Saturday, August 20, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 11

இவர் ஒரு முரட்டு பக்தர் அல்ல. வரட்டு பக்தர். தலைமைக்கே அடிக்கடி தண்ணி காட்டுபவர். இவரைக் கட்டுப்படுத்த தலைமையே பலமுறை திணறியிருக்கிறது. மேடைப் பேச்சானாலும், சட்டமன்றமானாலும் இவரின் நையாண்டிப் பேச்சுக்கு அளவே இருக்காது. தனது வாழ்நாளில் பாதிக்குமேல் சட்டசபையில் கழித்துவிட்ட இவருக்கு அங்கே தனி வரலாறு இருக்கிறது. எனவே, பலமுறை அவை மீறல்களுக்கு ஆளானவர். முருகனைப் போல் ஆண்டியாக அரசியல் மலையில் ஏறியவர். பின்னாளில் வேட்டி கட்டிய வெள்ளைக்கார துரைகணக்காய் வளம் தேடிக்கொண்டவர். நீர், நிலம், ஆறு, மணல், மலை என இயற்கைகளின் இறக்கைகளில் அமர்ந்து இன்று இமயம் தொட வளர்ந்தவர்.
06
கட்சியை வளர்க்க இவரும், இவரை வளர்க்க கட்சியும் பரஸ்பரம் பயன்படுத்தப்பட்டனர். உட்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி அவ்வப்போது அதிரடி பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டுவிட்டு அமைதியாக இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி.

எந்த இடமானாலும் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு நிமிடம் தூங்கிவிடுவார். ஆட்சி மாற்றத்திற்குப் பின் அமைதியாக வந்து போய்க்கொண்டிருக்கும் அவரின் மனசாட்சியை பேசும்படி கேட்டோம். இதோ அவரின் வாக்குமூலம்.

‘‘சினிமாவில் நடிக்க வேண்டுமென சீரியஸாக திட்டமிட்டிருந்த நேரத்தில் அரசியல் களம் என்னை ஆரத் தழுவிக்கொண்டது. நாடக மேடைகளில் நான் நீட்டி முழக்கிய வசனங்கள் அரசியலுக்குக் கைகொடுக்கும் என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். காதல், வீரம் என கலந்து நடித்த படங்களிலெல்லாம் காதல் காட்சிகளே என்னைக் கவர்ந்திழுக்கும். கதாநாயகியின் சேலையை வில்லன் உருவும் காட்சிகளை சிரித்தபடி நான் ரசித்தபோது, அரசியலுக்கும் அது பயன்படும் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆரால் சினிமா ஆசையை வளர்த்துக்கொண்ட என்னை அரசியல் பக்கம் அனுப்பி வைத்ததும் அவர்தான். என் சினிமா எண்ணத்தை அவரிடம் சொன்னபோது அரசியல் நடிப்பே என்னுள் அதிகமாக இருப்பதாக அளவுகோல் வைத்தது அவர்தான். இந்த மேடையிலும் ஏறக்குறைய நாற்பது வருடங்களைக் கடந்து வந்துவிட்டேன். எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள். ஏற்றங்களின் போதெல்லாம் நான் இறுமாப்புக் கொண்டாலும் தாழ்வுகளின்போது நான் துவண்டுபோனதில்லை. அடுத்த வாய்ப்புக்காக ஆயத்தப்படுத்திக்கொள்வேன். வாய்ப்புகளே என்னை வளர வைத்துள்ளன.

நாடு சுதந்திரம் பெற்றபிறகும் சில குடும்பங்கள் சுதந்திரம் பெறாமல் கொத்தடிமைகளாய் இருப்பார்கள். அந்த கூலி வேலை செய்யும் குடும்பம் தங்கள் முதலாளியின் குடும்பத்தை ‘ஆண்ட வீடு’ என்று அழைப்பார்கள். தொழிலாளியின் குடும்பத்தை ஆண்டதாலோ அல்லது அண்டிப் பிழைத்ததாலோ அப்படி அழைப்பார்கள். நாங்களும் ஒரு குடும்பத்தை அண்டிப் பிழைத்தோம். ஈச்சம் ஓலை முதலியார் குடும்பம்தான் எங்களின் ‘ஆண்ட வீடாக’ இருந்தது. என் சகோதரி, சகோதரர்கள், தாய், தந்தை என ஆறு பேரும் அந்த வீட்டில் தஞ்சமடைந்தே வாழ்ந்து வந்தோம். என் தந்தை, முதலியாரின் வயல்களில் ஏரோட்ட வேண்டும். அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம். மற்றவர்கள் வயல் மற்றும் வீட்டு, மாட்டு வேலைகளை கவனிக்க வேண்டும். ஆனாலும், நான் மட்டும் படிப்பைத் தொடர்ந்தேன். எட்டாம் வகுப்புவரை பக்கத்தில் இருந்த பள்ளியில் படித்துவிட்டு எஸ்.எஸ்.எல்.சி. படிப்புக்கு ரயில் ஏறிச் சென்றேன். தினமும் காலையும், மாலையும் திருட்டு ரயில்தான். இதை நானே மேடைகளில் சொல்லிப் பெருமைப்படுவேன். அப்போதெல்லாம் நான் சட்டத்தை மதிக்காததால்தானோ என்னவோ பின்னாளில் சட்டமும், பொதுப்பணியும் என் சகாக்களாகிப்போனது.

பள்ளியிலிருந்து சென்னையில் கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் ஊருக்கு ஒருமுறை வந்து போகவே ஒன்பது ரூபாய் தேவை. பணம் இல்லாததால் நான் பல நாட்கள் விடுதியில் தங்கினேன்.

விடுதிக்கும் மாதம் தொண்ணூறு ரூபாய் கட்டணம். ஆரம்பத்தில் எல்லாவற்றையுமே எங்கள் முதலாளி குடும்பம் கவனித்துக்கொண்டது. அந்த நாட்களில்தான் ஈரோட்டிலிருந்து காஞ்சிபுரம் பிரிந்து வந்தது. அந்த கரை வேட்டிகளின் கச்சேரி எனக்கு பிடித்துப் போனதால் அவர்களின் கூட்டங்களில் நான் அவ்வப்போது தலைகாட்டுவேன். படிப்படியாக ஏறி மைக்கைப் பிடித்தேன். என் மேடைப் பேச்சு என்னை அரசியல் வட்டாரத்தில் அறிமுகம் செய்தது. அந்த நேரத்தில்தான் சட்டக் கல்லூரியில் தேர்தல் வந்தது. மாணவத் தலைவருக்குப் போட்டியிட்டேன். செலவழிக்க கையில் பத்துப் பைசாகூட இல்லை. ஆனாலும், தைரியமாக தேர்தலில் நின்றேன். எங்கள் குடும்பத்தை வாழவைத்த முதலியார் குடும்பத்தில் அந்த அம்மாதான் தனது ஒட்டியாணத்தை எடுத்துக் கொடுத்தார். அந்தப் பணத்தில்தான் என்னால் வெற்றி பெறமுடிந்தது. அதாவது, கையில் காசில்லாமல் தேர்தலை சந்திப்பதெப்படி? அடுத்தவர் பணத்தில் வெற்றி பெறுவதெப்படி? போன்ற வித்தைகளை அப்போதே நான் கற்றுக்கொண்டேன்.

அந்த வெற்றி விழாவிற்கு வந்த எங்கள் தலைமையும், புரட்சித் தலைமையும் என் பேச்சைக் கேட்டார்கள். மேடையிலிருந்து இறங்கிய புரட்சி, ‘எந்த உதவிகள் வேண்டுமானாலும் வா’ என்று கூறிவிட்டுப் போக, அடுத்த வாரமே அவரை சந்திக்க நான் வரிசையில் நின்றேன். என்னை வரவேற்று ‘என்ன வேண்டும்?’ என்று அவர் கேட்டதற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். ‘நீ அரசியல் மேடையிலேயே அழகாக நடிக்கிறாய்’ என்று கூறி அனுப்பியதோடு என் எஞ்சிய படிப்புச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் நான் அவரை எதிர்த்து நீண்ட அரசியல் பயணம் செய்ய நேர்ந்தது. ஆனாலும், அவர் மீதான பாசம் மட்டும் என் நெஞ்சில் அப்படியே இருந்தது. அதேபோல் என் திருமணமும் தலைமையின் முன்னிலையில் புரட்சியின் ஆசியுடன்தான் நடைபெற்றது.

