Monday, May 23, 2011

பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி


பாகிஸ்தான் கடற்படை முகாமில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலைவரை வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் அமைந்துள்ள இந்தக் கடற்படை முகாமுக்குள், தீ கொழுந்துவிட்டு எரிவதை வெளியேயிருந்தே காணக்கூடியதாக இருந்தது.

நன்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று, கடற்படை முகாமுக்குள் நேற்று நள்ளிரவுக்குச் சற்றுமுன் ஊடுருவியது. அவர்களுக்கு கடற்படை முகாமின் உள்ளேயுள்ள அமைப்புப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்பதை அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

கடற்படை முகாமுக்குள் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடாத்தினால் வெடித்துச் சிதறும் என்று இலக்கு வைத்தே அவர்கள் தாக்குதல்களை நடாத்தினார்கள். நள்ளிரவுக்குச் சற்றுமுன் தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இன்று அதிகாலைவரை தொடர்ந்துகொண்டிருந்தது.

விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகே இன்று அதிகாலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு

குறிப்பிட்ட இந்தக் கடற்படை முகாமின் பெயர் சமீபத்தில்தான் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. காரணம், விக்கிலீக்ஸால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஒன்றில், இந்த முகாம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய யுத்த தளவாடங்கள் இந்த முகாமுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட P-3C ரகத்திலான ரோந்து விமானங்களும், கடலில் செலுத்தப்படக்கூடிய ஏவுகணைகளும் இங்குதான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.” இதுதான், விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து வெளியாகியிருந்த தகவல்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, இன்று காலை இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கவே கடற்படை முகாம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

தாக்குதல் செய்தி கிடைத்து இன்று அதிகாலை வேறு ராணுவ முகாம்களில் இருந்து வந்த பாகிஸ்தானின் ராணுவத்தினர்.

தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானின் சில டீ.வி. சானல்கள் கடற்படை முகாமுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை லைவ்வாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தன. முகாமுக்கு உள்ளே அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானம் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதையும், அதன் பின்னணியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதையும் அந்த வீடியோ ஃபூட்டேஜ்களில் காணக்கூடியதாக இருந்தது.

பாகிஸ்தான் கடற்படைக்கு மிகவும் முக்கியமான தளம் இது. அதைவிட இந்தத் தளத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுக்கு கடல் வழியாக ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவென அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரண்களில் இந்தக் கடற்படை முகாமும் ஒன்று.

இந்த முகாமிலிருந்து வெறும் 30 கி.மீ. தொலைவிலேயே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது!

அதனால்தான் இந்தத் தாக்குதல் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகளால் எப்படி இந்த முகாமுக்குள் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை பாகிஸ்தான் ராணுவம் தேடிக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் இன்று அதிகாலை காலை கராச்சிக்கு விரைந்திருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment