Friday, August 26, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 12

சாதாரணமாக வாழ்க்கையைத் துவங்கும் பலரில் சிலர் மட்டுமே உழைத்து சம்பாதித்து உயர்கின்றனர். சிலரோ மற்றவர்களைச் சுரண்டி வளர்ச்சியடைகின்றனர். இவர் உழைத்ததும் இல்லை, சுரண்டியதுமில்லை. மற்றவர்களை சுரண்ட வைத்து வளர்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சிக்கிம், பூட்டான், மேகாலயா என இவரின் பிடியில் சிக்கித் தவிக்காத குடும்பங்கள் இல்லை.

சில நடுத்தர குடும்பங்களையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கு உண்டு.

வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு என விளம்பரம் செய்யவேண்டிய அளவிற்கு ஆபத்தானதுதான் இவரது தொழிலும். எத்தனையோ ஏழைப் பெண்களின் கண்ணீ ரும், சாபமும் இவருக்கிருக்கிறது. சிலர் செய்யும் தொழிலில் சில ஏமாற்று வேலைகளைச் செய்வார்கள். ஆனால், இவரோ ஏமாற்று வேலையையே தொழிலாய் செய்பவர்.

அதற்கு சில அரசாங்கமும் இவருக்கு அனுமதி கொடுத்திருப்பதுதான் சோகத்தின் உச்சம்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை எந்த நேரத்திலும் சந்திக்கும் வல்லமை படைத்த இவர், இப்போது குடும்பத்தினரைக்கூட பார்க்கமுடியாத நிலை.

செய்த பாவத்தைத் தொலைக்க இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரின் மனசாட்சியைப் பேசச் சொன்னோம். இதோ அவரின் வாக்குமூலம்:

நான்கு மாதம் முன்புவரை இளைஞனாக ஓடித் திரிந்த என்னை இப்போது ஒரு முதியவனைப்போல் முடக்கி வைத்திருக்கிறார்கள். என் வரவுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருந்த காலம் போய், இப்போது நான் கம்பிக் கதவுக்குப் பின்னால் காத்திருக்கிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற தவறான வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறான வழியிலே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன் நான்.

பர்மாவில் பிழைக்கச் சென்ற தமிழ்க் குடும்பம் எங்களுடையது. நான் பிறந்தபோது எனது தந்தை பர்மாவில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அதில் ஆயிரம் டாலர் பரிசுத் தொகை விழுந்தது. அதுதான் எங்கள் குடும்பம் முதலில் பார்த்த அதிகப் பணம். அதன்பிறகு எங்களின் குடும்பத் தொழில் லாட்டரிப் பக்கம் திரும்பியது. அந்த நாட்களில் பர்மாவில் கள்ள லாட்டரிகள் கிளை விரித்துப் பரவ அந்நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடையும் நிலை. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. நாங்கள் குடும்பத்துடன் பர்மாவை விட்டுப் புறப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம். அருணாசலப் பிரதேசத்தில் ஒரு அட்ரஸை உருவாக்கி குடியமர்ந்தோம்.

அங்குதான் எங்களின் வியாபாரப் பார்வை ஆரம்பத்தில் விழுந்தது. லோக்கலிலிருந்த சின்னச் சின்ன அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு எங்களின் புதிய சாம்ராஜ்யத்திற்கு ராஜபாட்டை அமைத்தோம். கொஞ்ச நாட்களில் நானே நேரடியாகக் களம் இறங்கினேன். வியாபாரத்தைப் பெருக்க அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தினேன். வியாபாரம் ஓஹோவென உயரத் தொடங்கியது.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களான சிக்கிம், பூட்டான், மேகாலயா, இமாசல்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் பறந்து பறந்து வியாபாரம் செய்தேன். பல இடங்களில் அரசாங்கமே என் வரவுக்காகக் காத்திருந்தது. அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக அவர்கள் லாட்டரி டிக்கெட் விற்பனையை நடத்தி வந்தார்கள். நான் அவர்களிடம் நேரடியாகப் பேசி முடித்து ஒட்டுமொத்த குலுக்கல் வியாபாரத்தை எனக்கே வரும்படியாக செய்தேன்.

ஒரு மாநிலத்தில் ஒரு குலுக்கலுக்கான பம்பரில் சுமார் ஐம்பது சீரியலில் தலா ஒரு லட்சம் டிக்கெட்டுகளை அடிக்க அனுமதி வாங்கிக்கொண்டு ஒவ்வொரு சீரியலும் தலா பத்து லட்சம் டிக்கெட்டுகளை அடித்து விற்பனை செய்வேன். அதாவது, இந்த வியாபாரத்தில் அரசாங்கத்தைவிட நூறு மடங்கு அதிக லாபம் எனக்கே கிடைக்கும். அதும ட்டுமின்றி முதல் இரண்டு பரிசுகளும் மற்றவர்களுக்கு விழாதபடியும் பார்த்துக்கொள்வேன்.

கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை தமிழகம், கேரளா, ஆந்திரா என தென்இந்திய மக்களுக்கும் திருப்பினேன். கோவையில் குடோன்கள் அமைத்து, சீட்டுக்களை சீக்ரெட்டாக அடுக்கி வைத்தேன்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆட்களை நியமித்து அந்தந்த மாநிலத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தேன். அமைச்சர்களை சரிக்கட்டி ஆர்டர் எடுக்கவேண்டியது அவர்களின் வேலை. முதல்வர்களை நான் கவனித்துக்கொள்வேன். அதன்படி சிக்கிமுக்கு சூரியன், நாகாலாந்துக்கு நிலவழகன், அருணாசலத்துக்கு பிரேம் போட்ட கண் ணாடி, பூட்டானுக்கு கிருஷ்ணபிரான், கேரளாவுக்கு மறைந்த பாரதப் பிரதமரின் பெயர் கொண்டோரை போஸ்டிங் போட்டுக் கொடுத்துவிட்டேன். கம்ப்யூட்டரில் இணைந்த மனோபாவம் கொண்டவரை பிரிண்டிங் இன்சார்ஜாக போட்டு வைத்தேன். எந்த மாநிலச் சீட்டாக இருந்தாலும் இரண்டு நிமிடங்களில் போலியைத் தயாரித்து வருவதில் கி ல்லாடிகள். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தவும், அரசியல் வெளிவிவகாரங்களைப் பார்க்கவும் விசுவாச மானவர்களை வேலைக்கு வைத்தேன். இவர்களுக்குக் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

அதாவது, தனியாக ஒரு தலைமைச் செயலகம் இயங்கி வருவதைப்போல சீட்டுக்களின் தலைமையிடமாக எங்களின் சீட்டிங் குடும்பமே இயங்கியது.
அஸ்ஸாம் மாநிலத்தின் டெல்லி கதர்ப் புள்ளியான மணியானவருடன் சேர்ந்து அம்மாநிலத்தில் இருபத்தைந்தாயிரம் கோடி கொள்ளையடித்ததைக் கேட்டு ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ந்துபோனது. அதேபோல் நாகாலாந்தில் நான் மட்டுமே தனியாக ஐயாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில் பல கட்சித் தலைவர்களுக்கு மூச்சு நின்றுபோனது. அதுமட்டுமின்றி பஞ்சாபில் ஒரு மாதத்தில் மட்டும் நான் பதின்மூன்று கோடி ரூபாயை கள்ள வியாபாரத்தில் கல்லா கட்டியதாக ஒரு அறிக்கை வெளிவந் தது. ஆனாலும் என் வியாபாரம் எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருந்தது.

ஆனாலும், மேற்கு வங்கம் மட்டும் அடிக்கடி என்னிடம் முரண்டு பிடித்தது. அங்கு நிதித்துறையைக் கவனித்த சுழல் விளக்கு, என் கள்ள வியாபாரத்தால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக, வியாபாரத்திற்குத் தடை செய்து என்னைக் கைது செய்து சிறையில் வைக்கவேண்டும் என்று பலமுறை கூறிவந்தார்.

ஆனாலும் மற்ற மாநிலங்களில் நடந்த வியாபார வேகத்தில் இதையெல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை. காரணம், இந்தியா முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி சீட்டுகளை என்னால் விற்க முடிந்தது. அதாவது, ஒரு ஆண்டுக்கு பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய் எங்கள் கம்பெனியின் டர்ன் ஓவர்.

எனது தொழிலுக்குப் போட்டியாக தமிழகத்திலும் சிலர் முளைக்கத் தொடங்கினார்கள். மதுரையிலிருந்து ஒரு பிரமுகரும், கதராடைப் போட்ட இஸ்லாமியப் பிரமுகர் ஒரு வரும் களத்தில் குதித்தனர். அதில் இஸ்லாமியப் பிரமுகர் ஆயிரம் கோடிகளை அமுக்கிக்கொண்டு தொழிலிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

நானோ, தொழிலை விட்டபாடில்லை. எனக்கும் அரசியலில் நுழையலாம் என்ற ஆசையிருந்தது. ஆனால், இந்தியா முழுக்க எத்தனையோ மாநிலங்களில் என்மீது வழக்குகள் காத்துக் கிடக்க, எனக்கு அரசியல் அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனாலும், இருக்கவே இருக்கிறது நம் தமிழ்நாடு என இங்கே அரசியல் பிரவேசம் செய்யக் களம் இறங்கினேன். ராஜாங்க சபையில் என்னை அமர வைப்பதாக ஆரம்பத்தில் கூறினார்கள். அதன்பிறகு அந்தப் பேச்சு முடிந்துவிடவே ஒரு மது பானத் தொழிற்சாலைக்கு அனுமதி வாங்க முயற்சி செய்தேன். அதன் முன்னோட்டமாகத்தான் அரசியல் முக்கியப் புள்ளியை அடிக்கடி சந்தித்தேன். சினிமா பற்றிப் பேசினாலே சிலிர்த்துப் போகும் அவரிடம் சினிமா பற்றியே அடிக்கடி பேசினேன். அவரை இளைஞனாக வடிவமைக்கத் திட்டமிட்டு இறங்கினேன். பல கோடிகளை செலவழித்து பிரமாண்டப்படுத்தினேன். என்னாலேயே இரண்டாவது முறை பார்க்கமுடியாத அதை, அனைவராலும் பாராட்டப்படுவதாகப் பேச வைத்தேன்.

அப்போதுதான் சினிமா உலகம் என்னை கண் சிமிட்டி அழைத்தது. அந்த மல்லிகை நடிகையின் மகத்துவம் அறிந்து மறக்காமல் அவரை அழைத்து வந்தேன். வயது வரம்பின்றி அவர் இயல்பாய் நடித்தார்.

பல வழக்குகளில் தொடர்புடைய என்னுடன் மேடையேற வேண்டாம் என பலர் சொன்னதையும் பொருட்படுத்தாமல் அந்த முக்கியஸ்தர் எனக்கு முக்கியத்துவம் தந்தார். மொழி விழாவிலும் குழு ஒன்றில் உறுப்பினராய் என்னை சேர்த்துவிட்டார்கள். அந்தக் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கள்ள வியாபாரியாக நானும் இருந்தேன்.

தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலச் செலவை கவனித்துக்கொள்ளச் சொன்னார்கள். இரண்டு மாவட்டத்திற்கும் அள்ளியிறைத்தேன். முடிவுகளோ நாங்கள் நினைத்ததற்கு மாறாக அமைந்தது.

ஏற்கெனவே எங்களின் வியாபாரத்தைத் தடுத்தவர்களே அரியணையில் அமர்ந்தார்கள். அவர்களுக்கும் நான் அரசியல் தூது விட்டுப் பார்த்தேன்.

பாதாளம் வரைக்கும் பாயும் பணம் இந்த விஷயத்தில் தோட்டத்து வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

எந்தச் சூழ்நிலையிலும் எங்களை மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை. எத்தனையோ குடும்பங்களின் அழிவிற்குக் காரணமாயிருந்த என் வியாபாரத்தையும், என்னையும் காப்பாற்றக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். விதி விஸ்வரூபமெடுத்துவிட்டது. என் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக இப்போது சேர்க்கப்படுகிறது. ராஜ உபசாரத்தோடு வலம் வந்த நான் இப்போது சுத்தமான காற்றுக்கும், சுவையான உணவுக்கும் லாட்டரி அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

No comments:

Post a Comment