Thursday, March 15, 2012

ராஜபக்ஷே விஷயத்தில் இறையாண்மையை காரணம் காட்டி மெளனம் சாதிக்க கூடாது. நல்லகண்ணு

யதால் தம்பி என்றாலும் அனுபவத்தால் அண்ணன்!’ என்று கருணாநிதி மெச்சிய தோழர், 'அரசியல்வாதி’ என்பதற்கான உதாரண மனிதர், 'வாழும் கக்கன்’ தோழர் நல்லகண்ணு தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இங்கே...

''சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் இவ்வளவு குழப்பம்?''

''குழப்பம் எல்லாம் இல்லை. நாங்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதே சமயம், எவரையும் ஆதரிக்கவும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை, நதி நீர்ப் பிரச்னை, ஊழல், அதீத மின் வெட்டு போன்ற மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவதிலேயே கவனம் செலுத்திவருகிறோம்!''

'' போர்க் குற்றம் புரிந்ததாக இலங்கைக்கு எதிராக அமெரிக்காவே தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால், இந்தியா இன்னும் தன் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடவில்லையே?''

''இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் நேரு ஒருமுறை சுவிட்சர்லாந்து சென்றபோது இத்தாலியில் முசோலினியைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம். எத்தியோப்பியாவைச் சிதைத்த பிறகு, ஹிட்லரோடு கைகோத்து உலகின் பல பகுதிகளைச் சூறையாடும் முனைப்போடு இருந்த முசோலினியின் ரத்தக் கறை படிந்த கரங்களோடு தான் கை குலுக்கத் தயார் இல்லை என்று தன் எதிர்ப்பைப் பகிரங்கமாகப் பதிவுசெய்தார் நேரு. அந்தப் பாரம்பரியத்துக்கு இப்போது பங்கம் வந்துவிடக் கூடாது. மத்திய அரசாங்கத்துக்கு இதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று எனக்குப் புரிய வில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையமே ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளி என்று அறிவித்த பிறகு, அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இறையாண்மைப் பிரச்னை என்று காரணம் கற்பித்து இந்தியா மௌனம் சாதிக்கக் கூடாது!''

''பேருந்துக் கட்டண உயர்வு, மின் வெட்டு, விலைவாசி ஏற்றம் என்று ஆட்சி மாறிய பிறகும் காட்சிகள் மாறவில்லையே?''

''முந்தைய தி.மு.க. ஆட்சி மக்களைப் பற்றி கவலைகொள்ளவில்லை. அ.தி.மு.க. தலைமை அளித்த தேர்தல் வாக்குறுதிகளோ அறிக்கையோடு நின்றுவிட்டன. பேருந்துக் கட்டணம், மின் வெட்டு விஷயங்களில் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது!''

''மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுபவர் நீங்கள். ஆனால், இன்னமும் மணல் கொள்ளை குறைந்தபாடு இல்லையே?''

''மணல் கொள்ளையின் விபரீதம் ஆட்சியாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ புரியா மல் இல்லை. ஆனால், அதை மறக்கவைக்கும் அளவுக்குக் கிடைக்கும் கொழுத்த லாபமே அவர்களில் பலரின் கண்களை மறைக்கிறது. காவிரிப் படுகையில் எடுக்கப்படும் மணலானது சேமிப்புக் கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டு, தூத்துக்குடியில் மலைபோல் குவிக்கப்பட்டு பல இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் ஜே.சி.பி. போன்ற கனரக இயந்திரங்களை மணல் அள்ளப் பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜே.சி.பி. இயந்திரப் பயன்பாடு முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜே.சி. பி-யைவிடப் பெரிய இயந்திரம் தமிழகத்தில் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. வறண்ட பாலைவனமாகும் தகுதிகூட வாய்க்காத தமிழகம் கண் முன் விரியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இயற்கையைப் பாது காக்கும் பெரும் பொறுப்பினை அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்டு திறம்படச் செயல்பட வேண்டும்!''

''வங்கிக் கொள்ளையர்கள் என்று சந்தேகிக் கப்பட்டவர்கள் மீதான சமீபத்திய என்கவுன்டர் சரியானதா?''

''காவல் துறையே நீதிபதியாகித் தீர்ப்பு எழுதி இருக்கிறது. குற்றவாளிகள் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி, ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றதில் கொள்ளைக்கான காரணம் என்னவென்று தெரியாமலே போய்விட்டது. ஐந்து பேரில் ஒருவரையாவது உயிரோடு பிடித்திருந்தால், உண்மை என்னவென்று தெரிந்துஇருக்கும். ஒருவேளை உண்மை வெளிவரக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமோ?''

''சேவை என்ற அடையாளம் மறைந்து, கார்ப்பரேட் தொழிலாக இன்றைய அரசியல் பரிணமித்துவிட்ட நிலையை உணர்கிறீர்களா?''

''(வருத்தம் தோய்ந்த குரலில்...) ஆமாம்! உலகமயமாக்கலுக்குப் பிறகு அகராதியில் அரசியலுக்கான அர்த்தமே மாறிவிட்டது. கோடிகளைச் செலவழித்து அதிகாரத்துக்கு வருவது, கொள்கை இல்லாமல் நிர்வாகத்தைச் சீர்குலைப்பது, குடும்ப வசதியைப் பெருக்கிக்கொள்வதில் குறிக்கோளாக இருப்பதுதான் அரசியல் என்றாகிவிட்டது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திரகுமார் சிங் கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்தபோது, அவர் மீது டிராக்டரை ஏற்றிக் கொன்று இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் மண்ணெண்ணெய், பெட்ரோல் கடத்தப்படுவதைத் தடுத்த கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் தைப் பதுக்கல்காரர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். தமிழகத்திலும் மணல் கொள்ளையைத் தடுத்த பல தாசில்தார்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய உதாரணம் மிட்டாதார் குளம் சதீஷ்குமாரன்.

சுதந்திரம் பெறாத காலகட்டத்தில் வாரன் ஹேஸ்டிங்க்ஸ், ராபர்ட் கிளைவ் போன்ற ஆங்கிலேயர்கள் ஆடம்பரச் செலவு செய்கிறார்கள் என்று அவர்கள் மீது வழக்குப் போட்ட தேசம் இது... வேறென்ன சொல்வது?''

No comments:

Post a Comment