Friday, September 2, 2011

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்.

42 டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம்.



மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம்.

'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். மாதா பிதா டாக்டர், இன்ஜினியர் என்று நாம் சொல்வது இல்லை. தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். கிராமத்தில் ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், கொள்ளை, கொலை தொழிலைச்செய்து வந்த திருடனை ராமாயணம் என்ற வராலாற்று காவியத்தை படைக்கும் அளவிற்கு வால்மீகி உருவாகக் காரணமான நாரதரைப் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர் ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment