் சிறு நகரங்களும் தன்னிறைவான அடிப்படை வசதியுடன் இருப்பதுதான். எல்லாம் கிராமத்தில் இருந்தால் எதற்கு எல்லோரும் நகரத்துக்கு வரப் போகிறார்கள்’’ என்றவர், நகரத் திட்டமிடல்களில் உள்ள குறைகளைப் பற்றியும் சொன்னார்.

‘‘அரசுத்துறைகளில் நகரத் திட்டவியலாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறது. காலி இடங்கள் பல இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது. கட்டிடக்கலையில் பட்டமேற்படிப்பு படித்த பல இளைஞர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தின் 16 சதவீத மக்கள் எந்த ஒரு நிமிடத்தில் கணக்கெடுத்தாலும் சென்னையில் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதம் ‘ஃப்ளோட்டிங் பாப்புலேஷன்’ என்று சொல்லப்படும் நகரும் மக்கள்தொகை. இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரசுத்துறைகளில் வேலையை முடிக்க வருகிறவர்கள் இவர்களில் பலர். எல்லா அரசு அலுவலகங்களின் தலைமையகமும் சென்னையில்தான் இருக்கிறது. மக்களை அலையவிடாதபடி இவற்றை மற்ற ஊர்களுக்கு மாற்றலாம். உதாரணத்துக்கு கால்நடைத் துறை, பால் துறை இயக்குனரகங்கள் சென்னையில்தான் இருக்கின்றன. இதுபோன்ற துறைகளை அந்த தொழில் சார்ந்த மாவட்டங்களுக்கு மத்தியில் வைக்கலாமே...


நகரத் திட்டத்துக்கான தமிழக பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சென்னை மாநகர வளர்ச்சிக்காக ஒதுக்குகிறார்கள். இது மற்ற நகரங்களை வளர விடாமல் செய்கிறது. அது மட்டுமல்ல... எவ்வளவு தான் செலவிடப்பட்டாலும் சென்னை யின் பிரச்னைகள் தீராமல் இருக்கிறது. வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதற்காக நகரத்தை வடிவமைக்காமல், உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிட்டால்தான் பிரச்னைகள் தீரும்.
சீனாவின் ஷாங்காய் நகரம் ஒரு காலத்தில் நெருக்கடி நிறைந்த நகரமாக இருந்தது. 5 ஆண்டுக்கு முன் வெளிநாட்டு கட்டிடக்கலைஞர்களுடன் உள்ளூர் பொறியாளர்களும் சேர்ந்து அந்த நகரத்தையே புதிதாகக் கட்டி முடித்தார்கள். இன்று ஷாங்காய் மக்கள் நகரத்தின் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் கால்நடையாகவே சென்று வரக்கூடிய வகையில் பாதசாரிகளுக்கென்றே தனி மேம்பாலங்களை அமைத்திருக்கிறார்கள். சைக்கிளுக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் தனித்தனி ட்ராக்குகள் உருவாக்கி, நகர மக்களின் விரைவான இயக்கத்துக்கு வழிவகுத்திருக்கிறார்கள். இதனால் அங்கு சைக்கிள் ஓட்டாதவர்களே இல்லை என்கிற நிலை. நம் சென்னையில் சைக்கிள் ஓட்டுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இப்படி தன்னிறைவான நகரங்களை உருவாக்குவதால் மக்கள் ஊர்விட்டு ஊர் போவதற்கான தேவைகள் குறைந்துவிடும். அடிப்படைத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாது. ஷாங்காய் உதாரணத்தையும் தமிழக அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். குறைந்தபட்சமாக ஷாங்காய் திட்டத்தை சென்னையில் மட்டுமாவது ஆரம்பிக்கலாம். மற்ற ஆலோசனைகளை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் செயல்படுத்தினால் தமிழக நகரங்களின் அடிப்படை வசதிகளுக்கான நெருக்கடிகள் குறைந்துபோகும்’’ என்று தமிழகத்தின் சமச்சீரில்லாத வளர்ச்சிகளின் குழப்பங்களுக்கு தெளிவு சொல்கிறார்.

சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?

No comments:

Post a Comment