Thursday, May 19, 2011

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச கோளாறு மற்றும் இரைப்பை நோய் காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.

அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு நேற்று நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கை:

நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு மற்றும் குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சிகிச்சைகளின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேற்கொண்டு நடக்கும் சிகிச்சையின் தன்மை கருதி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவு?

ரஜினியின் முழு உடல் பரிசோதனை முடிவுகள் மற்றும் திசு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு பிரச்சினையையும் மிக கவனமாக சரிசெய்து வருகின்றனர் மருத்துவர்கள்.

ரஜினிக்கு சுவாசக் கோளாறு சீரடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து சிறுநீரகங்களை ஒழுங்காக செயல்பட வைக்க சில சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியாக இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டயாலிஸிஸ்

சிறுநீரகங்கள் இன்னும் சீரான செயல்பாட்டுக்கு திரும்பாததால், ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு அவசரம் கருதி, அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே மார்புப் பகுதியில் தேங்கியிருந்த திரவத்தை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இந்த டயாலிஸிஸுக்குப் பிறகு சிறுநீரகங்கள் சீரான செயல்பாட்டுக்குச் திரும்ப வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment