Thursday, September 25, 2014

நவராத்திரி விரத பலன்...

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்திரி.  

நவராத்திரி விரத காலம்...

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன் (நவராத்ரே து ஸம்ப்ராப்தே கிம் கர்தவ்யம் த்விஜோத்தம...). அதற்கு வியாச மகரிஷி, 'நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக் குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம். ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வியாசர் கூறுகிறார்.


'கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் நமக்கு உதவும் என்பது முன்னோர் வாக்கு.

அருள் தரும் நவராத்திரி!

'நவ’ எனில் ஒன்பது; 'ராத்ரீ’ எனில் இரவு. ஆக 'நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். 'நவ’ எனில் 'புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும்.
அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு ('விச்வஸ்ய பீஜம்’). அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.


விரத நியதிகள்...
ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.

நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு  முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.


அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.

''தாயே... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

விரிவான பூஜை இயலாதெனில்...

சரி... இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண்டா?

இதற்கு  மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். 'இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், 'அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம்.

உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்துக்கு எல்லாம் மூலமான தாயை (''யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:'') வணங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!

நவராத்திரி விரத பலன்...

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை... குமாரி முதலாக 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு.

No comments:

Post a Comment