சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு… மூன்று மாத இடைவெளியில் பொதுமேடை ஏறினார் விஜயகாந்த். அவரது வழக்கமான உற்சாகம் அப்படியே வழிந்தது. பால் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் ஜெயலலிதாவை காய்ச்சி எடுத்தார்.
காலை 11.30 மணிக்கு மேடை ஏறிய விஜயகாந்த், கூட்டத்தினர் தன்னை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று மேடையில் நின்று கொண்டிருந்த எல்.கே.சுதீஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளையும் உட்காரச் சொன்னார். மேடையில் சேர் எதுவும் இல்லாததால் அவர்கள் அனைவரும் அப்படியே கீழே உட்கார்ந்தனர். விஜயகாந்த் கைக்கு மைக் போனது. ஆரம்பித்ததுமே சூடானார் விஜயகாந்த்.
”பால் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடித்துள்ளது தமிழக அரசு. தீபாவளிக்கு பஸ் விட்டால், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல் என்று அமைச்சர் அறிக்கை விடுகிறார். ஆனால், பால் விலையை உயர்த்தும்போது மட்டும் தமிழக அரசு அறிவிப்பு என்று மௌனமாகிவிடுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளை அடித்த கூட்டத்துக்கு பால் விலை உயர்வு பெரிதாகத் தெரியாது. ஆனால், விலைவாசி உயர்வால் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த பால் விலை உயர்வு பெரிய சுமை. இப்போதைய விலை உயர்வால் தனியார் கொள்ளை லாபம் அடிக்க வாசலை திறந்து விட்டுள்ளனர். பால் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்” என்று எச்சரித்துவிட்டு ஜெயலலிதா பக்கம் திரும்பினார்.
”ஊழல் குற்றச்சாட்டில் ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை, ‘மக்களின் முதல்வர்’ என்று சொல்லி, அந்தக் கட்சியினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அப்படியானால் ஓ.பன்னீர்செல்வம் யார்? அவர், தமிழக மக்களின் முதல்வர் இல்லையா? ஜெயலலிதா ஊழல் செய்து தண்டனை பெற்ற குற்றவாளி. அவரை மக்களின் முதல்வர் என்று சொல்லக்கூடாது. உண்மையாகவே, மக்களின் முதல்வர் காமராஜர், அண்ணா ஆகியோர்தான். மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். ஆனால், ஏற்கெனவே ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் அண்ணாவின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றன. ஜெயலலிதா, ‘ஊழலின் முதல்வர்’. மக்களின் முதல்வர் அல்ல. இனி, அவரை குற்றவாளி ஜெயலலிதா என்றுதான் அழைக்க வேண்டும். அதை தைரியமாகச் சொல்லுங்கள். விளம்பரம் பண்ணுங்கள். கழுத்துக்குக் கத்தி வந்துவிடாது. ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா…’ என்று எம்.ஜி.ஆர் பாடியிருக்கிறார். ஊழல் செய்தவர்கள்தான் மக்களைப் பார்த்து பயப்பட வேண்டும். நமக்கு பயம் ஒன்றும் இல்லை. யாரைப் பார்த்தும் ஓடி ஓளிய வேண்டியதில்லை. ஊழல் வழக்கில் ஜெயிலில் இருந்த ஜெயலலிதாவுக்கு மக்களை பார்க்க மட்டுமல்ல, அவரது கட்சியினரை சந்திக்கவே பயம். அதனால்தான் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அம்மா பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தில் அந்தப் பெயரை எடுக்க வேண்டும். இன்றைய முதல்வர் பன்னீருக்கு அந்த சிக்கல் இல்லை. வாட்ஸ் அப்ல ஒரு செய்தி வந்திருக்காம். ‘நம்ம முதல்வர் பெயருல பன்னீர் டிக்கா… கடாய் பன்னீர்… பன்னீர் பட்டர் மசாலா… பன்னீர் சோடான்னு இருக்கு’ என்று கிண்டலடித்து முடித்தார்.
கூட்டத்தைப் பார்த்த ஒரு தொண்டர், ‘நம்ம தலைவருக்கு இன்னும் செல்வாக்கு குறையவே இல்லை’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்!
No comments:
Post a Comment