
இளங்கோவனிடம் பல வருடங்களாகத் தனி உதவியாளராக இருந்த சண்முகராஜ், நெகிழ்வான குரலில் நம்முடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
''பேரறிஞர் அண்ணா அவர்கள் - பரிமளம், இளங்கோவன், ராஜேந்திரன், கௌதமன் என்று நான்கு பேரைத் தத்தெடுத்து வளர்த்தார். தன் இரண்டாவது வளர்ப்பு மகனான இளங்கோவன் மீது அவ்வளவு பிரியம் அண்ணாவுக்கு. இன்று ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் பல எம்.பி-க்கள், மந்திரிகள் எல்லோரையும் கைதூக்கிவிட்டவர் இளங்கோவன்அய்யாதான்!
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் உள்ள பலர் கோடிகளாக சம்பாதித்தபோது, இந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் குடும்பத்தாரோ குடியிருக்கக்கூட சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்தார்கள்.
சிங்கிள் பெட்ரூம் கொண்ட அரசு வாடகைக் குடியிருப்பில் சுமார் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். இதோ, இப்போது டபுள் பெட்ரூம் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இதை வாங்குவதற்கு மூன்று ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருந்தியவன் நான்.
அண்ணாவை வெளியீட்டாளராகக்கொண்டு வெளிவந்த 'காஞ்சி’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக இளங்கோவன் இருந்தார். மூத்த பத்திரிகையாளர் எனும் தகுதியில் மாதம் 3,000 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தார். 'அண்ணாவின் வளர்ப்பு மகன் 3,000 ஓய்வு ஊதியத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறதே... அவரின் துன்ப நிலை என்ன?’ என்பது அப்போதைய முதல்வர் யோசித்திருக்க வேண்டாமா? ஓடி வந்து உதவி செய்திருக்க
வேண்டாமா?!
இரண்டு மாதங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து விட்டார் இளங்கோவன்.

இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவச் செலவே, இரண்டு மூன்று லட்சங்கள் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று அலைந்து, நண்பர்களின் உதவியால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. 'அண்ணாவின் மகன் மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றிதான் இறந்துபோனார்’ என்கிற உண்மை, அண்ணாவைத் தங்கள் கொடிகளில் எல்லாம் வைத்திருக்கும் கட்சிக்காரர்களுக்குத் தெரியுமா?
தேவைகளே இல்லாத மனிதர் இளங்கோவன். சட்டையைக்கூட இஸ்திரி போடாமல்தான் அணிவார். அவர் நினைத்து இருந்தால், அரசியலில் களம் கண்டிருக்க முடியும். ஆனால், வாரிசு அரசியலை ஒருபோதும் ஆதரித்தது இல்லை அண்ணா.
தன்னால் எந்த ஒரு களங்கமும் தன் தந்தை ஆரம்பித்த கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். 'தகுதி இருந்தால் தலைவன் ஆகலாம்!’ என்றவர் அண்ணா. அதற்கு ஏற்றபடியே வாழ்ந்தும் காட்டினார்.
அந்தப் பெருமைகொண்ட குடும்பத்தாரின் மாண்பு, 'தனயனாக இருந்தால், தலைவன் ஆகலாம்!’ என்று இன்று வாரிசு அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!'' என்று வருத்தத்துடன் முடித்தார் சண்முகராஜ்.
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை டிஸ்சார்ஜ் செய்யும் போது 30 ஆயிரம் ரூபாய் குறைந்ததாம். உறவினர் ஒருவரின் நண்பர் இந்த பரிதாப நிலையைப் பார்த்து தனது கிரடிட் கார்டு மூலமாகப் பணம் கொடுத்தாராம். இளங்கோவன் மனைவி விஜயாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாம். அந்தத் தொடர்பில் தயாளுவுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார்.
10 ஆயிரம் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்தாராம் தயாளு. சொந்த வீடும் இல்லாமல், சொத்தும் இல்லாமல், பல லட்சம் கடனை வைத்துவிட்டுப் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறார் இளங்கோவன். ''அவர்கள் வாழ்ந்த வறுமையை என் வாயால சொல்லமாட்டேன்...'' என்று உறவினர் ஒருவர் ஒதுங்கியபடி அழுததைப் பார்த்தபோது....'அண்ணா’ ஒரு செல்லிங் பாயின்ட் என்பதை அவரது குடும்பம் மட்டும் உணரவில்லை.
பகுத்தறிவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் குடும்பம் என்பதை நிரூபிக்கும்
வகையில், இளங்கோவனின் மகள் கண்மணிதான் இறுதிச் சடங்குகளைச் செய்தார். 'விட்டுட்டுப் போயிட்டீங்களே அய்யா!’ என்று கண்களில் நீர் தளும்பி நிற்கிறார், மனைவி விஜயா இளங்கோவன். இந்த இருவர் கண்ணீரையும் துடைக்க வேண்டியது அந்த இரண்டு கழகங்களும்தான்!
நன்றி - விகடன்
No comments:
Post a Comment