Saturday, September 27, 2014

மிஸ்டர் கழுகு: பெங்களூரு பிரளயம்


பெங்களூரு பரபரப்பு காட்சிகளுக்​காகத்தான் கழுகாருக்கு காத்திருந்தோம். நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்தச் செய்திகளை அள்ளி வந்தார் கழுகார்!

''இந்த இதழை உமது வாசகர்கள் பரபரப்புடன் வாசிக்கத் தொடங்கி இருக்கும்போது பெங்களூரில் இருந்து செய்திகள் வர ஆரம்பித்து இருக்கும். அதற்கு முன்னதாக நடந்த பதைபதைப்பு க்ளைமாக்ஸ் காட்சிகளை உம்மிடம் விவரிக்கிறேன். வழக்கை 18 வருடம் இழுத்தடித்தாகிவிட்டது. தீர்ப்புத் தேதியை இழுத்தடிக்கும் வேலைகள் இறுதி வரைக்கும் எப்படி நடந்தது தெரியுமா?'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.
''இறுதி விசாரணை முடிந்ததும், தீர்ப்புத் தேதியை அறிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக சில ஆவணங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தீர்ப்புத் தேதியை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்றார்.  அந்தத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் இடத்தை மாற்றச் சொல்லி மனுவைக் கொண்டுபோன நேரத்தில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சார்பில் அல்சூர்கேட் போலீஸாரும் ஒரு மனுவைக் கொண்டு வந்தனர். அதில், 'இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர். அவருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க இந்த நீதிமன்ற வளாகம் சரியான இடம் அல்ல. ஏனென்றால், கடந்த 2012-ம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இங்கே வந்து ஆஜரானபோது, கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அவற்றைக் கருத்தில் கொண்டு தீர்ப்புச் சொல்லும் இடத்தை மாற்ற வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, பரப்பன அக்ரஹாராவில் நீதிமன்றம் செயல்பட்டது. அது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியான இடம். எனவே, அங்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'தீர்ப்புச் சொல்லும் நாளன்று நீதிமன்றம் பரப்பன அக்ரஹாராவில் செயல்படும்’ என்று உத்தரவிட்டார். அத்துடன், 'இங்குள்ள ஆவணங்களை புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு இரண்டு மூன்று நாள்கள் தேவைப்படும். அதனால் தீர்ப்புத் தேதியை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்றும் சொன்னார்!''
''ம்!''
''27-ம் தேதி தீர்ப்பு, அன்றைய தினத்தில் மாற்றம் இல்லை என்று அனைவரும் நினைத்தனர். ஜெயலலிதா தரப்பு எந்த மூவ்மென்டும் இல்லாமல்தான் இருந்தனர். ஆனால், இந்த முறை பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் இருந்து நேரடியாக ரியாக்ஷன் வந்தது. அவர் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவை நேரில் சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், 'தீர்ப்புக்காகக் குறிக்கப்பட்டுள்ள 27-ம் தேதியன்று பெங்களூரில் தசரா கொண்டாட்டம், விநாயகர் சிலை ஊர்வலங்கள், டி20 கிரிக்கெட் என்று பல பரபரப்பான நிகழ்ச்சிகள் உள்ளன. அந்த நாளில் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ள ஒரு மாநில முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம். எனவே, வேறொரு தேதிக்கு தீர்ப்பை மாற்ற வேண்டும்’ என்று கேட்டிருந்தார். மனுவை படித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 'பெங்களூரில் மொத்த போலீஸ் எண்ணிக்கை எவ்வளவு?’ என்று கேட்டார். அதற்கு எம்.என்.ரெட்டி, '16 ஆயிரம் பேர்’ என்று பதில் சொன்னதும், 'இதை ஏன் நீங்கள் அன்றே சொல்லவில்லை. தசரா கொண்டாட்டம், விநாயர் சிலை ஊர்வலம் நடப்பது எல்லாம் உங்களுக்கு அன்றே தெரியும்தானே! பிறகு ஏன் கடைசி நேரத்தில் இதுபோன்ற கோரிக்கைகளுடன் வருகிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்துள்ளார்.  பிறகு, 'அவர்களில் 5 ஆயிரம் பேரை நீதிமன்றப் பாதுகாப்புக்கு அனுப்பினாலும், மீதி 11 ஆயிரம் பேரை வைத்து பெங்களூரு சிட்டியின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளலாமே?’ என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன், 'இனிமேல் தீர்ப்புத் தேதியை ஒத்திவைக்க முடியாது. வேண்டுமென்றால் டி20, விநாயகர் சிலை ஊர்வலங்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி, ரெட்டியை திருப்பி அனுப்பிவிட்டார்!''
''என்ன ஆச்சு பெங்களூரு போலீஸுக்கு?''
''இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து உளவுத் துறை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள் பெங்களூரு வந்தார்கள். அவர்கள், தேவையில்லாத விஷயங்களைக் கேட்டு கர்நாடக போலீஸ் அதிகாரிகளை பயமுறுத்திவிட்டார்கள். ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருப்பதால் ஏராளமான கண்டிஷன்களைப் போட்டார்கள். இதனால் பயந்துபோன கர்நாடக போலீஸார் இப்படி நாளைக் கடத்துகிறார்கள்’ என்றும், 'பெங்களூரு போலீஸாரை தங்கள் வசப்படுத்தி இப்படி இழுக்கச் சொல்கிறார்கள்’ என்றும் இரண்டு விதமான செய்திகள் உலா வருகின்றன. ஆனால், இதற்கு நீதிபதி குன்ஹா இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியின் பக்கமாக ஜெயலலிதா தரப்பு திரும்பியது!''
''அங்கு என்ன நடந்தது?''
''தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான என்.ராஜாராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை திடீரென சந்தித்தார்கள். 'ஜெயலலிதா தமிழக முதல்வராக இருக்கிறார். அவரது உயிருக்கு விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களால் ஏற்கெனவே அச்சுறுத்தல் உள்ளது. காவிரி பிரச்னையில் அவர் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளதால் கர்நாடகத்தில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே 27-ம் தேதி பெங்களூருக்கு வரும் ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, ஜெயலலிதாவின் விலைமதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்க கர்நாடகா நீங்கலாக வேறு ஏதாவது மாநிலத்தில் தீர்ப்பை வழங்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்கள். இதனை ஒரு மனுவாகக் கொடுத்தார்கள். 'இதற்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை நீங்கள் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் கொண்டு போய் கொடுங்கள்’ என்று சொன்னார். இவர்கள் அந்த மனுவை எடுத்துக்கொண்டு பதிவாளரிடம் போனார்கள். இப்போது அந்தப் பதவியில் இருப்பவர் ரவீந்திரா மைதானி. 'இப்படி ஓர் அதிகாரம் உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக வேண்டுமானால் தாக்கல் செய்து பாருங்கள்’ என்று சொன்னார்!''
''ஓஹோ!''
''உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் அவர்கள் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்ற குழப்பம் இவர்களுக்கு ஏற்பட்டது. அதனால் தயங்கியபடி கடந்த 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் ஓடியது. இந்த நிலையில் பெங்களூரு நீதிபதி குன்ஹா முன்பு ஆஜரான பெங்களூரு போலீஸ் அதிகாரி, 'நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்’ என்று 25-ம் தேதி காலையில் வந்து மனு கொடுத்தனர். அதனை குன்ஹா வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது பிரச்னை முடிந்தது மாதிரி தெரிந்தது. இனி ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே டெல்லியில் வேறு மூவ் ஆரம்பித்தது!''
''அப்படியா அது என்ன?''
''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உச்ச நீதிமன்ற பதிவாளரையும் இரண்டு வழக்கறிஞர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் இருவரும் ஒரு புதிய மனுவைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சார்பாக வழக்கறிஞர் என்.ராஜாராமன் அந்த மனுவை தாக்கல் செய்தார். பொதுநல வழக்காக இதனைத் தாக்கல் செய்தார்கள். 'நீதிபதி குன்ஹா 27-ம் தேதி தீர்ப்பு தருவதில் உறுதியாக இருக்கிறார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் அவர் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பை நீதிபதி ஏற்க முடியுமா? போலீஸாரால் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்ன பிறகும் நீதிபதி அதனை ஏற்க மறுக்கிறார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநிலத்துடன் நல்லுறவு இல்லை. ஏற்கெனவே கன்னட அமைப்புகள் முதல்வர் மீது கடுமையான கோபத்துடன் இருக்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் தீர்ப்பு தரும் நீதிமன்றத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் அல்லது தீர்ப்புச் சொல்லும் நாளன்று முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு 25-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு  நம்பர் ஆகிவிட்டது. 31959/ 2014 என்பதுதான் அந்த நம்பர் என்ற தகவல் சென்னைக்குச் சொல்லப்பட்டது. '26-ம் தேதி காலையில் இதனை விசாரணைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று அந்த வழக்கறிஞர்கள் இருவரும் முழுவீச்சில் இறங்கினர்.
'விசாரணைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பினால் போதும், அதன்மூலமாக ஒரு வாரம் இழுத்துவிடலாம்’ என்று நினைக்கிறது இந்தத் தரப்பு!''
''அப்படியானால்...?''
''27-ம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டால்தான் உறுதி. அதுவரை எதுவும் உறுதி இல்லை!''
''குன்ஹா என்ன நினைக்கிறாராம்?''
''சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதற்குக் கீழ், நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எழுதுவார். இதைத்தான் 'ஆபரேஷன் போர்ஷன்’ என்பார்கள். தன்னுடைய லேப்டாப்பில் தானே அவற்றை டைப் செய்துள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு எதற்காகவும் யாரையும் நீதிபதி சந்திக்கவில்லை. தினமும் காலை 11 மணிக்கு நீதிமன்றம் வருகிறார். தனது சேம்பரில் உட்கார்ந்து விடுகிறார். மாலை 5 மணிக்குத்தான் செல்கிறார். தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.''
''தீர்ப்பளிக்கும் இடம் தயாராகிவிட்டதா?''
''பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள காந்தி சதனில்தான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காந்தி சதன் ஜெயலலிதா தரப்புக்கு புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு நேரில் ஆஜராகி சாட்சி அளித்த இடம்தான் அது. மற்ற நாள்களில் சிறைக் கைதிகளுக்கான கவுன்சிலிங் மற்றும் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் இடமாக காந்தி சதன் செயல்படுகிறது. இங்குதான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது!'' என்ற கழுகார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கு பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்!
''சில மாதங்களுக்கு முன்னால் பெயர் குறிப்பிடாமல் நான் சொன்ன விஷயம் ஒன்று இப்போது வெளிப்படையாக வெடித்துள்ளது. ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சலுகை விலைக்கு அரசு நிலம் தரப்பட்டது. அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். 'தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட எத்தனையோ திட்டங்களை முடக்கும் அ.தி.மு.க அரசு இதனை மட்டும் அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டது’ என்றும் சொல்லியிருந்தேன். அதனை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு போய்விட்டார்கள்!''
''அப்படியா?''
''வழக்கறிஞர் கலைமணி என்பவர், 'இன்றைய மதிப்பில் சுமார் 188 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.44 ஏக்கர் நிலத்தை வெறும் 33 கோடி ரூபாய்க்கு அரசாங்கம் விற்றுள்ளது. இந்த விற்பனையில் பலமுறைகேடுகள் நடந்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் பலர் வெகுவாக ஆதாயம் அடைந்துள்ளனர். அடிமாட்டு விலைக்கு விற்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கேட்டிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், 'இந்த விவகாரத்தில் உரிய தீர்ப்பு வரும் வரை குறிப்பிட்ட அந்த இடத்தில்  நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே எந்த வேலைகளையும் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு போட்டுள்ளார். 'ஆளும் தரப்புக்கு ஆலோசகராக உள்ள ஓர் அதிகாரிதான் இதில் ஆதாயம் அடைந்தவர். அதை வைத்து விரைவில் மற்றொரு வழக்கு நேரடியாக அந்த அதிகாரியின் மீதே பாயப்போகிறது’ என்றும் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு எழுந்து பறந்தார் கழுகார்.
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், என்.ஜி.மணிகண்டன்
''நான் துறவி!?''
எத்தனை கோஷ்டிகள் எதிர்த்து நின்றாலும் அத்தனையும் சமாளித்து வளர்ந்து வரக்கூடியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தன்னுடைய பெயர் ராசிதான் தன்னைக் காப்பாற்றி வருவதாக அமைச்சர் நினைக்கிறாராம். அரசியலில் பெரிய பதவிகளைக் கைப்பற்ற ஆசைப்பட்ட ராஜேந்திர பாலாஜி நியூமராலஜி நிபுணர்களிடம் ஆலோசனை செய்ய திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள்கோயில் சுவாமி ரொம்பவும் பிரசித்தம். 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமானது. அதனால் பாலாஜி என்ற பெயரை உங்கள் பெயரோடு சேர்த்தால் நன்றாக வருவீர்கள் என்று கூறினார். 2004-ம் ஆண்டு அதுவரை கே.டி.ராஜேந்திரனாக இருந்தவர், பிறகு கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆனார். பெயர் மாற்றின நேரமோ, என்னமோ தெரியவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் சிவகாசி எம்.எல்.ஏ-வான கே.டி.ராஜேந்திர பாலாஜி அடுத்த இரண்டு மாதத்தில் 2011-ல் மாவட்டச் செயலாளர் ஆனார். அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ஒரே ஆண்டில் எம்.எல்.ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளரானது இவராகத்தான் இருக்கும்.
சமீபத்தில் இவர் மீது புகார் கிளம்பியபோது, ''அண்ணே எனக்கு என்ன குடும்பமா... குட்டியா.. நான் எதுவும் இல்லாத துறவி'' என்று சொன்னாராம். இப்போதும் அப்படித்தான் சொல்லி வருகிறாராம்!
''சோனியாவுக்கு விருந்து வைத்திருந்தால்...!''


கடந்த 24ம் தேதி மாலை அ.தி,மு.க சார்பில் ஸ்ரீரங்கம் வடக்குதேவி தெருவில்  அறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்தநாள்  பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக மைக் பிடித்த ஃபாத்திமா பாபு, பெங்களூரு வழக்கு பற்றி பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.
''தினமும் அம்மா. இரவு 11.30 மணிக்கு உறங்கப்போகிறார். அடுத்து அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து நமக்காக உழைக்கத் தொடங்குகிறார். இப்படி ஒருநாளின் 24 மணி நேரத்தில் 21 மணிநேரம் மக்களுக்காக உழைக்கும் தலைவர் அவர். அவர் யாருக்கும் அஞ்சான்.
கருணாநிதியைப்போல் கைதுக்கு அஞ்சி நாடகம் நடத்தியவர் இல்லை. போலீஸார் வழக்கில் கைது செய்ய வந்தபோது தானே முன்வந்து போலீஸாருக்கு முழு ஒத்துழைப்புத் தந்தார் என்பதை நாடறியும்.
சர்க்காரியா கமிஷனின் நடவடிக்கைக்கு பயந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி. ஒருவேளை அம்மா நினைத்திருந்தால் சோனியா காந்தியை போயஸ் கார்டனுக்கு  அழைத்து டீ பார்ட்டி கொடுத்திருந்தால் இப்போதுள்ள எல்லா வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட்டிருக்கும். ஆனால்,  அதைச் செய்தாரா அம்மா? இல்லை. காங்கிரஸ் துரோகத்தை அம்பலப்படுத்தி வெற்றி பெற்றார். அதேபோல அவர் மீதான வழக்கில் வெற்றி நிச்சயம்'' என்று சொல்லி முடித்தார்.
மாற்றம் தந்ததா பெங்களூரு?


உளவுத் துறையில் கடந்த இரண்டே முக்கால் வருடம் ஐ.ஜி பதவியில் இருந்தார் அம்ரேஷ் பூஜாரி. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெங்களூரு விசிட் குறித்த பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனிக்க கடந்த வாரத்தில் அங்கே அம்ரேஷ் விசிட் போயிருந்தார். திரும்பி வந்ததும், முதல்வரை கோட்டையில் சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே... அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். போலீஸ் துறையின் டம்மியான பதவியான போலீஸ் அகாடமிக்கு அம்ரேஷ் தூக்கியடிக்கப்பட்டார்.
அம்ரேஷ் தரப்பில், 'அவரது மகன் ப்ளஸ் டூ படிப்பதால், உடன் இருந்து கவனிக்க நேரம் தேவைப்படுவதால் டம்மி பதவிக்குக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார்' என்கிறார்கள். ஆனால், போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''ஐ.பி.எல் விவகாரத்தில் தொடர்பு உடைய சிலருடன் அம்ரேஷ§க்கு தொடர்பு இருந்ததாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை ரிப்போர்ட்டில் ஓர் இடத்தில் வருகிறது. இந்த ரிப்போர்ட் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்துக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.  அதையடுத்துதான், முதல்வர் நடவடிக்கை எடுத்து மாற்றினார்'' என்கிறார்கள்.  
''சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தில் இவரிடம் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய அசைன்மென்டை சரிவர நிறைவேற்றவில்லை. சென்னை எழும்பூரில் தனியாக இருந்த 'எம்மா’ என்கிற முதியவரை கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளியை சென்னை மாநகர போலீஸ் நெருங்கியபோது, அம்ரேஷ் பெயரைப் பயன்படுத்தினார்கள். குழப்பம் ஆன விசாரணை அதிகாரிகள் உடனே இதுபற்றி கமிஷனரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, குற்றவாளியை கைது செய்துவிட்டனர். ஆனால், கைது செய்த அதிகாரி அடுத்த சில நாட்களில் சென்னையைவிட்டே தூக்கியடிக்கப்பட்டார். ஆவின் கலப்பட ஊழல் விவகாரத்தில் உரிய நேரத்தில் உளவுத் துறை மூலம் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க அம்ரேஷ் தவறிவிட்டாராம்'' என்று சொல்லி சிலர் அடுக்குகிறார்கள்.
''கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே, டி.ஜி.பி ராமானுஜத்துக்கும் அம்ரேஷ§க்கும் பனிப்போர் நடந்து வந்தது. முன்பெல்லாம் இவர் நேரடியாகவே முதல்வருக்கு உளவுத் தகவல்களை சொல்லிவந்தார். ஆனால், அதற்கு தடை விதித்து டி.ஜி.பி அலுவலகம் மூலம்தான் முதல்வருக்கு தகவல்கள் போகவேண்டும் என்று சொல்லப்பட்டதாம்'' என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment