Wednesday, June 22, 2011

மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டி

எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார்.

இனி அவரிடம் பேசியதிலிருந்து...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...?

‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின் கடன்களை அடைக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இலவசமாகவே ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

67 தேர்தலுக்குப் பிறகு தனது எம்.பி. பதவியை விட்டு அண்ணா விலகியதும், அந்த இடத்திற்கு மாறனை நியமிக்கும்படி கருணாநிதி நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அண்ணா மாறனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.1990-ம் ஆண்டுவரைக்கும் மாறன் வெறும் எம்.பி.தான்.வி.பி.சிங் பதவியேற்ற போதுதான் மத்திய அமைச்சரானார்.அதன் பின்னர்தான் அவருடைய சொத்துக்கள் உயர ஆரம்பித்தது.ஸ்பெக்ட்ரம் ஊழலை தயாநிதிதான் வெளியே கொண்டு வந்தார். அவரே அதில் சிக்கிக் கொண்டார்.’’

அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதானே டி.வி.யை ஆரம்பித்தார்கள்?

‘‘உண்மைதான். வி.பி.சிங் உதவியாலும், சில தொழிலதிபர்களின் உதவியாலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் சன் டி.வி. ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் டி.வி. தொடங்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.ஆனால்,அவர் அதைச் செய்யவில்லை.’’

தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிவசங்கரன் ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு நெருக்கமாகத் தானே இருந்தார்?

‘‘90-களில் இருந்தே எனக்கு சிவசங்கரனைத் தெரியும். 91-ம் ஆண்டு அவர், ‘தான் ஒரு தொலைக்காட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு உதவ வேண்டும்’என்றும் கேட்டு என்னைச் சந்தித்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரில் நூறு ஏக்கரில் தனக்கு இடம் இருப்பதாகவும், அங்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் போவதாகவும் கூட தெரிவித்தார். இதற்கு அனுமதி கிடைக்க உதவி கேட்டார்.நான் அவரை அமைச்சர் செல்வகணபதியிடம் போகச் சொன்னேன்.

மறுநாளே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையார் என்னைச் சந்தித்து, குறிப்பிட்ட நூறு ஏக்கர் இடம் தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன், முரசொலி மாறன் ஆகியோர் மிரட்டி பறித்து விட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிலத்திற்குப் பக்கத்தில் மாறனுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. எனவே, நூறு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வளைக்க வேண்டும் என்று மாறன் திட்டம் தீட்டினார். தன் பெயரில் வாங்கினால் பிரச்னை வரும் என்பதால் பினாமி பெயரில் நிலத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்.இந்த இடத்திற்குதான் அனுமதி வாங்க சிவசங்கரன் என்னை அணுகியிருந்தார்.

அடுத்ததாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிவசங்கரன் வாங்கினார். இதற்கும் முழு உதவி செய்தது முரசொலி மாறன்தான்.இதனால் கோபமடைந்த நாடார் சமுதாய மக்கள், தி.மு.க.விற்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். காமராஜர் பிறந்தநாளில் நடந்த பேரணியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஸ்டாலின் மீது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் செருப்புகளை வீசினர். கோபமடைந்த கருணாநிதி, ரவுடிகளை வைத்து பேரணிக்குள் புகுந்து அடித்தார். அந்தப் பேரணி நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.’’

ஆனால், அந்த மக்களின் கோரிக்கைப்படி, மெர்க்கண்டைல் வங்கி மீண்டும் நாடார் சமுதாய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதே?

‘‘ஆமாம். வேறுவழியில்லாததால் மாறன் அறிவுறுத்தல்படி, சிவசங்கரன் 150 கோடி ரூபாய்க்கு வங்கியை விற்றுவிட்டார். நாடார் மக்களை திருப்திப்படுத்த சரத்குமாரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. அதன்பின்தான் சிவசங்கரன் ஆர்.பி.ஜி., ஏர்செல் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார்.’’

முரசொலி மாறனோடு நெருக்கமாக இருந்த சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

‘‘தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் என அடுத்தடுத்த பிரதமர்கள் காலத்தில் மாறன் தொடந்து மத்திய அமைச்சராகவே இருந்தார்.இந்த காலகட்டங்களில் தன் குடும்பத்தை மட்டுமே அவர் பெருமளவு விரிவுபடுத்தினார். அவர் குடும்பத்தில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் புதிதாக முளைத்தன.

2004-ம் ஆண்டு கிட்னி பாதிப்பால் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.மாறனின் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சிவசங்கரனை கலாநிதிக்கும், தயாநிதிக்கும் பிடிக்காமல் போனது. தயாநிதி அமைச்சரானதும்,தன் ஏர்செல் நிறுவனத்தை விரிவுபடுத்த சிவசங்கரன் முடிவு செய்தார்.முறைப்படி இதற்காக விண்ணப்பங்களை அவர் அனுப்பிக் கொண்டே இருந்தார்.ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்கிற முடிவோடு இருந்தார் தயாநிதி மாறன்.

இந்தப் போராட்டத்தில் சிவசங்கரனை தொழிலில் இருந்தே வெளியேற்ற நினைக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிம் என்கிற மலேஷிய நிறுவனத்துக்கு விற்கச் சொன்னார்கள். மிரட்டல் தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனத்தை விற்றார் சிவசங்கரன்.’’

மேக்ஸிம் நிறுவனத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் ஏர்செல்லை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?

‘‘ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய அனந்தகிருஷ்ணன் என் நண்பர்தான். இந்த வழக்கு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்த பிறகு, அனந்த கிருஷ்ணனையே அழைத்து வந்து உண்மையைப் பேச வைப்பேன். இதற்குப் பின்னணியில்ரி.ஞி. சகோதரர்களின் (கலாநிதி, தயாநிதி) பங்கு, எவ்வளவு பணம் பரிமாறப்பட்டது என எல்லா விவரங்களும் ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.’’



இந்த காலகட்டங்களில் சிவசங்கரனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

‘‘தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது, 2005-ல் நான் டெல்லி சென்றிருந்தேன்.அங்கு ஹோட்டலில் சிவசங்கரனை தற்செயலாக சந்தித்தேன்.என் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அது மாறனிடம் இருந்து வந்தது எனப் புரிந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தன் அப்பாவின் பணத்தை சிவசங்கரனிடம் இருந்து பறிக்கும் முயற்சியில்தான் அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சகோதரர்களின் நெருக்குதல் தாங்க முடியாமல் சிவசங்கரன் அமெரிக்கா போய்விட்டார்.அவர் மீதுள்ள கோபத்தை சிவசங்கரனின் ஸ்டெர்லிங் டவர்ஸ் நிறுவனத்தின் மீது காட்டியதில், ஊழியர்கள் ஆறுபேர் சிறைக்குப் போனார்கள்.’’

2ஜி வழக்கில் தயாநிதி மாறனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

‘‘இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடங்கி வைத்ததே தயாநிதிதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது,அவர் தலைகால் புரியாமல் ஆடினார். தமிழகத்தில் யாருக்கும் டி.வி.சேனல் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு டி.வி.யை ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்கிற நிலைதான் இருந்தது.

2004-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோதே அலைக்கற்றை ஊழலில் அவர் பெருமளவு கொள்ளையடித்து விட்டார்.அந்தப் பணம்தான் 2009 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா ராஜினாமா செய்ததும், கபில்சிபல் அந்தத் துறை பொறுப்பை ஏற்கிறார். சிவராஜ்பட்டீல் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மூலம்தான் தயாநிதி மாறனின் வேடம் கலைகிறது. அலைக்கற்றை உரிமங்களை தன் விருப்பப்படி விற்பனை செய்யவும்,அதற்கான அதிகாரத்தை தான் ஒருவனே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அவரது கனவைத் தகர்த்தது.

2 ஜி உரிமத்துக்காக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாநிதிக்கு பெருமளவு முன்பணம் கொடுத்திருந்தன. அதை அவர்கள் புதிய அமைச்சர் ராசாவிடம் தெரிவித்தபோது, ‘தயாவிடம் கொடுத்ததை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எனக்கு புதிதாக தரவேண்டும்’ என்று கூறுகிறார் ராசா. இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த தயாநிதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட வைத்து, ராசாவை சிறைக்கு அனுப்பினார். இப்போது அந்த ஆவணங்களே தயாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் தயாவுக்கும் இடையே ஏராளமான தொழில் தொடர்புகள் உண்டு. அதில் ஒரு அம்சமாக சன் டி.வி.யின் பங்குகளை அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் வாங்கியது. இதனால் மார்க்கெட்டில் சன் டி.வி.யின் பங்குகளுக்கு விலை கூடியது.இந்த லாபத்தை தாங்களே அனுபவிக்க நினைத்த மாறன் சகோதரர்கள், அதற்கு முன்னரே சன் டி.வி.யில் கருணாநிதிக்கு இருந்த பங்குகளை பிரித்துக் கொடுத்தனர்.’’

2 ஜி ஊழலுக்கு முக்கிய காரணம் தயாநிதி மாறன் என்று கூறுகிறீர்கள். இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

‘‘தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் ஆ.ராசாவுக்கும் உதவியாளராக இருந்தார். தயாநிதி மாறனின் பணம் நெதர்லாந்து நாட்டுக்குப் போய், அங்கிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்த கதையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு முழுக் காரணமும் தயாநிதி மாறன்தான்.அவர் அமைச்சரான பிறகு கலாநிதியுடன் சேர்ந்து தன் தொழிலை பெருமளவு விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 32 தொழில்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் வெளிநாடுகளிலும் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள்.

சுமங்கலி கேபிள் விஷன் மூலம் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள். 2005-ல் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தபோது,தங்கள் தாத்தா மூலம் கவர்னரிடம் பேசவைத்து தீர்மானத்தையே முடக்கினார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பதால்,இந்த கேபிள் டி.வி. மசோதா தூசுதட்டப்படுகிறது. சன் டி.வி.யோ எம்.எஸ்.ஓ. என்ற தகுதிகளைக் கைப்பற்ற ரகசியமாக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து பெரும் சூழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது.

எம்.எஸ்.ஓ.க்களைக் கைப்பற்ற சாக்ஸ் என்ற சக்ஸேனாவை களமிறக்கியுள்ளார்கள். இவரின் மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய எந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கினாலும்,அதற்குள்ளிருந்து ஏராளமான மோசடிகள் வெளிவருகின்றன.கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் அவலங்களை எல்லாம், மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் நாள் நெருங்கிவிட்டது’’ என்று மர்மமாக முடித்தார் நடராஜன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment