''பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. அடாது மழை பொழிய, அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறார் ஜி.கே.வாசன்''- என்று சிறகுகளைச் சிலிர்த்துக்கொண்டு நம் முன் வந்து அமர்ந்தார் கழுகார். துவட்டிக்கொள்ள டர்க்கி டவலும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் கழுகார்.
''இனியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்க முடியாது என்று ஜி.கே.வாசன் முடிவெடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சோனியாவும் ராகுலும் அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. பொதுவாக மாநிலங்களில் செல்வாக்கு உள்ள தலைவர்களை டெல்லி எப்போதும் மதிப்பதே இல்லை. முந்தைய உதாரணம், ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி. இப்போது ஜி.கே.வாசன். வருத்தத்தில் இருந்தார் அவர். இன்னொரு பக்கம் ஈழப் பிரச்னையும் மீனவர் விவகாரமும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சோனியாவும் ராகுலும் இந்த விஷயத்தில் முடிவுகள் எடுத்தார்கள் என்பது இன்னொரு வருத்தம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சோனியா, ராகுலைப் பார்த்து ஈழப் பிரச்னை பற்றி ஜி.கே.வாசன் பேசினார். அதன் பிறகு பிரதமர் மன்மோகனை சந்தித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் பார்த்தார். அப்போதும் ஈழப் பிரச்னை பற்றியே பேசினார். இது எதையும் ராகுல் விரும்பவில்லை. அன்றே ஜி.கே.வாசனை கழற்றிவிட ராகுல் தயாராகிவிட்டார். இதுபற்றி அப்போதே சொல்லி இருந்தேன்.''
''ஆமாம்!''
''இப்படியே போனால் காங்கிரஸ் தமிழகத்தில் அதலபாதாளத்தில் போய்விடும் என்று ஜி.கே.வாசன் நினைத்தார். தனிக் கட்சி முடிவுக்கு வந்தார். ஆனால், நாடு முழுவதும் பி.ஜே.பி அலை வீசிவரும் நிலையில், தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. 'அ.தி.மு.க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்துவிட்டது. தி.மு.க-வுடன் கூட்டுச் சேர முடியாது. இவர்கள் இருவரையும் விட்டால் பி.ஜே.பி கூட்டணிதான் இருக்கிறது. காங்கிரஸை உடைத்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேருவதை பி.ஜே.பி தொண்டர்களே விரும்பமாட்டார்கள். 1999-ம் ஆண்டு தி.மு.க-வுடன் இணைந்திருந்த மூப்பனார், அந்தக் கட்சி பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் அதிலிருந்து விலகினார். எனவே, மதச்சார்பற்ற தன்மையை விட்டுவிடக் கூடாது. அதற்காகத் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையும் இல்லை’ என்று யோசித்த ஜி.கே.வாசன் தனிக் கட்சி முடிவை அப்போது ஒத்தி வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதைக் கையில் எடுக்க நினைத்தார். ஆனால், முன்கூட்டியே நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.''
''நெருக்கடியைச் சொல்லும்!''
''கடந்த இதழிலேயே லேசாகக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் புது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இது நடக்கிறது. இந்த உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படங்கள் பெரிதாக உள்ளன. ஸ்டாம்ப் சைஸில் காமராஜர், மூப்பனார், ராஜீவ், இந்திரா ஆகிய நால்வர் படங்களும் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சின்னா ரெட்டி, 'இந்த உறுப்பினர் அட்டையில் உள்ள காமராஜர், மூப்பனார் படங்களை எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். புதுச்சேரிக்கு வந்த தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் ஞானதேசிகனைச் சந்தித்து இதனைச் சொன்னார். 'தமிழகத் தலைவர்கள் படங்கள் இல்லாமல் இங்கு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது’ என்று ஞானதேசிகன் அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் அதனை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. கடந்த மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராகுல், முகுல் வாஸ்னிக், திரிவேதி போன்றவர்கள் இருந்துள்ளனர். ஞானதேசிகனிடம் காமராஜர், மூப்பனார் படத்தை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். ஆத்திரம் அடைந்த ஞானதேசிகன், 10 லட்சம் கார்டுகள் அடித்து 6 லட்சம் கார்டுகள் கொடுத்தாகிவிட்டது. அதனை மாற்ற முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ''6 லட்சம் கார்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிடுங்கள்’ என்று முகுல் வாஸ்னிக் சொல்லியிருக்கிறார். முடியாது என்று ராகுல் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டு வந்துவிட்டார் ஞானதேசிகன். சென்னைக்குத் திரும்பும்போதே ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டார் ஞானதேசிகன். இவர் சென்னை திரும்பிய அன்று ஜி.கே.வாசன் வெளியூரில் இருந்தார். ராஜினாமா செய்யப் போவதாக ஞானதேசிகன் சொல்ல... 'உங்கள் உணர்வை வெளிப்படுத்த இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று ஜி.கே.வாசனும் தூண்டிவிட்டார். அதனால்தான் ஞானதேசிகன் துணிந்து ராஜினாமா செய்தார். அவரது முடிவை ஜி.கே.வாசனும் வெளிப்படையாக ஆதரித்தார்.''
