சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.
தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா?
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.
உண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டது யார் தெரியுமா? புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.
பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை "இறையாண்மை', "அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.
உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.
இந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மெüனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.
இப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.
இந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.
நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.
அதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.
சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மெüனமாக இருந்திருக்கின்றன.
அதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், "இலங்கை எங்களது நண்பன்' என்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.
"லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.
இத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால், சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு "வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. இராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.
அந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.
நன்றி : புளியங்குடி பூலியன் (தினமணி)
No comments:
Post a Comment