Saturday, June 18, 2011

ஜெயலலிதா - செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம்


ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...

இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட வைகோ, தி.மு.க-வு டன் கூட்டணியில் இருக்கும் திருமாவள வன், 40 ஆண்டுகளாக ஈழப் பிரச்னைக்கா கத் தன்னை அர்ப்பணித்துவிட்ட பழ.நெடு மாறன் என எல்லோருக்கும் ஜெயலலிதா வின் தீர்மானத்தால், மகிழ்ச்சி.



'இது ஜெயலலிதா நடத்தும் அரசியல் நாடகங்களில் ஒன்று’ என்று தி.மு.க. சார்பு ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எத்தனையோ நாடகங்களை நடத்திய கருணாநிதி, இதையும் செய்திருக்கலாமே? ஏன் மறுத்தார்? கருணாநிதியின் மௌனம்கூட, ஜெயலலிதாவைப் பேசவைத்து இருக்கலாம். எது காரணமாக இருந்தாலும், ஈழப் பிரச்னையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது ஜெயலலிதாவின் தீர்மானம்!

''தமிழர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. பரவலாகக் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங் களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய மறுத்தது. போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது போன்ற கடுமையான, நம்பத் தகுந்த குற்றச் சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது'' என்று குற்றம்சாட்டும் தமிழக அரசின் தீர்மானம், ''இத்தகைய போர்க் குற்றங் களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்ற வாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று பகிரங்கமான கோரிக்கையை வைத்துள்ளது.


2009 மே மாதம் வரை நடந்த கொடுமைகளுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தாத தமிழகம்... 16-ம் நாள் கூடப் பதறாத தமிழகம்... சுமார் 750 நாட்கள் கழித்து மாட்சிமை பொருந்திய தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொடுமைக்குக் கண்ணீர் விடும் தீர்மானத் தைக் கொண்டுவந்து இருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் ஓர் உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் அந்நாட்டு அரசுகள் செய்ததைக்கூட, ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் தமிழகம் இதுவரை செய்ய வில்லை. இப்போது ஜெயலலிதாவின் தீர்மானம், ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர்விளைவை ராஜபக்ஷே மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியின் காரணமாகத்தான், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் உடனடியாக சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித் தார். இலங்கை அரசுக்கும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இந்தத் தீர்மானம் தீராத தலைவலியைக் கொடுக்கப்போகிறது.'இலங்கையை முன்னால் விட்டு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுதான் பின்னால் நின்று போரை நடத்தியது!’ என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை மன்மோகனும் சோனியாவும் மௌனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளைப் பகிரங்கமாகவே செய்தது. வைகோ வுக்கு பிரதமர் எழுதிய கடிதங்கள் இதற்குச் சான் றாக உள்ளன. 'இந்தியா வுக்கு நன்றி’ என்று கொழும் பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. 'போரில் ஒவ்வொரு நாளும் நடப்பதை இந்தியாவுக்கு நாங்கள் தகவல் தந்துவந்தோம்’ என்றார் இலங்கை ராணுவத் தளபதி. இலங்கை சார்பில் சரத் ஃபொன்சேகா, பஷில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே ஆகிய மூவரும்... இந்தியா சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு போர்க்காலங் களில் பேசி வந்தார்கள்’ என்று பகிரங்கமாக இலங்கை அரசு அறிவித்தது. இதை எல்லாம் சொல்லும்போது, 'மத்திய அரசுதான் எதையும் செய்யவில்லை என்கிறார்களே’ என்று பொத்தாம் பொதுவாக பதிலைச் சொன்னார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி.



''இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்'' என்றால், அதில் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சேர்ந்து மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் சிக்கலாம். ஊழல் வழக்குகளில் சிக்கி மூச்சுத் திணறும் மன்மோகன் தலையில் பெரிய கொட்டுவைத்து உள்ளது தமிழக அரசின் இந்தத் தீர்மானம்.ஜெயலலிதாவின் கடமைகள் இதோடு முடிந்துவிடவில்லை. தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தின் விவாதப் பொருளாக ஆக்கி, அங்கும் இப்படி ஒரு தீர்மானத்தை முன்வைக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இன அழிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இடத் தில் கூட்டி ஒரு தீர்மானத்தை முன்மொழிவதும்... அதையே டெல்லியில், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங் மற்றும் லாலு கட்சி எம்.பி-க் களையும் ஒருங்கிணைத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் வழிமொழிதலுடன் டெல்லி செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்வதும் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.

ஜெயலலிதா, நினைவாற்றலில் தேர்ந்தவர். 1983 கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனா இதே போல் தமிழர்களைக் கொன்று தீர்த்தபோது, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கறுப்புச் சட்டை அணிந்து போராடினார். 'ஜெயவர்த்தனாவுக்கு அமெரிக்க அரசுதான் ஆயுத உதவி செய்கிறது’ என்பதைக் கேள்விப் பட்டதும், சென்னயில் இருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிராக (12.10.1983) பேரணி நடத்தினார். அன்று, தூதர் விக்டேக்கரிடம் மனுவைக் கொடுத்தவர் அப்போதைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாதான்.

'மனித உரிமைகள் குறித்து நாள் தோறும் பேசி வருகிற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்காதது தவறு. தனது அரசியலுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையை அமெரிக்க அரசு ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று தனது தீர்க்கமான குரலில் ஜெயலலிதா அப்போது சொன்னார்.அமெரிக்காவுக்கு அன்று சொன்னதை, இங்குள்ள காங்கிரஸ் அரசுக்கு இப்போது சொல்வாரா ஜெ?

விகடன்

No comments:

Post a Comment