''டெல்லியில் இருந்து சமாதானப் படலம் நடந்ததா?''
''முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்து ஜி.கே.வாசனைப் பார்த்தார். சமாதானம் சொன்னாராம் நாராயணசாமி. 'என்ன பிரச்னை இருந்தாலும் கட்சியை உடைக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம் அவர். கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார் ஜி.கே.வாசன். 'தமிழ்நாட்டுக்கு முகுல் வாஸ்னிக்கை பொறுப்பாளராகப் போட்டார்கள். அவர் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கே வரவில்லை. யாரோடும் கூட்டணிப் பற்றிய பேச்சுவார்த்தையை டெல்லி தலைமை நடத்தவே இல்லை. 40 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்றும் அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை டெல்லியில் நான்கைந்து பேர் முடிவெடுத்து அறிவித்தார்கள். வேட்பாளர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்று ஏ, பி, சி, டி என்று பட்டியல் போட்டு கொடுத்தது, யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கே தெரியாது. ஆந்திராவைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணமூர்த்தி மூலமாக இந்தப் பணத்தை சப்ளை செய்துள்ளார்கள். ஓரளவுக்கு செல்வாக்கான ஒருவருக்கு ரூ.2 கோடி கொடுத்திருந்தால் டெபாசிட் வாங்கும் அளவுக்காவது ஓட்டு வாங்கியிருக்க முடியும். அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அதிக பணம் கொடுத்துள்ளனர். பணமே இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சமும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.2 கோடியும் கொடுத்துள்ளனர். எங்கேயோ யாரோ உட்கார்ந்துகொண்டு இதை எல்லாம் முடிவு செய்தால் தமிழ்நாட்டில் தலைவர் எதற்கு? நாங்கள் எதற்கு? எங்களை மதிக்காதவர் இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று ஜி.கே.வாசன் கேட்டுள்ளார்.''
''நியாயம்தான்?''
''தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி டெல்லி தலைமைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் ஜி.கே.வாசனின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை ஆராய முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜரான ஜி.கே.வாசன், அப்போதே தனது விரக்தியை வெளிப்படுத்திவிட்டார். எனவே, வாசன் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை எதிர்பார்த்தே டெல்லியும் இருந்துள்ளது. இந்த நிலையில் உறுப்பினர் அட்டை விவகாரம் வெடித்து தனிக் கட்சியை உருவாக்கிவிட்டது. திங்கட்கிழமை அன்று மதியம் 12.20 மணிக்குப் புதிய பாதையில், தன் பயணம் இருக்கப் போகிறது என்பதை வாசன் அறிவித்தார். கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகச் சொன்னார். அநேகமாக நவம்பர் 16-ம் தேதிக்குள் நடக்கலாம். சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால், மாநிலத்தின் மையப் பகுதியாக இருந்தால் நல்லது என்று திருச்சியைத் தேர்வு செய்தார்கள். மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அதனைக் கவனித்துக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாராம் வாசன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, நேர்மையான அரசு நிர்வாகம் ஆகியவைதான் தனது கொள்கை என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வாசனின் இந்த திடீர் குஷியை அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.''
''அதைச் சொல்லும்!''
''காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் 65 சதவிகிதத்துக்கு மேல் ஜி.கே.வாசன் பக்கமாகத்தான் இருக்கிறது என்பதை அனைத்துத் தலைவர்களும் உணர்ந்துள்ளார்கள். மேலும், அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர் வாசன். அதனால்தான் அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களும் வாசனுக்கு போன் போட்டு வாழ்த்துச் சொல்லியதாகச் சொல்கிறார்கள். 'வாசன் நம் பக்கமாக வந்தால் நம்முடைய கூட்டணி பலப்படும். அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவோம்’ என்று கருணாநிதி தூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டாலினும் வாசனும் அடிக்கடி பேசிக் கொள்ளக்கூடியவர்கள்தான் என்பதால், இந்த உறவு பலப்பட வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தரப்பு செய்திகளை தனக்கு உடனுக்குடன் சொல்லச் சொல்லி கருணாநிதியும் உத்தரவு போட்டுள்ளார்.
இதே நேரத்தில் ஜெயலலிதாவும் ஜி.கே.வாசனின் திடீர் கட்சியைக் கவனித்து வருகிறார். அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வாசன் பிரிந்து வந்தால் அவருக்கு மூன்று தொகுதிகள் தரவேண்டும் என்று சிலர் பேசியபோது, 'வாசனை கூட்டணியில் சேர்ப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தத் தேர்தலில் நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனை வாசனிடம் சொல்லிவிடுங்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். மீனவர்களைக் காப்பாற்ற கடலோரப் பாதுகாப்புப் படை ரோந்து கப்பல்கள் விடப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறையவில்லை. இந்த நிலையில் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தயாரான அறிக்கையில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் திருத்தம் செய்த ஜெயலலிதா, ஜி.கே.வாசன் பெயரை நீக்கிவிட்டு, மத்திய அரசு மீது மட்டும் புகார் சொல்லி அறிக்கையை வெளியிட்டார்.''
''ஓஹோ!''
''இப்போது நடந்ததைச் சொல்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சத்தியமூர்த்தி பவன், ஜி.கே.வாசனின் வீடு இருக்கும் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் போலீஸார் அதிகப்படியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அறிவிப்பு வெளியிடப்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை ஹோட்டல் வரை வழிநெடுகிலும் வாசன் கட் அவுட்கள் வைக்கப்பட்டன. அதனை போலீஸார் தடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்துமே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதி இல்லாமல் இந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் பார்க்கும்போது, வாசனின் புதுக் கட்சிக்கு ஜெயலலிதா வலை வீசுவதற்கான முஸ்தீபுகள் என்றே சொல்கிறார்கள்.''
''இதில் சிக்கிக்கொண்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தானா?''
''கடந்த சில ஆண்டுகளாகவே வாசனும் இளங்கோவனும் அதீத அன்புடன் நட்பு பாராட்டி வந்தார்கள். அதனால்தான், தனக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாசனைத்தான் முதலில் போய் பார்த்து ஆசி வாங்கினார் இளங்கோவன். இதனை டெல்லி எதிர்பார்க்கவில்லை. அப்போதே தான் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக வாசன் சொல்லிவிட்டார். அறிவிப்பு செய்த அன்றும், இளங்கோவனுக்கு இவர் வாழ்த்து தெரிவித்தார். 'வாசன் தனிக் கட்சி தொடங்கக் கூடாது’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் இளங்கோவன்.''
''இளங்கோவன் பெயர் பட்டியலிலேயே இல்லையே, அவரை எப்படி அறிவித்தார்கள்?''
''டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் ஆகியோர் பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்தன. 'இளங்கோவனை நியமித்தால்தான் வாசன் தனிக் கட்சி தொடங்க மாட்டார்’ என்று டெல்லி நினைத்ததாம். ஆனால், அதனை மீறி வாசன் வெளியில் போனதை டெல்லி எதிர்பார்க்கவில்லை'' என்ற கழுகார், கடந்த இதழில் வந்த பா.ம.க செய்திகளுக்கு ஃபாலோ - அப் தர ஆரம்பித்தார். ''டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் கூட்டு என்று செய்தி பரவியது. கூட்டணிக்குத் தயார் என்பதைப்போலவே கருணாநிதி, வைகோ, ஸ்டாலின் ஆகிய மூவரும் மாறி மாறி பேட்டிகள் கொடுத்தனர். இந்த நிலையில் திடீரென்று வைகோ, இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றி காங்கேயம் திருமணத்தில் மனம் திறந்துள்ளார்.''
