டெல்லி: காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக நான் 2010ம் ஆண்டு கூறிய நிலை இப்போது இல்லை. அந்த வாய்ப்பு அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒன்று. இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. அந்த ஆதரவு வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். முதல்வரான பிறகு தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் சிறப்புப் பேட்டி இதுவே.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸுக்கு இப்போதும் உங்களது ஆதரவு உள்ளதா?
காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அவ்வளவுதான்.
நான் தருவதாக கூறிய ஆதரவை காங்கிரஸ் கட்சி ஏன் பரிசீலனை செய்யவில்லை என்பதை காங்கிரஸிடம்தான் கேட்க வேண்டும்.
மேலும், திமுகவுடன் தனது கூட்டணி உறுதியுடன் இருப்பதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லோக்சபா தேர்தலில் கூட்டணிகள் மாறுமா?
அரசியலில் எதுவும் நடக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு கூட்டணிகள் மாற வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அரசியல் கணக்குகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலையில் உள்ளவற்றைப் பொறுத்துதான் அரசியல் கூட்டணிகள் ஏற்படும்.
அரசியலில் இறுக்கமாக இருப்பது சரிவராது. எங்களைப் பொறுத்தவரை எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை நாங்கள் சமாளிக்கக் கூடிய வகையில் தயாராகவே இருக்கிறோம்.
இந்திய அரசியலில் எதுவும் எப்போதும் மாறும். இன்றைக்கு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மத்தியில் மிகவும் உறுதியான அரசு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைந்த சர்வ பலமிக்க (Authoritative Govt) இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்.
3வது அணி ஏற்படுமா?
எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?
எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.
லோக்பாலில் பிரதமரைச் சேர்க்கலாமா?
நிச்சயம் சேர்க்கக் கூடாது. ஏற்கனவே பிரதமர் பதவி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் வருகிறது. லோக்பாலில் பிரதமர் பதவியைச் சேர்த்தால் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை போய் விடும். அரசியல் ரீதியாக லோக்பாலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அந்நிய சக்திகள் இதைத் தவறாகப் பிரயோகிக்காலாம். உதாரணத்துக்கு, பிரதமருக்கு எதிராக ஏதாவது ஒரு லஞ்சப் புகாரை லோக்பால் முன் கொண்டுவந்தால், பிரதமர் அதற்கு பதிலளிப்பதில்தான் நேரத்தைச் செலவிட வேண்டி வரும். அந்தப் புகாருக்கு ஆதாரமே இருக்காது. ஆனாலும் அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இது எந்த அளவுக்கு நாட்டின் நிர்வாகத்தை, அரசு இயக்கத்தை பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே லோக்பாலில் பிரதமரையும் உள்ளடக்குவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?
அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.
மத்திய அரசியலுக்கு வருவீர்களா?
அப்படி எந்த எண்ணமும், லட்சியமும் எனக்கு இல்லை. எனக்கென்று நான் லட்சியங்களை வகுப்பதில்லை. நாட்டுக்காகத்தான் லட்சியங்களை வகுத்து செயல்படுகிறேன்.
தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?
அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.
ப.சிதம்பரத்தின் வெற்றி குறித்து நீங்கள் கூறியது?
ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் ஜெயிக்கவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதுமல்ல,” என்றார் ஜெயலலிதா.