Friday, January 6, 2012

தயாநிதி மாறன் தொடர்புடைய இடங்களில் மற்றொரு ரெயிடுக்கு அச்சாரம்!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சி.பி.ஐ. விட்டாலும், மற்றையவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

“தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்ட பிறகும் ஏன் நடவடிக்கை எதையும் காணவில்லை?” என்ற கேள்வி நேற்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்துள்ள வழக்கு தவிர, வெவ்வேறு அமைப்புகளும், தனியாரும் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வகையில் தன்னார்வ அமைப்பு ஒன்று தொடுத்துள்ள வழக்கில் இந்த விவகாரம் இழுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. இந்த வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதற்கு மறுநாள் அவர் தொடர்புடைய சில இடங்களில் அதிரடி ரெயிடுகள் நடத்தப்பட்டன. அதன்பின் நீண்ட அமைதி. ரெயிடுகள் நடத்தப்பட்ட பின், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் கடந்த இரண்டு மாதங்களாக இல்லை. அத்துடன், எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அது ஏன்?

இந்தக் கேள்வியுடன்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது அந்த தன்னார்வ அமைப்பு.
தன்னார்வ அமைப்புக்காக ஆஜராகிய வக்கீல் பிரசாந்த் பூஷண், “முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைப் போலவே முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் 2ஜி வழக்கில் குற்றம் புரிந்திருக்கிறார். ஆனாலும் தயாநிதி மாறன் மீது மென்போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் தொடர்புடைய விசாரணையை சி.பி.ஐ. வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார்.

“ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு பலிக்கடாவாக ஆ.ராசாவை தருகிறோம். தயாநிதி மாறனை விட்டுவிடுங்கள்” என்று இதில் ஆதாயம் பெற்ற கட்சியின் தலைவர், தமது மத்திய அரசுத் தொடர்புகளை வைத்து டீல் வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்னரே அடிபட்டது.அது உண்மையல்ல என்று காட்டுவதற்காகவே சி.பி.ஐ. தயாநிதிமீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததுடன், ஊழல் நடைபெற்று வருடக்கணக்கில் காலம் கடந்தபின் தயாநிதி தொடர்பான இடங்களில் ரெயிடு நடத்தியது என்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அவ்வளவு காலத்தின்பின் தயாநிதியின் இடங்களில் என்ன ஆதாரங்களைக் கைப்பற்ற முடியும்? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

மீடியாக்களில் மட்டும் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த இந்த விவகாரம் இப்போது ஒரு மனுவாக உச்ச நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தயாநிதி மாறன்மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.

10 நாட்களுக்குள் சி.பி.ஐ. விளக்கம் அளிக்கலாம். அல்லது மற்றொரு ரெயிடு நடத்தி, இன்னொரு இரண்டு மாதங்களுக்கு டிஸ்ட்ராக்ட் பண்ணி இழுத்துச் செல்லலாம். அநேகமாக அதைச் செய்வார்கள்.

No comments:

Post a Comment