''அதைப் பற்றி வேறுவேறு செய்திகள் வருகின்றனவே?''
''கடந்த 2-ம் தேதி ஈரோடு ம.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான கணேசமூர்த்தியின் மகன் கபிலனது திருமணம், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள என்.எஸ்.என் மஹாலில் நடந்தது. திருமணத்தை நடத்திவைக்க வைகோ வந்திருந்தார். அங்கே பேசிய வைகோ, 'கடந்த மூன்று நாட்களாகப் பல்வேறு செய்திகள் பத்திரிகைகளிலே உலவிக்கொண்டிருக்கிற காரணத்தால் இது அரசியலிலே பரபரப்பான நேரம், மூன்று நாட்களாக ஒரு பெரிய கேள்வி எழுந்திருக்கிறது அதைப் பற்றிய வாழ்த்துகள்... விமர்சனங்கள்... இணையத்தில் பரவுகிற மின்னல்வேக செய்திகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நான் ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இத்தனை நாட்களாக இல்லாமல் இனிமேலா நான் ஒரு பெரிய பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படப் போகிறேன்? நாடாளுமன்றத் தேர்தலிலே பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க ஆகியவற்றோடு தோழமைகொண்டு போட்டியிட்டோம். எனது சகோதரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன். வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா எம்.பி-யாகும் வாய்ப்பு வைகோவுக்கு இருக்கிறது, நரேந்திர மோடியின் நேசத்துக்குரியவர், பி.ஜே.பி-யின் வடகுலத்து தலைவர்கள் எல்லாம் அவர் மீது அளவற்ற அன்புகொண்டிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வந்த ராஜபக்ஷேவை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டி கைதாகி இருந்தேன். எனக்கா சுயநலம்? நானா பதவி பவுசுகளை எதிர்பார்ப்பவன்? ராஜ்யசபா எம்.பி கொடுப்பார்களோ, நம்மை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற எண்ணம் வரவில்லையே... எப்படி வரும் எனக்கு? என்னிடம் பிழைகள் இருக்கலாம். என்னிடம் குறைகள் இருக்கலாம். நான் மாமனிதனல்ல. நான் ஒரு சாதாரண மனிதன். முழுமனிதனாக இருப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவன். எனக்கா பதவி ஆசை?’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே போனார் வைகோ.''
''கூட்டணி பற்றி என்ன சொன்னார்?''
''ராமதாஸ் இல்லத் திருமணத்துக்குச் சென்றதைப் பற்றி சொன்ன வைகோ, 'அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்ப்பது நலம் விசாரிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. அதற்கு அடையாளம்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு என்று நான் சொன்னேன். கண், காது, மூக்கு வைத்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியைப்பற்றி எல்லாம் நான் இப்போது சிந்திக்கவே இல்லை. எனக்கு என்னைவிட கட்சியும் கொள்கைகளுமே பெரியது’ என்று முடித்தார் வைகோ. இதேபோல் ராமதாஸும் 'தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணி’ என்று கிளம்பியிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதனைச் சொல்ல வேண்டியது இல்லை என்று இந்த தலைவர்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்'' என்று சொல்லியபடி எழுந்த கழுகார்,
''வைகோ - ஸ்டாலின் சந்தித்த போட்டோ, சம்பவம் நடந்த மறுநாள் முரசொலியில் வெளியிடப்படவில்லை என்று சொல்லியிருந்தேன். அதற்கு அடுத்த நாள் முரசொலியில் வெளியாகி உள்ளது. முக்கியத்துவம் கிடைத்துவிடாமல் 7-ம் பக்கத்தில், அடியில் அந்த போட்டோ வெளியிடப்பட்டு உள்ளது. 'வைகோவை சந்தித்தார் என்பதற்காகத்தான் அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதனால்தான் அடக்கி வாசித்தார் ஸ்டாலின்’ என்கிறார்கள் கட்சியில்'' என்றபடி பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்:
சொ.பாலசுப்ரமணியன்
படம்: சு.குமரேசன்
வருகிறார் விக்னேஷ்வரன்!
நவம்பர் 9-ம் தேதி, சென்னை, தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் சென்னை வருகிறார். முதல்வரானதும் அவரது முதல் முறை சென்னை பயணமாக இது இருக்கும். இந்த நிகழ்ச்சியில், தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜாக் யாக்கோப்பும் கலந்துகொள்கிறார். அவர் பார்வை இல்லாதவர். ஆனால், தன்னுடைய உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால், தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். இவருடைய அபாரத் திறமையைக் கண்டு நெல்சன் மண்டேலா, இவரை தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.
ரிப்பேர்... ரிப்பேர்... ரிப்பேர்!
நவம்பர் 4-ம் தேதியுடன் தமிழக போலீஸின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராமானுஜத்துக்கு பதவி நீட்டிப்பு முடிகிறது. அதற்கு முதல்நாள் 3-ம் தேதி டி.ஜி.பி அலுவலகத்தில் அடுத்தடுத்து மூன்று விழாக்கள் நடந்தன. அதில் ராமானுஜம் கலந்துகொண்டார். தமிழக காவல் துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பேசுவதற்கு ஏதுவாக சி.யூ.ஜி முறையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கிய சிம் கார்டுகளைப் பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசும்போது, ''ஒரு விஷயம் நல்லா போயிக்கிட்டிருந்தா... அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஒரு போன் வேலை செய்யவில்லை என்றால், அதை 10 பேரிடம் பரப்புவார்கள். உதாரணத்துக்கு, நான் வெளிநாட்டு போனை வாங்கினேன். அதில் ரிப்பேர் ஏற்பட்டது. இதை சம்பந்தப்பட்ட கம்பெனியிடம் சொன்னவுடன், உடனே மாற்றி புதிய போனை தந்தார்கள். அதேபோல, அமெரிக்காவில் இருந்து மியூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கினேன். அதிலும் ஒரு ரிப்பேர். அந்தக் கம்பெனிக்கு தெரிவித்தேன். அதை பார்சலில் அனுப்பச் சொல்லி கேட்டார்கள். அதை அனுப்பவே ரூ. 9 ஆயிரம் ஆகுமாம். பேசாமல், இந்தத் தொகைக்குப் புதியதாகவே வாங்கிவிடலாமே என்று முடிவு செய்து அனுப்பவில்லை. இந்த இரண்டு கார்ப்பரேட் கம்பெனியினர் காட்டிய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது'' என்றாராம்.
டி.ஜி.பி அலுவலகத்தில் அனைவருக்கும் பொதுவான நூலகம் இதுவரை இல்லை. அந்தக் குறையையும் நீக்கி, புது நூலகம் ஒன்றை தொடங்கிவைத்தார் ராமானுஜம். மேலும், முதல்மாடியில் உள்ள டி.ஜி.பி அறைக்குப் போகவேண்டும் என்றால், லிஃப்ட் இதுவரை இல்லை. லிஃப்ட் வசதியை புதியதாகத் தொடங்கிவைத்தார் ராமானுஜம். இந்த மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, தனது அறைக்குப் போனார். அடுத்த சில மணிநேரங்களில் புதிய டி.ஜி.பி-யாக அசோக்குமாரை நியமித்து உத்தரவு வெளியானது. அதேநேரம், டி.ஜி.பி அந்தஸ்தில் அட்வைஸர் என்கிற புதிய பதவிக்கு ராமானுஜத்தை நியமித்து அறிவிப்பு வெளியானது. ''அசோக்குமாரும் அதிக காலம் இந்தப் பதவியில் இருக்க இயலாது. ஓய்வு பெற இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. ராமானுஜம் மாதிரி இவருக்கும் இரண்டாண்டுகள் நீட்டிப்பு கொடுத்து வைத்துக்கொள்வார்கள்'' என்கிறார்கள்.
படேல் விழா பதைபதைப்பு!
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. பிரதமர் மோடிக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது திடீரென சுப்ரமணியன் சுவாமி வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் துணை சபாநாயகர் தம்பிதுரை பதறிப் போனாராம். 'இந்த ஆளு எதுக்கு இங்க வர்றார்?’ என்று குறுக்கும் நெடுக்கும் அலைந்தாராம் தம்பிதுரை. அதற்குள் மோடி வர... மாலை அணிவித்து... குரூப் போட்டோ எடுத்தார்கள். 'சுவாமி இருக்கும் படத்தில் தம்பிதுரை இருப்பதை அவரது கட்சி மேலிடம் ஏற்குமா?’ என்று சிலர் கிலி கிளப்ப ஆரம்பித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment