Saturday, June 18, 2011

தயாநிதி மாறனைப் பற்றி பேசியது ஏன்...?

நீரா ராடியா கடந்த 2010 டிசம்பர் மாதம் சி.பி.ஐ-க்குக் கொடுத்துள்ள வாக்குமூலங்களைத் தவிர, ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் (சி.ஆர்.பி.சி. 161 படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

ராடியாவின் பேச்சு, தொலைபேசி ஒட்டுக்​கேட்பில் பதிவாகி இருப்பதால், சி.பி.ஐ. விளக்கமாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுத்தான் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.

நீரா ராடியா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரின் உதவியாளர்கள், அதிகாரிகள், டெலிகாம் நிறுவனத்தினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இவை.

நாள்: 25.1.2011

இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன், ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலு​வலகம்.

விசாரணை அதிகாரி: டி.எஸ்.பி. ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.

ராடியாவின் மொபைல் (எண் 9810723015), அவருடைய நிறுவனத்தின் லேண்ட்லைன் (எண் 42393500), ஃபார்ம் ஹவுஸ் லேண்ட்லைன் (எண் 26806188 - சகோதரி கருணா மேனன் பெயரில் உள்ளவை) ஆகிய தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது.

வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை, ஒவ்வொன்றாக சி.பி.ஐ. அதிகாரி ராஜேஷ், லேப்டாப்பில் போட்டுக்காட்ட, ராடியா எதற்காக... யாரிடம்... என்ன பேசினார் என்பதை விளக்குகிறார்.

ஆயிரக்கணக்கான உரையாடல்களில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து சி.பி.ஐ. கேள்வி கேட்டது. இதில் நாம் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்!

கால் எண்: 1 (நவ.3, 2008)

ஸ்பெக்ட்ரம் ரேட்: யுனிடெக் டெலினார்

ராடியா மற்றும் யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா.

யுனிடெக் நிறுவனத்தில் நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனம் முதலீடு செய்து இருந்தது. இந்த முதலீட்டை வைத்தே ஸ்பெக்ட்ரம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு வந்தது. இதையட்டி ராடியா, யுனிடெக் தலைவரை அழைத்து அவர்கள் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து பத்திரிகைகளுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கொடுக்கச் சொல்கிறார். இது பற்றி சி.பி.ஐ-யிடம் ராடியா விளக்குகிறார்.

''பிரதமரும், நிதி அமைச்சரும் யுனிடெக்கில் டெலினார் முதலீடு செய்தது குறித்து விளக்கம் கேட்டிருந்தனர். இதை நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன். யுனிடெக் நிறுவனத்துக்கு நாங்கள் 2005 முதல் ஆலோசகராக இருக்கிறோம். அதனால், யுனிடெக் நிறுவனத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு விளக்கமாகக் கடிதம் எழுதுமாறு யோசனை கூறினேன்.

ரமேஷ் சந்திரா ஏற்கெனவே என்னை அழைத்து இது குறித்து, 'வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்தவர்கள், நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளனர். இது கம்பெனிக்கு வந்த நேரடி வெளிநாட்டு முதலீடு தவிர வேறொன்றும் இல்லை. இதில் நானோ... என் குடும்பமோ பயன் அடையவில்லை’ என்று கூறி இருந்தார். பத்திரிகைச் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கவும் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த பணப் பரிமாற்றம் குறித்து தகவல் கொடுக்கவும் யோசனை கூறினேன்.

தொடர்ந்து நான் தயாநிதி மாறனைப் பற்றிப் பேசியதற்கு காரணம், அந்த சமயத்தில் அவருடைய சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து ஆ.ராசா பயன் அடைந்ததாகச் சொல்லிக்​ கொண்டிருந்தனர். ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி., மாறன் குரூப்பைச் சேர்ந்தது என்பதால் அது குறித்தும் பேசினோம்.''

கால் எண்: 2 (நவ.3, 2008)

எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையாளர் கணபதி சுப்பிர​மணியத்துடன்...

''ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுக்க 14,000 பெட்ரோல் பங்க்குகளைத் திறப்பதாகச் செய்தி வந்தது. இது குறித்து கணுவோடு(கணபதி சுப்பிரமணியம்) பொதுவாகப் பேசினேன். இந்த செய்தியினால் என்ன அபிப்ராயம் ஏற்படும்? என்பது குறித்துப் பேசினேன். அடுத்து யுனிடெக் எஃப்.டி.ஐ. பெற்றது குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது பற்றி கணு என்னிடம் சொன்னார்.
இந்தியாவிலுள்ள போட்டி டெலிகாம் கம்பெனிகள் (ஏர்டெல்?) வெளிநாடுகளில் இருந்து பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்து வருவதைப் பற்றியும் என்னோடு பேசினார்...''

கால் எண்: 3 (நவ.3, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலி​யாவுடன்...

''கலைஞர் டி.வி. ஒளிபரப்பை டாடா ஸ்கை பிளாட்​பாரத்துக்குள் கொண்டு வருவதற்கும், அவர்களுடைய மனு டாடா கம்யூனிகேஷனில் டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் ஒதுக்கீடு செய்வதில் நிலுவையில் இருப்பது குறித்தும் பேசினோம்.

நான் சந்தோலியாவுடன் 'பாஸ்’ என்று குறிப்பிட்டது, அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத்தான். நான் இது குறித்து ஆ.ராசாவுடன் பேசி இருந்தேன். ஆ.ராசா, டாடா ஸ்கையையும் டாடா கம்யூனிகேஷனையும் இது சம்பந்தமான நடவடிக்கையில் விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார்.

நானும் இது சம்பந்தமான நடவடிக்கை எடுத்து, டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டது சம்பந்தமாக லெட்டர் வர, அதை அமைச்சரின் வீட்டுக்கு அனுப்பி உள்ளதைத்தான் சந்தோலியாவிடம் தெரிவித்தேன். அமைச்சர் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது என்று நான் தொலைபேசியில் சொன்னது இந்த 'லெட்டரை’த்தானே தவிர 'வேறு’ ஒன்றும் இல்லை''

கால் எண்: 4 பி (நவ.25, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோ​லியாவுடன்...

ஆ.ராசாவின் தனி உதவியாளரான அவரிடம், மீடியாக்​களிடம் எச்சரிக்கையாகப் பேசும்படி சொன்னேன். மறுநாள் ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்த மீட்டிங் குறித்தும் பேசினோம்.

டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அரசின் பங்கு 26 சதவிகிதம் இருக்கிறது. டாடா கம்யூனிகேஷன், டாடா டெலிசர்வீஸிலும் பங்குகளைப் பெற்றுள்ளது. இந்த டெலி சர்வீஸ் நிறுவனத்தின் சில பங்குகளை டொகோமோ நிறுவனத்துக்கு கொடுக்க இருப்பது சம்பந்தமான மீட்டிங், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாக சந்தோலியா, ரத்தன் டாடா உதவியாளர் ஆர்.வெங்கட் ஆகியோரிடம் பேசினேன். அப்போது வெங்கட் சி.என்.என். ஐ.பி.என். டி.வி-யில் ஆ.ராசா மற்றும் டி.ஆர்.பாலு மீது பிரதமர் கோபமாக இருக்கிறார் என்றும் இவர்கள் மீதான ஊழல் புகார்தான் கோபத்துக்குக் காரணம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்தும் மறுநாள் 26-ம் தேதி சந்தோலியா என்னிடம் பேசினார். 'பிரதமர் அலுவலகம் இந்த செய்தி குறித்து சி.என்.என்., ஐ.பி.என். வசம் விளக்கம் கேட்டுள்ளது என்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட விதம் குறித்து பிரதமருக்கு அமைச்சர் ஆ.ராசா தகவல் கொடுத்து ஒப்புதலும் பெற்று உள்ளார் என்பதை பத்திரிகைகளிடம் அமைச்சர் விளக்கி உள்ளார்’ என்றும் சந்தோலியா தெரிவித்தார்.

கால் எண்: 5 (நவ.18, 2008)

பிசினஸ் ஜீரோ பத்திரிகை ஆசிரியர் சதீஷ் ஓரியுடன் பேசியது...

''அப்போதைய அரசியல் நிலவரம்... நாடாளுமன்ற நிலைமை போன்ற பொது விஷயங்கள் குறித்துத்தான் நான் சதீஷ§டன் பேசினேன்.

என்னுடைய முதல் பேச்சில், விஜய மல்லையாவின் வெளிநாட்டு முதலீடு குறித்தும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு விமான கம்பெனிகள் பங்கெடுக்காதது குறித்தும் பேசினேன்.

இரண்டாவது பேச்சில் சதீஷ் என்னிடம், அனில் அம்பானி மற்றும் ஆ.ராசாவைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார். ஸ்வான் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் குறித்த புகார்கள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனரிடம் நிலுவையில் இருப்பது மற்றும் பொது நலன் வழக்குகளாக தொடரப்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டார்.

ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளுக்காக ஆ.ராசாவுக்கு லண்டனில் வைத்து பணம் கொடுக்கப்பட்டது... கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவை எல்லாம் அவர் சொன்ன தகவல்கள். இந்த பணப் பரிவர்த்தனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது!''

கால் எண்: 6 (நவ.19, 2008)

டைம்ஸ் நவ் டி.வி-யின் மூத்த பொலிடிகல் எடிட்டர் நவிகா குமாருடன்...

''நவிகா பொதுவாக அரசியல் விவகாரங்களை கவனிப்பவர். நான் அவரோடு பேசும்போது தெரிந்து கொண்டது சரத்பவார், ஆ.ராசாவை தொடர்பு கொண்டு பேசியதின் மூலமே ஸ்வானுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்து உள்ளது என்றும் இதில் அனில் அம்பானியின் இன்வால்வ்மென்ட் இருப்பதால் பவார் தலையிட்டு உள்ளார் என்பது குறித்தும் பேசப்பட்டது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தில் பால்வா மற்றும் கோயங்கா முக்கியப் பிரமுகர்கள். ஆனால், மும்பையில் பொதுவாக சொல்லிக் கொள்வது, டி.பி. ரியாலிட்டியை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கன்ட்ரோல் செய்வது சரத்பவாரும் அவரது குடும்பதினரும்தான் என்று. இதனால்தான் சரத்பவார், ஸ்வானுக்கும் அனில் அம்பானிக்கும் முறையே ஸ்பெக்ட்ரம் உரிமமும் இரட்டை தொழில் நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமமும் பெற்றுத் தருவதில் உதவி புரிந்துள்ளார் என்று தொலைபேசியில் குறிப்பிட்டேன்.''

வாக்குமூலம் தொடரும்..


நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011

No comments:

Post a Comment