Tuesday, May 17, 2011

ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்…


ஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை – ரஜினியைச் சந்தித்த பின் மோடி, சந்திரபாபு நாயுடு பேட்டி!

ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்… அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் வெளிநாடு போக வேண்டிய அவசியமே இல்லை, என ரஜினியைச் சந்தித்த பின்னர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.

ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்ற வைபவத்தில் பங்கேற்க வந்த மோடி, பிற்பகல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

ஜோக்கடித்து சிரித்துப் பேசிய ரஜினி…

அதன்படி அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 7வது வார்டில் உள்ள ரஜினியைச் சந்தித்தார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த மோடி, “நண்பர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். ஜோக்குகள் சொல்லி சிரிக்க வைத்தார். எனக்கென்னமோ அவர் தனது விடுமுறையை இங்கே ஜாலியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சில தினங்களில் முழு வீச்சில் அவர் திரும்புவார். எனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன்,” என்றார்.

நரேந்திர மோடியுடன் பாஜக தலைவர்கள், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோரும் ரஜினியைப் பார்க்கச் சென்றிருந்தனர்.

வெளிநாடு போக வேண்டிய அவசியமில்லை…

சந்திரபாபு நாயுடுவும் ரஜினியை இன்று ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின்னர், வெளியில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு ரஜினி உடல்நிலை பற்றிக் கூறுகையில், “ரஜினி என் மிகச் சிறந்த நண்பர். அவரை நான் இப்போதுதான் சந்தித்துவிட்டு வந்தேன். ரஜினி நலமாக, நன்றாக உள்ளார். வழக்கம்போல மிக சுறுசுறுப்பாக உள்ளார். அவருக்கு எதுவும் ஆகாது. அவருக்கு சிறுசிறு உடல்கோளாறுகள் உள்ளன. ஆனால் அவற்றிலிருந்து அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் எந்த வெளிநாட்டுக்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். அவரது அன்பர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார்.

சோ வேண்டுகோள்…

பத்திரிகையாளரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சோ கூறுகையில், ”என்னைப்போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,” என்றார்.


No comments:

Post a Comment