கட்சியின் அன்றைய தலைமை மறைந்து இன்றைய தலைமை தலைமையேற்றது. புதிய அமைப்பு, புதிய தேர்தல், புதிய வேட்பாளராக நான், தேர்தல் களத்தில் வெற்றியைப் பறித்தேன். அன்றுமுதல் நான் சந்தித்த பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் எட்டில் வெற்றியை எட்டிப் பிடித்தேன். அதில் மூன்றுமுறை சுழல்விளக்கு எனக்கு சல்யூட் அடித்தது. அந்தக் காலம் எல்லாமே பொற்காலம்தான். நான் நினைத்ததெல்லாம் நடந்தது. அண்ணன், தம்பி என அனைவரையும் வளர்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் அனைவருமே கோடிகளில் புரண்டார்கள்.

எங்கள் பகுதியில் எதிர்க்கட்சியின் முன்னாள் சுழல் விளக்கின் கல்லூரி ஒன்றிருக்கிறது. அதற்கு சமமாக கல்லூரி கட்ட நினைத்தேன். என் வாரிசின் பார்ட்னரான கழுகு கட்டடக்காரர் ஒருவரின் உதவியுடன் போடாத சாலை, கட்டாத கட்டடம் என்று பில் போட்டு வாங்கியதுடன், கமிஷன் தொகைகளை சேர்த்து சுமார் முப்பத்தைந்து கோடியில் ஒரு கல்லூரி கட்டினேன். உலக ரட்சகனுக்கு டில்லியில் பதவி, மத்தியில் சுழல் விளக்கு என உறுதி செய்து அதன் பிரதிபலனாக அந்தக் கல்லூரியின் உள்கட்டமைப்பை அழகுபடுத்தினேன். ஆனாலும், எதிர்க்கட்சியின் கல்லூரியை என்னால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கடத்தல் மணலே விண்ணைத் தொடும் அளவுக்கு விரிந்து கிடந்தது. அதன் புகைப்படங்கள்கூட எங்கள் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல் என் உடன்பிறப்பு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் எடுத்து விற்பனை செய்தார். அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்றும், அங்கு ஆழ்துளை அமைக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்குப் போட்டார் ஒரு ஏழை. ஒருநாள் மர்மமாக அந்த ஏழை இறந்து போக, அந்த ஏரியாவே கப்சிப். அதேபோல் என் சமபந்தி பெங்களூர்காரர் என்பதால் கர்நாடகாவை என் வியாபார ஸ்தலமாக்கிக் கொண்டேன்.

ஆரம்பத்தில் என் தலைமையின் இரு வாசல்களிலும் நான் காவலுக்கு நின்றேன். பின்னர் பால், வேல் அதைப் பகிர்ந்துகொள்ளவே நான் அங்கிருந்து விலகிவிட்டேன். அதேபோல் தலைமை தன் வாரிசை வளர்த்ததை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். பின்னர் அதை மாற்றிக்கொண்டு ‘வாரிசு வாழ்க’ என குரல் கொடுத்ததும் நான்தான்.

அதேபோல் யார் முன்னிலையிலும், எந்த சூழ்நிலையிலும் தலைமையை விமர்சித்துப் பேசுவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்.

ஒருமுறை தலைமையின் பாராட்டு விழாவுக்கு சினிமாக்காரர்கள் என்னிடம் சீட்டு எடுத்துக்கொண்டு வந்தார்கள். இரண்டு நாட்கள் அவர்களை அலைக்கழித்து பின்னர் எதுவும் தரமுடியாதென்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அண்ணே தலைமைக்காகத்தான்...’ என்று இழுக்க நானோ ‘யோவ்... அந்த தலைமைகிட்டயே போய்ச் சொல்லு. நான் பத்துப் பைசா தரமாட்டேன். நானே வசூல் பார்ட்டி. எங்கிட்டயே வசூலுக்கு வர்றீங்களா. நான் இவரப் பாத்து கட்சிக்கு வரல... அண்ணனைப் பார்த்து அரசியலுக்கு வந்தவன்’னு எகிறி குதிக்க ஆடிப்போனது சினிமா கும்பல். கிரிஏல மலையில் ஒரு பகுதியை வளைத்துக்கொண்டே போக தலைமைக்கு அந்த தகவல் அனுப்பப்பட்டது. கோபத்தோடு ஸ்பாட்டுக்கு வந்த தலைமை, அந்த இடங்களை அப்படியே எழுதி வாங்கிக்கொண்டு புறப்பட்டது.

அதேபோல் பட்டுக் கம்பெனியொன்றை எங்கள் குடும்பம் கபளீகரம் செய்த செய்தி எங்கள் தலைமைக்குத் தெரிய, அதை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது. சிலர் திரும்பக் கொடுத்தபிறகும் என் உடன்பிறப்பு பத்து கிரவுண்டை கொடுக்காமலேயே வைத்துக்கொண்டார். அதன் மதிப்பு இன்று சுமார் ஐம்பது கோடியாகும். அதேபோல் என் சென்னை வீட்டின் அருகில் வீடு வாங்கிய ஒருவரை செயலில் சிட்டு மூலம் மிரட்டிப் பார்த்தேன். அதுவும் புகாராக தலைமைக்குப் போய்விட்டது. இப்படி என்னைப் பற்றி தலைமைக்குப் புகார் போனதெலலாம் சமாளித்துத் தந்தது நாதன்தான்.

இந்த தொடர் புகார்களால் நான் செய்துவந்த பொதுப்பணியை தலைமை
நிறுத்தச் சொன்னது. தலைமை அலுவலகப் பணிகள் நடந்துக்கொண்டிருந்த நேரம் அது. அதில் ஒரு பட்ஜெட்டைப் போட நான் கணக்குப் போட அதற்கு தடை போட்டுவிட்டது தலைமை. அதைத் தொடர்ந்து தலைமைக்கும் எனக்கும் தொடர்ந்து சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள். கோபத்துடன் விமானமேறிவிட்டேன். நேரடியாக தலைமையே சமாதானம் செய்ய அமைதியடைந்து திரும்பினேன். மேடைகளில் அமர்ந்திருந்தாலும் சரி, மன்றத்தில் அமர்ந்திருந்தாலும் சரி கொஞ்ச நேரம் இடைவெளி கிடைத்ததும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொள்வேன்.

அதேபோல் பெயரில் குடிகொண்ட ஒரு ஊராட்சித் தலைமையின் பின்பக்கக் கதவு எனக்கு பழக்கமான ஒன்று. பட்டுகிராமம் அருகில் உள்ள அணை அருகே ஒரு விருந்தினர் மாளிகை. அங்கு நான் பலமுறை விருந்தினர்களுடன் சென்று சாப்பிட்டிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே எனது சினிமா ஆர்வம், விருந்தினர்களை தேர்ந்தெடுப்பதிலும் வந்து தலைகாட்டிவிட்டுப் போகும்.

எந்த மேடையானாலும் அதை நான் என் வசப்படுத்திவிடுவேன். பார்வையாளர் கவனத்தைத் திருப்ப ஒரு உத்தியைக் கையாளுவேன். அதாவது, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து என் அஸ்தியை தொகுதி முழுவதும் தெளித்துவிடும்படி கூற, எதிரில் இருப்பவர்கள் கலங்கிப் போவார்கள். ஆனால், நானோ அஸ்தி என்பதை அழுத்தமாக இரண்டுமுறை உச்சரிப்பேன். காரணம், கட்சிக்காரர்களின் காதில் அது ஆஸ்தி என்று விழுந்துவிட்டால் என் சொத்தை எடுத்து கரைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான். அதேபோல் சாதாரணமாக கட்சிக் காரர்கள் தலைமையையோ, வாரிசுகளையோ வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைப்பதை பெருமையாக நினைப்பார்கள். ஆனால், நானோ இதுவரை தலைமையையும் சரி, யாரையும் சரி வீட்டிற்கெல்லாம் அழைத்ததே இல்லை. அதற்கு சில பல காரணங்கள்.

அதேபோல் கடவுள் மறுப்பாளனாக அனைவராலும் அறியப்பட்ட எனது சொந்த ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கிடாவெட்டி திருவிழா எடுப்பது நான்தான் என்பது பலருக்குத் தெரியாது.

எந்தச் சூழ்நிலையையும் எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது எனக்கு கைவந்த கலை. ஆனால், இன்றைய சூழ்நிலை எனக்கு எதிராக பயன்பட்டு விடுமோ என்ற அச்சம் என்னை நெருடிக்கொண்டிருக்கிறது.

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சுமார் பத்து வருடங்களாக தொகுதியில் கட்சிக்காரர்களிடம் கூறி வரும் நான், உங்களிடமும் அதையே கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்’’

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment