அணு உலைக்கு எதிராக கூடங்குளத்தில் நடந்துவரும் போராட்டம், இப்போது 'சஸ்பென்ஸ்’ கட்டத்தில் இருக்கிறது. இது வரை, போராட்டத்துக்கு மாநிலஅரசு எந்தத் தடையும் விதித்தது இல்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.
'மக்களின் அச்சத்தைத் தீர்க்காமல் மத்திய அரசு அணு உலையைத் திறக்கக் கூடாது. தேவைப்பட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து போராடுவேன்’ என்று உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பேசி, மத்திய அரசுக்குக் கிலியை ஏற்படுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை.
மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்து போனதால், தமிழகத்தில் வரலாறு காணாத மின் வெட்டு நிலவுகிறது. அதனால், தமிழ் நாடெங்கும் அரசுக்கு எதிராக மக்கள் ரோட்டில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான், அண்ணா பல்கலைக்கழக எரிசக்தித் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் நான்கு பேர் கொண்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழுவும், 'அணுஉலை பாதுகாப்பானது’ என்று அறிக்கை கொடுத்து ஒதுங்கிக் கொண்டது.
உடனே, போராட்டக் குழுவினருக்கு முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. சுப.உதயகுமாரன் உள்ளிட்ட நான்கு பேர் பிப்ரவரி 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சென்னை கோட்டையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது ஜெயலலிதா, கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.
இதனிடையே, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் மதுரையைச் சேர்ந்த சிவகுமார் என்பவரும், உதயகுமாரனை உடனடியாக கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜாவும் காவல்துறை தலைவர் ராமானுஜத்தை சந்தித்து இதே கோரிக்கைக்காக மனு கொடுத்தார்.
இந்த நிலையில், ஏ.டி.ஜி.பி-யான ஜார்ஜ் கூடங்குளம் பகுதிக்கு திடீர் விசிட் அடித்து, ஆய்வு செய்தார். இதுகுறித்துப் பேசிய யுவராஜா, ''கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பல்வேறு வல்லுனர் குழுக்கள் தெரிவித்த பிறகும், அப்பாவி மக்களை திசை திருப்பி உதயகுமாரன் போராட்டத்தைத் தூண்டி அணு உலையைத் திறக்க விடாமல் செய்து வருகிறார். 'அவர்மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் மனு கொடுத்தேன்.
அதனைப் படித்துப் பார்த்தவர், ஏ.டி.ஜி.பி. ஜார்ஜை பார்க்கச் சொன்னார். அவர் என்னிடம் 40 நிமிடங்கள் பேசினார். அணு உலைக்கு ஆதரவாக வள்ளியூரில் இருந்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாங்கள் நடத்திய யாத்திரை பற்றி விளக்கமாகக் கேட்டார். அணு உலையை திறக்க யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பது குறித்துக் கேட்டார். இந்தப் போராட்டத்தை உதயகுமாரன் எப்படித் தூண்டினார் என்பது பற்றி, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எழுதி இருந்த கடிதங்களைக் காட்டினேன். மறுநாளே அவர் கூடங்குளம் சென்று ஆய்வு நடத்தி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அணுஉலை சீக்கிரம் திறக்கப்படும்'' என்றார், நம்பிக்கையுடன்.
ஏ.டி.ஜி.பி ஜார்ஜ் கூடங்குளம் பகுதியில் ஆய்வு செய்தது பற்றிப் பேசிய போலீஸ் அதிகாரிகள், ''கூடங்குளம் அணுஉலை திறக்கப்பட்டால் இந்தப் பகுதி மக்கள் அதைக் கடுமையாக எதிர்ப்பார்கள். போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்தாலும் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். ஆகவே, சுற்றுப்புற பகுதியில் இருந்து கூடங்குளத்துக்குள் வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் செக்-போஸ்ட் அமைத்து போலீஸைக் குவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பகுதிகளை ஏ.டி.ஜி.பி ஆய்வு செய்தார். கூடங்குளத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஏ.டி.ஜி.பி வந்து ஆய்வு செய்தார்'' என்கிறார்கள்.
இப்போது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை செய்திருக்கும் ஜெயலலிதா, அதிவிரைவில் கூடங்குளம் அணுஉலையைத் திறப்பதற்கு முழுஒத்துழைப்பு கொடுத்து விடுவார் என்று, சென்னை அதிகாரிகள் உறுதியோடு சொல்கிறார்கள். ஆக, எந்த நேரமும் திறப்பு விழா நடத்தப்படலாம்.
No comments:
Post a Comment