Saturday, August 20, 2011

அதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட்

ஜாபர் சேட் மீது வழக்குப்பதிவு, அவரது வீடுகளில் ரெய்டு, சஸ்பெண்ட்’ என்று பரபரப்பாக இருந்த வழக்குகள்,கடந்த ஒரு மாதமாக சத்தமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை விசாரணையின்போது ஜாபர் சேட் மிரட்டியதாக குபீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
01
கடந்த தி.மு.க.ஆட்சியில், ஆட்சியாளர்கள் மீது எழுந்த விமர்சனத்தைவிட, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் மீது எழுந்த விமர்சனங்கள்தான் அதிகம்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பின் மூலம் அனைத்துக் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகி, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு, தி.மு.க. தலைமைக்கு ‘சுடச்சுட’ செய்திகளைக் கொடுத்துக் குளிர்வித்தவர் ஜாபர் சேட்.

அதோடு நிறுத்திக் கொண்டாரா? அ.தி.மு.க.. எம்.எல்.ஏ.க்களை இழுத்து வந்து தி.மு.க.வில் சேர்த்த பெருமையும் இவரையே சாரும். இதனால், இவர் மீது அ.தி.மு.க. தலைமைக்கு கூடுதலாகவே கோபம் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

தனது அதிகாரத்தை தமிழகத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய தி.மு.க.வினரைக் காப்பாற்ற டெல்லி வரை இறங்கி வேலை பார்த்தார்.டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைத்துவிடுவதாகச் சொல்லி, ஆதிஷ் அகர்வாலா என்ற வழக்கறிஞரைக் கொண்டு வந்தார்.

அவருக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவியையும் கடந்த மார்ச் மாதம் வாங்கிக் கொடுத்தார். ஜாபர் சேட்டின் நடவடிக்கையைப் பார்த்து தி.மு.க. வழக்கறிஞர்களே மூர்ச்சையானார்கள்.

இரவும், பகலும் பாராமல் ஆளும்கட்சிக்காக உழைத்த ஜாபர் சேட்டுக்கு பலன் கிடைக்காமலா இருந்திருக்கும்? இதற்குப் பரிகாரமாக ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் மனை கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கான ஆதாரங்களுடன் ஜாபர் சேட் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் வீட்டில் ரெய்டும் நடத்தினார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார். அப்போது, ஜாபர் சேட் வீட்டில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இவ்வளவு நடந்த பிறகு ஜாபர் சேட் பயந்து போயிருப்பார் என்று நினைத்தால் அது தவறு. அதற்குப் பிறகும் பழைய நினைப்பில் தனது அதிகார தோரணையை அவிழ்த்துவிட ஆரம்பித்திருக்கிறார் ஜாபர் சேட். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரை ஜாபர் சேட் மிரட்டுகிறார் என்ற புதிய குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘ஜாபர் சேட் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டு,அவை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஜாபர் சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய பிறகு, அவர் விசாரிக்கப்பட்டார். இரண்டு மணி நேரம் நடந்த விசாரணையின் போது, எவ்வித ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்த ஜாபர் சேட், எல்லா கேள்விகளுக்கும் அலட்டிக் கொள்ளாமல் ஏடாகூடமாகப் பதில் அளித்தார்.

“வீட்டு வசதி வாரிய முறைகேடுகள் தொடர்பாகத்தானே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தீர்கள்? அதை விட்டுவிட்டு சி.டி.க்கள் குறித்து எப்படி விசாரிப்பீர்கள்? எஃப்.ஐ.ஆர். போட்ட வழக்கைத் தவிர வேறு எதையும் பற்றி விசாரித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என்று அதிகாரத் தோரணையில் குரலை உயர்த்தி இருக்கிறார் ஜாபர் சேட்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும், கைப்பற்றப்பட்ட சி.டி.க்களை என்ன செய்வது என்று தெரியாமல், வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர். ஜாபர் சேட்டும், தன் சார்பில் ஆஜராக நல்ல வழக்கறிஞரைத் தேடி வருகிறார்.

தனக்காக ஆஜராகும் வழக்கறிஞர் எந்தக் கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக, டெல்லியில் இருக்கும் சில சீனியர் வழக்கறிஞர்களை நாடி இருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது வழக்குப் போட ஆலோசித்து வருகிறார் என்றே தோன்றுகிறது.

தன் மீது கிரிமினல் வழக்குப் போட்டதே செல்லாது என்று அவர் முதலில் வழக்குப் போடுவார் என்று ஜாபர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில் தன் மீது துறை ரீதியான விசாரணை நடத்திய பிறகே, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறி அவர் வழக்குப் போட முயற்சித்து வருகிறார்’’ என்றனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இந்நிலையில், ‘ஒரு வழக்குக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விட்டு வேறு வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது தவறு’ என்று ஜாபர் சேட் கூறுவது பற்றி வழக்கறிஞர் வட்டாரங்களில் விசாரித்தோம்.

‘‘இந்தக் கூற்று முற்றிலும் தவறு. எந்த ஒரு வழக்கு தொடர்பாகவும், போலீஸார் சோதனை நடத்தும்போது, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்து புதிய வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, அந்த ஆதாரங்களை வழக்கை விசாரிக்கும் உரிய அமைப்பிடம் ஒப்படைப்பதற்கும் போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது.

உதாரணமாக, சோதனை நடத்தும் போது ஒருவர் வீட்டில், அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு கரன்சி இருந்தாலோ அல்லது போதைப் பொருள் இருந்தாலோ அது தொடர்பாக விசாரிக்க, அந்த ஆதாரங்களை அமலாக்கப் பிரிவுக்கும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கும் அனுப்பி வைக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வழக்கு இருக்கும் போது, மற்றொரு வழக்குப் போடலாமா என்ற கேள்விக்கே இடமில்லை’’ என்றனர் திட்டவட்டமாக.

எது எப்படியோ, ஜாபர் சேட் வீட்டில் சோதனை நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அதன்பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் வேகம் குறைந்துவிட்டது. இதற்கு ஜாபர் சேட்டின் மிரட்டல்தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது நெருக்கடியா? என்பது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே தெரிந்த ‘சிதம்பர’ ரகசியம்.

ஷகில் சிக்குவாரா?

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மனைவிகள் சங்கச் செயலாளராக ஷாபர் சேட்டின் மனைவி இருக்கிறார். அவர் சென்னை மாநகர கூடுதல் கமிஜனராக இருந்த ஜகில் அக்தரின் மனைவியோடு சேர்ந்து தனியாக பிஸினெஸ் செய்து வருகிறாராம். அரசு அதிகாரியின் மனைவி பிசினெஸ் செய்தால் அரசுக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. தனது மனைவி பிசினெஸ் செய்வதை ஷாபர் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், ஜகில் அக்தர் சொல்லவில்லை என்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தொடர முடியுமாம். இவர், டெல்லியில் மத்திய அமைச்சரிடம் ஓ.எஸ்.டி.யாக இருந்தபோது சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்


No comments:

Post a Comment