Wednesday, May 18, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை-சீமான் கோரிக்கை

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல் தீர்மானத்தை ஜெயலலிதா நிறைவேற்றவேண்டும் என்றார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வேலூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

2009 மே 18-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் துயரத்தை லண்டன், அமெரிக்கா, இலங்கை உள்பட உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தேசிய துக்க நாளாக நினைவு கூறுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் புதன்கிழமை மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்.

மலர்ந்திருக்கும் புதிய அரசு அதிமுக அரசு அல்ல. அது தமிழர் அரசு. ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் வாடும் நளினி உள்ளிட்டவர்களை புதிய அரசு விடுதலை செய்யவேண்டும்.

யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்று தமிழக மக்கள் தெளிவாக முடிவுஎடுத்துள்ளனர்.

இலங்கை இனப்படுகொலை செய்த நாடு, அந்த நாட்டின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும். இதன்மூலம் தமிழ் இனத்திற்கு மறுவாழ்வு கிடைக்க அழுத்தம் கிடைத்ததுபோல் அமையும் என்று முதல்வர் ஜெயலலிதா இரு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.

எனவே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவும் இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மலர்ந்திருக்கும் தமிழர் அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

புதுக்கோட்டையில் கொலைசெய்யப்பட்ட தோழர் முத்துக்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து புதிய அரசு கைதுசெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment