விண்ணில் பிழை திருத்தம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்- கன்ட்ரோல் ரூமிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்
நகம் கடிக்கும் தருணம் என்பார்களே அதுதான் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் இருந்த நிலை. பெங்களூரை அடுத்த பீன்யா எனும் இடத்தில் உள்ள விண்கல கட்டுப்பாட்டு மையத்தில் (Mission Operations Complex MOX) எங்கும் பரபரப்பு சூழ்ந்திருந்தது. அறுபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் குழுமி இருந்தாலும்கூட, இரைச்சலே இல்லை; அடிக்குரலில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு, சீட்டு நுனியில் பதற்றத்துடன் உட்கார்ந்து கணினித் திரையில் வரும் தரவுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தனர். அவர்களுடைய பதைபதைப்பு குறையவில்லை. கண்களில் பதற்றமும் உடலில் சோர்வும் தெளிவாகத் தெரிந்தது.
சரியாக எட்டுமணி. எங்கும் மகிழ்ச்சி அலை, உற்சாகக் கூச்சல், இன்ப அதிர்ச்சியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் சொல்லி வைத்ததுபோல எழுந்தனர், ஒருவரை ஒருவர் கட்டி ஆரத் தழுவினர்.
ஆம், இந்திய விண்கலம் செவ்வாயை அடைந்துவிட்டது. செவ்வாயின் பாதை யில் அது புகுந்தது உறுதிபடுத்தப்பட்டது.
பின்னடைவும் சீரமைப்பும்
செவ்வாய்க்கு மிக அருகே 512 கி.மீ. தொலைவில் விண்கலம் கடந்து சென்றது என்றும், 24 நிமிடங்களுக்குப் பதிலாக சுமார் 23 நிமிடங்கள்தான் இன்ஜின் இயங்கியது என்றும், அதிலேயே தேவையான வேகக்குறைப்பு கிடைத்துவிட்டது என்றும், பின்னர் கிடைத்த தகவல்களைக் கொண்டு உறுதி செய்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். மேலும், சோதனை அளவில் செவ்வாயின் புகைப்படத்தையும் எடுத்துள்ளனர். எதிர்பார்த்தது போல் 248 கி.மீ. x 79,916 கி.மீ. பாதையை எட்டியது என்றும் தெரிவிக்கின்றனர்.
இன்ஜின் இயங்கியபோது அதில் மொத்தம் இருந்த 280 கிலோ எரிபொருளில், 250 கிலோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 கிலோ எரிபொருளைக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு மேல் விண்கலத்தை இயக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பதைபதைப்பு ஏன்?
இருந்தாலும்கூட, நேற்று முன்தினம் காலை கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் பதைபதைப்புடன்தான் இருந்தனர். இருக்காதா பின்னே? `வாராது வந்த மாமணியை' போல செவ்வாய் நோக்கி அனுப்பப்பட்ட மங்கள்யான் என செல்லமாக அழைக்கப்படும் ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’ விண்கலம் அந்த நேரம் முக்கிய கட்டத்தில் இருந்தது.
காலை நான்கு மணிக்கு அதன் இடைநிலை அண்டெனா (medium gain antenna) எதிர்பார்த்தபடி இயக்கம் பெற்றது. சுமார் 6:56 மணிக்கு இருபத்தியொரு நிமிடத்துக்கு நீளும் விண்வெளியில் குட்டிக்கரணம் அடிக்கும் இயக்கம் தொடங்கியது. 7:17 மணிக்கு அதன் திரவ இன்ஜின் இயங்கியது. அடுத்த நான்கு நிமிடங்களில் விண்கலம் செவ்வாயின் பின்புறம் சென்றது. செவ்வாயின் பின்புறம் சென்ற பிறகு, பூமியோடு விண்கலம் தொடர்புகொள்ள முடியாது. எனவேதான், விஞ்ஞானிகள் பதைபதைப்புடன் இருந்தனர்.
முக்கிய தருணங்கள்
செவ்வாயின் பின்புறம் விண்கலம் இருந்தபோதுதான் மிகமிக முக்கிய இயக்கங்கள் நிகழவேண்டும். செவ்வாய்க்கு பின்புறம் விண்கலம் மறைந்து இருக்கும் போதுதான் விண்கல வேகம் குறைக்கப்பட்டு செவ்வாயின் பாதையில் புகவேண்டும்.
விண்கலத்தை செவ்வாய் நோக்கி செலுத்துவது ஒரு வகையில் மாங்காயை நோக்கி கல்லை எறிவது போலதான் என்றாலும், மாங்காயை நோக்கி வீசப்படும் கல் நெத்தியடி போல சரியாக மோதவேண்டும். ஆனால், செவ்வாய் கிரகம் நோக்கி வீசப்படும் விண்கலம் செவ்வாயில் மோதிவிடக்கூடாது. செவ்வாய் அருகே சென்ற பின், அதன் வேகம் குறைந்து, செவ்வாயின் ஈர்ப்பு புலத்தில் தவழ்ந்து விழ வேண்டும்.
வேகக் குறைப்பு
எனவே, செவ்வாய் அருகே விண்கலம் செல்லும்போது எதிர்திசையில் நெக்கிப்பொறியை (thruster) இயக்கி எதிர்விசை தரவேண்டும். எதிர்விசையால் விண்கல வேகம் மட்டுப்படும். இந்த நேரத்தில் இன்ஜின் செயலிழந்து போனால், கேட்ச் பிடிக்கத் தவறிய பந்துபோல செவ்வாயின் பிடியிலிருந்து விண்கலம் தவறிவிடும்.
விநாடிக்கு 22.1 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் அந்த விண் கலத்தை விநாடிக்கு 4.316 கி.மீ. என்ற வேகத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும். வேகம் கூடிவிடவும் கூடாது; குறையவும் கூடாது. இது முள்ளில் விழுந்த சேலையை அகற்றுவது போல மிக மிக சிக்கல் மிகுந்த பணி.
சவாலான நிமிடங்கள்
அதுமட்டுமல்ல, செவ்வாய் சுற்றுப்பாதை யில் மங்கள்யான் புகும்போது செவ்வா யின் இரவு நேரத்தில் வலம் வரும். அதனால் சூரிய ஒளியிலிருந்து விண்கலம், மின்சாரம் தயாரித்துக்கொள்ள முடியாது. எல்லா இயக்கங்களுக்கும் தேவையான மின்சாரத்தை தன்னிடம் உள்ள மின் கலனிலிருந்துதான் பெறவேண்டும்.
அந்த தருணத்தில் மங்கள்யான் சுமார் 200 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தது. எனவே, அங்கிருந்து ரேடியோ தகவல் பூமியை வந்தடைய சுமார் பன்னிரெண்டு நிமிடங்கள் பிடிக்கும். எனவே, இன்ஜின் இயங்கினாலும்கூட, காலதாமதத்துக்குப் பிறகே தரவுகள் பூமியை வந்து அடையும்.
கடைசி கவுன்ட் டவுன்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற இந்த நிலையில்தான் விஞ்ஞானிகள் இருந்தனர். சரியாக 8 மணிக்கு செவ்வாயின் பின்புறமிருந்து மங்கள்யான் வெளிப்படும். அப்போது அதன் முக்கிய அண்டெனா இயங்கி பூமியுடன் தொடர்புகொள்ள வேண்டும். அதற்குத்தான் விஞ்ஞானிகள் காத்துக்கிடந்தனர். அவ்வாறு வெளிப்படும்போது வரும் தகவல்தான் விண்கலத்தில் திட்டமிட்ட வேகக்குறைப்பு அடைந்ததா, செவ்வாயின் பாதையில் புகுந்ததா என்பதை அறியமுடியும்.
சரியாக எட்டு மணிக்கு விண்கலத்திலிருந்து “தேன் வந்து பாய்வது போல” அந்தத் தகவல் வந்தது. விண்கலம் விநாடிக்கு 1,099 மீட்டர் வேகத்தை அடைந்தது என்ற தகவல் கட்டுப்பாட்டு அறையை வந்து சேர்ந்ததுதான் தாமதம், அனைவர் மனதிலும் நிம்மதிப் பெருமூச்சு. இந்திய விண்கலம் செவ்வாயின் பாதையில் புகுந்துவிட்டது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
சிகரம் தொட்டவை
செவ்வாய்க்கு செல்லும் பயணம் கடினமானது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில், 30 தோல்வி கண்டிருக்கின்றன. 21 ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. சமீபத்தில் ஜப்பான், சீனா அனுப்பியவையும் தோல்வியே கண்டன. உலகில் செவ்வாய்க்கு சென்ற நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமல்ல, முதல் ஆசிய நாடு, முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற கூடுதல் பெருமைகளையும் இந்தியாவுக்கு இஸ்ரோ ஈட்டித் தந்துள்ளது.
செப்டம்பர் 22-ம் தேதி மங்கள்யான், திட்டமிட்ட பாதையில் 99.5% தொலைவை பழுதின்றிக் கடந்துவிட்டது. அன்றுவரை 297 நாட்கள் உறங்கிக் கிடந்த இன்ஜின் பழுதில்லாமல் சோதனை இயக்கத்தில் இயங்கியது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. 440 நியூட்டன் நெக்கிப்பொறி எஞ்சின் எனும் இந்த இன்ஜினில் திரவ எரிபொருளும் ஆக்சிஜனும் சேர்ந்து கலவையாகி எரியும். அவ்வாறு எரியும்போது உந்துவிசை ஏற்படும். இந்த இன்ஜின் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதிதான் கடைசியாக இயக்கப்பட்டது. அதன் பிறகு இந்த செப்டம்பர் 22-ல் தான் இயக்கப்பட்டது.
இந்த இன்ஜின் செப்டம்பர் 22 பிற்பகல் 2.30 மணிக்கு வெறும் 3.968 விநாடிகளே இயக்கப்பட்டது. அதற்கு 596 கிராம் எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த உந்துவிசையால் விண்கலம் கூடுதலாக விநாடிக்கு 2.14 மீட்டர் வேகம் பெறவேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இருந்தாலும் விநாடிக்கு 2.18 மீட்டர் கூடுதல் வேகம் கிடைத்துள்ளது. இந்த வேறுபாட்டால் விண்கலத்தின் இயக்கத்துக்கு எந்த பாதகமும் இல்லை என இஸ்ரோ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விண் பிழை திருத்தம்
ஓரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அதுபோல இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை இயக்கம் செய்துவிட்டு உறங்கியிருந்த இன்ஜினை தட்டி எழுப்பும் பணியை மட்டும் செய்யவில்லை அதே இயக்கத்தைக் கொண்டு விண்கலப் பாதையில் தேவையான பிழை திருத்தத்தையும் செய்துவிட்டனர். விண்வெளியில் பத்து மாதம் சென்றபோது ஏனைய வான் பொருட்கள் மங்கள்யானின் மீது தாக்கம் செலுத்தியதால், அதன் பாதையில் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.
இதே பாதையில் பிழை திருத்தப்படா மல் விண்கலம் சென்றிருந்தால் செவ்வாயி லிருந்து 700 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, செவ்வாயின் தடத்தில் புகுந்திருக்கும். ஆனால், திட்டமிடப்பட் டிருந்ததோ 500 கி.மீ. இந்த பிழை திருத்தத்துக்குப் பிறகு எதிர்பார்க்கும் 500 கி.மீ. உயரத்தில் செவ்வாயின் தடத்தில் விண்கலம் புகும் என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இப்போது திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுள்ளது மட்டுமல்ல, இதுவரை மங்கள்யானில் எந்தப் பழுதும் இல்லை. அதில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகளும் சரிவர இயங்குகின்றன. திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுகொண்டிருக்கிறது. செவ்வாய் பாதையில் மங்கள்யான் புகுந்துள்ள இந்தத் தருணம், இந்திய அறிவியல் புதிய சகாப்தம் படைப்பதற்கான அடையாளம் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment