Tuesday, May 17, 2011

மக்கள் இனி அச்சமின்றி, சுதந்திரமாக வாழலாம்: ஜெ.,

மக்கள் இனி அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம்,'' என்று, முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தெரிவித்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, கோப்புகளில் கையெழுத்திட்ட பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


* இலவச அரிசி போன்ற திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டுள்ளீர்கள். இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது வழங்கப்படும்?


இப்போது தான் பொறுப்பேற்று உள்ளேன். சில மணி நேரங்களே ஆகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தும் வழங்கப்படும்.


* மின்வெட்டு பிரச்னையை தீர்க்க என்ன செய்ய உள்ளீர்கள்?


அவை பற்றி எல்லாம் துறையினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும்.


* கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் செயல்படுத்தப்படுமா?


கேபிள், "டிவி' தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை, விரைவில் செயல்படுத்துவோம்.


* நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்தீர்கள். அதை எவ்வாறு சரி செய்வீர்கள்?


நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


* அமைச்சரவையில் பழையவர்கள், புதியவர்கள் என கலந்து உள்ளார்களே?


அனைத்து மாவட்டங்கள், மதங்கள், ஜாதிகள் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது எனது குறிக்கோள். அதற்கேற்ப, அமைச்சரவை பட்டியல் தயாரித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். அனுபவம் வாய்ந்த பழைய கட்சியினரும், புதியவர்களும் கலந்ததாக அமைச்சரவை அமைந்துள்ளது.


* கோட்டையில் நிர்வாகத்தை நடத்துகிறீர்கள், புதிய தலைமைச் செயலகம் என்ன ஆகும்?


அதுபற்றி அமைச்சரவை கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்.


* முதல்வர் பொறுப்பேற்றது தொடர்பாக மக்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் தகவல் என்ன?


கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகமே இல்லாத நிலை இருந்தது. அரசு நிர்வாகப் பணிகள் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் மட்டும் மாநிலம் பின்தங்கவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. அனைத்தும் சீரழிக்கப்பட்டு விட்டது; சீரழிந்துவிட்டது. மீண்டும் நிர்வாகத்தை நிர்மாணிக்கும் பணியை துவக்க வேண்டும். விலைவாசியை குறைக்கவும், மின்வெட்டு பிரச்னையை தீர்க்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வேளாண்மை, நெசவுத் துறை போன்றவற்றை வளர்க்கவும், அனைத்துவித தொழில்களையும் வளர்ச்சிப் பாதைக்கு திட்டமிட்டு கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம்.


* சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி உள்ளது?


கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்ந்தனர். ஊடகங்கள் கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்தது. இனி, அனைவரும் சுதந்திரமாக வாழலாம். ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்துள்ளது. மக்கள் முழு விடுதலை பெற்றுள்ளனர். நேற்று கூட, செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்து விட்டதாக கேள்விப்பட்டேன். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஆந்திரா மாநிலத்துக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். தமிழக மக்களுக்கு இனி அச்ச உணர்வு தேவையில்லை. கணவன் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினால், வீட்டில் மனைவி உயிருடன் இருப்பாரா என்று அச்சப்பட தேவையில்லை. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். தமிழகம் செழிப்பாகும். இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்வு பெறும்.


* டில்லிக்கு செல்வீர்களா, சோனியா அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வீர்களா?


டில்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க உள்ளேன். டில்லி செல்லும் போது, மற்ற சந்திப்புகள் குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment