Thursday, September 25, 2014

நவராத்திரி சுபராத்திரி

கொலு தத்துவம் : நவராத்திரியை ஒட்டி, வீடுகளில் கொலு வைக்கிறார்கள். பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் என்னும் கீழ்நிலை பருவத்தில் இருந்து மனித பொம்மைகள், மகான்கள், தெய்வங்களின் பொம்மைகளை கொலு படிக்கட்டில் வரிசை வாரியாக வைப்பதன் மூலம், கீழ்நிலையில் இருந்த நாம் மனிதப்பிறவிகளாக வடிவெடுத்துள்ளதை உணர வேண்டும். மனிதப்பிறவி மகத்தான பிறவி. இந்தப் பிறவியில் இருந்து மீண்டும் கீழ்நிலைக்கு வந்து விடாமல், மகான்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் விளங்கி, ஆதிபராசக்தியுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதையே கொலு பொம்மைகள் உணர்த்துகின்றன. கொலுவை வெறும் கண்காட்சியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் படிநிலையை உயர்த்தும் ஆன்மிக சிந்தனையுடனும் பார்க்க வேண்டும்.

புரட்டாசியை தேர்ந்தெடுத்தது ஏன்?



ஆண்டு முழுவதும் வழிபடுவதை விட, புரட்டாசியில் வரும் நவராத்திரி சமயத்தில் அம்பிகையை வழிபடுவது வாழ்வில் மிகுந்த நன்மையை தரும். இந்த மாதம் அடைமழை காலத்தின் துவக்கம். இந்த சமயத்தில் மனிதர்களை நோய்கள் தாக்கும். இதிலிருந்து பாதுகாப்பு வேண்டி கருணைக்கடலான அம்பாளை வணங்குகிறோம். சுண்டல் வகைகளை இந்தக் காலத்தில் சாப்பிடுவது கூட, தோல் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளத்தான். அறிவியலை ஆன்மிகத்துடன் சேர்த்து குழைத்து நவராத்திரி என்னும் விழாவாகத் தந்திருக்கிறார்கள் நமது முன்னோர். 


கொண்டைக்கடலை சுண்டல்:




நவராத்திரியில் அம்பாளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டுமல்லவா! இதோ! சுண்டல் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்...

தேவையான பொருட்கள்:கொண்டைக் கடலை: 1 கப், சிகப்பு மிளகாய்: 2, எண்ணெய்: 2 ஸ்பூன், கடுகு: அரை டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு: அரை டீ ஸ்பூன், கறிவேப்பிலை: 1 இணுக்கு, நறுக்கிய கொத்துமல்லி: 1 ஸ்பூன், பச்சை மிளகாய்; 3, இஞ்சி: சிறிதளவு, துருவிய தேங்காய்: 1 ஸ்பூன், உப்பு: தேவையான அளவு. 


செய்முறை:



பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த்துருவல் மூன்றையும் கலவையாக அரைத்துக் கொள்ளவும். கொண்டைக் கடலையை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சிகப்பு மிளகாய், உளுந்தம் பருப்பு மூன்றையும் சேர்க்கவும். பின்னர் வேக வைத்த கொண்டைக் கடலையை அதில் போட்டு சிறிது நேரம் வதக்கவும். உப்பு, அரைத்த கலவையைக் கலக்கவும். நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையைத் தூவிக் கொண்டால் சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயாராகி விடும்.

பெண்களே ஜாக்கிரதை!



கதை கேட்பது என்றால், எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் நான்கு சக்கர வாகனத்தில் கம்பீரமாக வரும் ஒரு பெண்ணுக்கு அறிவுரை சொல்லும் கதையென்றால்...... ரொம்பவே பிடிக்கும். நான்கு சக்கர வாகனம் எது? அவள் யார்? என்பவற்றையெல்லாம் பிறகு பார்க்கலாம்.

மிகுந்த பலம் கொண்ட திறமைசாலியாக இருந்தான் ஒரு முட்டாள். தட்டிக் கேட்க ஆளில்லாமல் தவறுகளைத் தவறாமல் செய்து வந்தான். ஆண் மக்கள் அனைவரும் அவனிடம் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். அவனைத் தட்டிக் கேட்கவும், அவன் அடங்கா விட்டால், அவனைக் காலடியில் போட்டு மிதிக்கவும் தீர்மானித்து பெண் ஒருத்தி புறப்பட்டாள். அவளைக் கண்ட முட்டாள்,""பெண்ணே! அழகான நீ என்னிடம் சண்டைக்கு வருகிறாயே? என்னைத் திருமணம் செய்து கொண்டால் என்றென்றும் நன்றாக வாழலாம். மறுத்தால் பின்னால் வருத்தப்படுவாய். இப்படித் தான் உன்னைப் போல ஒரு பெண் இருந்தாள்.... விரும்பி வந்தவர்களை விரட்டி விட்டு, பின்னால் சீரழிந்து போனாள். அவள்....'' என்று கதை சொல்ல தொடங்கினான். அந்த முட்டாள் சொன்ன கதை இது தான்!

சிங்கள தேச மன்னனின் மகள் மந்தோதரி(ராமாயண மண்டோதரி அல்ல) அவளுடைய அழகைக் கேள்விப்பட்டு அரச குமாரர்கள் பலர் மணக்க முன் வந்தனர்.அவர்களை விரட்டி அனுப்பி விட்டு,""அறிவுள்ளவள் கல்யாணம் செய்து கொள்வாளா?'' என்று பிரசங்கம் வேறு செய்தாள். மந்தோதரியின் தங்கைக்குத் திருமணம் நடந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து மந்தோதரியின் மனம் மாறியது. தன் தந்தையிடம் போய்,""நான் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று தீர்மானமாகச் சொன்னாள். தந்தையோ நடுங்கிப் போனார். ""மகளே! திருமணம் வேண்டாம் என்று மறுத்த நீ இப்போது இவனைப் பேஞிஞிஞிஞிய் விரும்புகிறாயே? பாவத்தின் சின்னமான இவன் செய்யாத குற்றம் இல்லை......'' என்று ஒரு பட்டியலே வாசித்தார். ஆனால், மந்தோதரியோ உறுதியாக நின்று அவனையே மணம் செய்து கொண்டாள். அப்புறம் என்ன? அவளின் வாழ்வே சின்னாபின்னமாகிப் போனது. கதையை முடித்த முட்டாள்,""பெண்ணே! அந்த மந்தோதரி துயரப்பட்டதைப் போல நீயும், விரும்பி வரும் என்னை விலக்கினால், பின்னால் வருந்துவாய்'' என்றான்.அதைக் கேட்டு, அந்த பெண் ஏறி வந்த ஃபோர் வீலர் தன் வாலை முறுக்கி கர்ஜித்தது. அதன் நான்கு கால்களும் பாயத் தயாராயின. அது ஒரு சிங்கம். அதன் மேல் அமர்ந்திருந்தவள் அம்பிகை. அந்த முட்டாள் தான் மகிஷாசுரன். அசுரனைக் கொன்ற அம்பிகை மகிஷாசுரமர்த்தினி என நாமம் பெற்றாள்.

பதவி, பண பலத்தால் திமிர் பிடித்த ஆண்மை, பெண்மையைப் புகழ்ந்து பேசும் போது சிக்கிக் கொள்ளாமல், ஆற்றலை மட்டும் பெண்மை வெளிப்படுத்த வேண்டும். மகிஷாசுரன்கள் பலவிதமாகப் பேசத் தான் செய்வார்கள். அவர்களைத் தள்ளி மிதிக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு அடிபணியக் கூடாது.

No comments:

Post a Comment