Monday, September 26, 2011

தள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலு

திமுகவின் மிகப்பெரிய முதலை யார் தெரியுமா ? தள்ளிக்கோட்டை ராஜுத் தேவர் பாலுதான். இவர்களை விட மாறன் சகோதரர்கள் பெரிய முதலை என்றாலும், டிஆர்.பாலு, யுபிஏ.1 அரசாங்கத்தில் சம்பாதித்தது போல யாரும் சம்பாதிக்க வில்லை.

திமுகவின் மிக முக்கியப் புள்ளியாகவும், முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அடித்த கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களாகட்டும், மாநிலத்தில் உள்ள அமைச்சர்களாகட்டும், ஊழல் மற்றும் நில அபகரிப்புப் புகாரில் ஒருவர் பின் ஒருவராக பதவியை இழந்து சட்டத்தின் பிடிக்கு அஞ்சி வாழ்ந்து வரும் நிலையில், எவ்வித புகாருக்கும் ஆளாகாமல், டி.ஆர்.பாலு மட்டும் தப்பியே வருகிறார்.

தனது சொந்த நிறுவனமாக கிங் கெமிக்கல்சுக்கு எரிவாயு ஒதுக்கீடு செய்ததாக எழுந்த புகாரைத் தவிர, வேறு எந்தப் புகாரிலும் சிக்காமல் இருக்கிறார் பாலு. ஆனால், யுபிஏ 2 அரசாங்கத்தின் அமைச்சரவை அமைக்கப்படும் போது, டி.ஆர்.பாலுவை மட்டும் வேண்டவே வேண்டாம் என்றார் மன்மோகன். அமைச்சரவை அமைப்பதில் மன்மோகன் சிங்கை விட ‘முக்கியப் பங்கு’ வகித்த நீரா ராடியாவின் உரையாடல்களில் இருந்தே இது தெளிவானது.

டி.ஆர்.பாலு பெயரைக் கேட்டாலே அலறினார் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் அலறியது ஒரு புறம் இருந்தாலும், கருணாநிதிக்கே பாலு மீண்டும் மந்திரியாவதில் விருப்பம் இல்லை. இதற்கு முக்கிய காரணம், டி.ஆர்.பாலு, எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார். அந்த அளவுக்கு “தாராள” மனது படைத்தவர். திமுகவிற்கு தேர்தல் செலவுக்குக் கூட பணம் கொடுக்க மாட்டார்.

இழவு வீட்டில் கொள்ளையடித்த பாலு.

லிபியாவில் கலவரம் மூண்ட போது, அங்கிருக்கும் இந்தியர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டது. இவ்வாறு, எடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்த இந்தியர்களை ஒரு இடத்துக்கு வரவழைத்து, அங்கிருந்து அவர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் வரவழைக்க திட்டமிடப் பட்டது.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் 22 பிப்ரவரி 2011 முதல் 3 மார்ச் 2011 வரை, 13 நாட்களுக்கு கப்பல்களை வாடகைக்கு எடுத்தது. அவ்வாறு எடுக்கப் பட்ட கப்பல்களுள் ஒன்று, தற்போது தூத்துக்குடி மற்றும் கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக ப்ளெமிங்கோ என்ற நிறுவனம் பயன்படுத்தும் ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல். இந்தக் கப்பலை லிபிய கலவரங்களின் போது, மத்திய அரசு ஒரு நாளைக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்தது.

இந்த ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்த ஐஎஸ்பி என்ற ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த ஐஎஸ்பி நிறுவனத்திடமிருந்து ப்ளெமிங்கோ நிறுவனம் இந்தக் கப்பலை வாடகைக்கு அமர்த்தியே இலங்கைக்கு சவாரி நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ப்ளெமிங்கோ நிறுவனம் ஐஎஸ்பிக்கு கொடுக்கும் வாடகை, ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

Libya_Scottia_Prince_Page_1

Libya_Scottia_Prince_Page_2

ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுக்கும் 18 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது, இந்திய அரசு ப்ளெமிங்கோ நிறுவனம் கொடுத்த 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் எங்கிருக்கிறது ?

லிபிய நாட்டுக்கு அருகிலோ, அல்லது க்ரீஸ் நாட்டிலோ கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகியிருக்காதே…. பின் எதற்காக இப்படிப்பட்ட வீண் செலவு ? பொறுங்கள் சொல்கிறேன்.

சிங்கள அரசாங்கம் புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மேலும், மேலும் அம்பலமாகிக் கொண்டிருந்த வேளையில், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக, இந்திய அரசாங்கம் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கடந்த ஜுன் மாதத்தில், பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது. இவ்வாறு தொடங்கப் பட்ட பயணிகள் கப்பல், சற்றும் முன் அனுபவம் இல்லாத ப்ளெமிங்கோ ட்யூட்டி ப்ரீ ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த ப்ளெமிங்கோ நிறுவனமே, டிஆர்.பாலுவின் பினாமி நிறுவனம் என்பதுதான் சிறப்புத் தகவல்.

விரேன் அஹூஜா, டிஆர்.பாலுவின் மகன்கள் டிஆர்பி.செல்வகுமார் மற்றும் டிஆர்பி.ராஜா நடத்தும் நிறுவனங்களில் 2003 முதல் இயக்குநர்களாக உள்ளனர். ப்ளெமிங்கோ நிறுவனம், மும்பையைச் சேர்ந்த விரேன் விவின் அஹுஜா மற்றும் அதுல் அஹூஜா ஆகியோரால் நடத்தப் படுகிறது.

இந்த ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை காண்பித்திருக்கும் சலுகைகள் மலைக்க வைக்கின்றன. ப்ளெமிங்கோ நிறுவனம் கொழும்புக்கு நடத்தும் கப்பல் போக்குவரத்துக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஐஎஸ்பி என்ற நிறுவனத்திடமிருந்து “ஸ்காட்டியா ப்ரின்ஸ்” என்ற கப்பலை ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்தப் ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பின்னணியை ஆராய்ந்தால் மர்மமாகவே இருக்கிறது. ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான தொழில், விமான நிலையங்கள் மற்றும், துறைமுகங்களில் ட்யூட்டி ப்ரீ கடைகளை நடத்துவது.

டி.ஆர்.பாலு தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பிறகுதான், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கிறது. 2006ல், விசாகபட்டினம், ஹல்தியா, கோவா மும்பை என தனது தளத்தை விரிக்கிறது ப்ளெமிங்கோ. இன்று இந்தியாவின் 12 விமான நிலையங்களிலும், 7 துறைமுகங்களிலும் ப்ளெமிங்கோவுக்கு 45 கிளைகள் இருக்கின்றன. ப்ளெமிங்கோ நிறுவனத்தின் பிரதான இறக்குமதிகள் எல்லாமே, வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின மூலமாக நடக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்றிருக்கும் பணப்பறிமாற்றம் பல கோடிகளை தாண்டுகிறது.


A110217

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்கின் இயக்குனர்கள், கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி என்பது குறிப்பிடத் தக்கது. ஆனாலும், டி.ஆர்.பாலுவை விட, ஆ.ராசா மந்திரி ஆவதை கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் விரும்பியதற்கான காரணம், ராசாவைப் போன்ற “மிக மிக திறமை வாய்ந்த அடிமையாக” டி.சூர்.பாலு இருக்க மாட்டார்.

ப்ளெமிங்கோவின் இயக்குநர்களில் ஒருவரான விரேன் அஹுஜா, பெர்மாகோ எனர்ஜி, ப்ளெமிங்கோ ஜுவல்லரி, ப்ளெமிங்கோ கோவா ரீட்டெயில், டவுன் ட்டவுன் ரீட்டெய்ல, பிடிசி பெர்மாகோ எனர்ஜி, அவினாஷ் போஸ்லே பவர் லிமிட்டெட், ஓலியன்டர் பார்ம்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். இது தவிரவும், முக்கிய தொழில்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஷேர்களை வைத்துள்ளார்.

இத்தனை பெரிய ‘தொழில் அதிபர்’ நடத்தும் நிறுவனமான ப்ளெமிங்கோ நிறுவனம், கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு கஸ்டம்ஸில் சிக்கியது சுவையான கதை. 2006ல் கஸ்டம்ஸ் துறையால், 34 பாட்டில்கள் விஸ்கியும், 350 பாக்ஸ் மார்ல்பரோ சிகரெட்டும் கடத்தியதாக கஸ்டம்ஸ் துறையால் தண்டிக்கப் பட்டிருக்கிறது ப்ளெமிங்கோ. சட்டவிரோதமாக ஸ்காட்ச் விஸ்கி மற்றும் சிகரெட் போன்ற பொருட்களை 1.72 கோடி ரூபாய்க்கு ப்ளெமிங்கோ நிறுவனம் விற்றிருப்பதாக கஸ்டம்ஸ் துறையின் ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு தமிழ்நாட்டில். அண்டை மாநிலமான ஆந்திராவிலும், ப்ளெமிங்கோ நிறுவனம், ட்யூட்டி ப்ரீ கடையில் விற்க வேண்டிய பொருட்களை வெளிச் சந்தையில் விற்றதாக கஸ்டம்ஸ் துறையால் தண்டிக்கப் பட்டிருக்கிறது. ஆந்திர கஸ்டம்ஸ் துறைக்கு ப்ளெமிங்கோ செலுத்த வேண்டிய சுங்க வரி பாக்கி மட்டும் 13.11 கோடி என்கிறது மற்றொரு ஆவணம். இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்திலும், விசாகபட்டினம் விமான நிலையத்திலும், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட ட்யூட்டி ப்ரீ கடை நடத்தும் லைசென்சுகளை ரத்து செய்திருக்கிறது கஸ்டம்ஸ் துறை.

1

2

3

4

இப்படி கள்ளக் கடத்தலில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்துக்குத் தான் தற்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இதற்கு ஒரே காரணம், இந்த நிறுவனம் டி.ஆர்.பாலுவின் நிறுவனம் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

D-4241l

கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து ஆணை வழங்குவதற்கான டெண்டர் விடும் போது, ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு ஆணை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே ஒரு புதிய விதி சேர்க்கப் பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டெண்டரில், கொழும்புக்கு கப்பல் போக்குவரத்து நடத்த விரும்பும் நிறுவனங்கள், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதில் முன் அனுபவம் இருத்தல் விரும்பத் தக்கது என்று ஒரு விதி சேர்க்கப் பட்டுள்ளது. பயணிகள் கப்பலை இயக்குவதற்கும், ட்யூட்டி ப்ரீ கடைகள் நடத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று வியக்கிறார், ப்ளெமிங்கோவின் போட்டியாளர் ஒருவர். இவ்வாறு புதிய விதி சேர்க்கப் பட்ட அதே நேரத்தில், பயணிகள் கப்பல் போக்குவரத்து நடத்துவதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும் என்று ஏற்கனவே இருந்த விதியை எப்படி மறந்தார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார் அவர். ப்ளெமிங்கோவுக்கு கப்பல் போக்குவரத்தில் ஒரு மாதம் கூட அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சரி, இப்படி போட்டி போட்டுக் கொண்டு கப்பல் போக்குவரத்து நடத்த ஆணை பெற்ற ப்ளெமிங்கோவுக்கு வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதா என்றால் அதுவும் இல்லை. தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு இயக்கப் படும் ஸ்காட்டியா ப்ரின்ஸ் கப்பலில் மொத்தம் 1049 பயணிகள் செல்லும் கொள்ளவு உண்டு. ஆனால் ஒரு ட்ரிப்பில் வெறும் 300 பயணிகள் மட்டுமே செல்கிறார்கள். இப்படி நஷ்டத்துக்கு தொழில் நடத்த ஏன் ப்ளெமிங்கோ போட்டி போட வேண்டும் என்றால், அங்கே தான் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது.

இந்தக் கப்பல் போக்குவரத்து நடத்தப் படுவதே கள்ளக் கடத்தலில் ஈடுபடுவதற்காகத் தான் என்கிறது, போக்குவரத்து வட்டாரங்கள். கொழும்பிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து இறங்கும் பயணிகள் அத்தனை பேரும் கையில் இரண்டு பாட்டில்கள் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருக்கிறார்கள். அவர்களை அணுகி இதற்கு பில் உண்டா என்று கேட்டால், பில்லுக்கு பதிலாக ஒரு துண்டுச் சீட்டைக் காட்டுகிறார்கள். ஸ்காட்ச் விஸ்கி, சிகரெட் போன்றவற்றுக்கு கஸ்டம்ஸ் வரி மட்டும் 250 சதவிகிதம். இது தவிர, எக்சைஸ் மற்றும் வாட் வரி உண்டு. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காகவே ட்யூட்டி ப்ரீ ஷாப் என்ற ஒரு முறையை ஏற்படுத்தி, பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் போன்றவற்றை ஆய்வு செய்து, பதிவு செய்து, ஒரு நபருக்கு இரண்டு பாட்டில்கள் மட்டும், பில்லோடு வழங்க வேண்டும் என்பது விதி.

இந்த வரிகளைத் தவிர்ப்பதற்காக, தூத்துக்குடியிலிருந்து பயணிகளை ப்ளெமிங்கோ நிறுவனமே ஏற்றி, அவர்கள் இறங்கி வருகையில் ஆளுக்கு இரண்டு ஸ்காட்ச் பாட்டில்களை கொடுத்து, துறைமுகத்துக்கு வெளியே அதை பிடுங்கிக் கொண்டு, பர்மா பஜாரில் விற்றால் 300 சதவிகிதத்துக்கு மேல் லாபம் கிடைக்கும் அல்லவா ? இதைத்தான் ப்ளெமிங்கோ நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வரும் பயணிகளிடமிருந்து பில் இல்லாமல் ஸ்காட்ச் எடுத்து வருகையில், பல்வேறு தடவை இடைமறித்து பறிமுதல் செய்திருக்கிறது மத்திய தொழிற் பாதுகாப்பு படை. இது தவிரவும், தங்கம் மற்றும் பல்வேறு கடத்தல்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கடந்த வாரம் கூட, தங்க பிஸ்கட் கடத்திய ஒரு பெண், இந்தக் கப்பலில் இருந்து பிடிபட்டார்.

கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துவதற்கு கஸ்டம்ஸ் துறையின் அனுமதியை தனியாக பெற வேண்டும். ஆனால் ப்ரின்ஸ் ஸ்காட்டியா கப்பலில் இது போல நடத்துவதற்கு எவ்வித அனுமதியையும் ப்ளெமிங்கோ நிறுவனம் பெறவில்லை. ஏன் பெறவில்லை என்றால், ஏற்கனவே கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்ட ஒரு நிறுவனத்துக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது. பிறகு எப்படி ப்ளெமிங்கோ நிறுவனம் கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துகிறது என்று விசாரித்தால், கப்பலில் இருக்கும் கடையில் விற்பனை, இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் சர்வதேச எல்லையைக் கடந்த பிறகே விற்பனை தொடங்குமாம். சர்வதேச எல்லையை கப்பல் தாண்டி விட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்பது கடலன்னைக்குத் தான் வெளிச்சம்.

Vayalar-Ravi-3-copy

கப்பல் போக்குவரத்துத் துறை அனுப்பிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான ஒரு பதிலில், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கு, கப்பலில் ட்யூட்டி ப்ரீ ஷாப் நடத்துவதற்கான எவ்விதமான அனுமதியும் வழங்கப் படவில்லை என்று தெரிவிக்கிறது. பிறகு எப்படி நடத்துகிறார்கள் ?

சரி தள்ளிக்கோட்டை ராஜுத்தேவர் பாலுவுக்கும், ப்ளெமிங்கோ நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், அவர் மகன்கள் நடத்தும் மீனம் எக்ஸ்போர்ட்ஸ், கிங் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன், கிங் இந்தியா பவர் கார்ப்பரேஷன் மற்றும் கோல்டன் வாட்ஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் அஹுஜாக்கள் இயக்குநர்களாக இருக்கிறார்கள். கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குநரை, தன் மகன் நடத்தும் நிறுவனத்திலும் இயக்குநராக வைக்க வேண்டிய அவசியம் டி.ஆர்.பாலுவுக்கு என்ன என்பதை பாலுதான் விளக்க வேண்டும்.

கொழும்பு தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து டெண்டர் வழங்கப் பட்டதில் நடந்த ஊழலும், ட்யூட்டி ப்ரீ கடைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்தும் சிபிஐக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் அல்லவா கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார் ? காங்கிரஸ் கட்சியினர் சிபிஐ கட்டுப் பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா ? சிபிஐ எப்படி நடவடிக்கை எடுக்கும்.

இப்போது வாசகர்களுக்கு ஏற்படும் இன்னொரு சந்தேகம், தற்போது ஜி.கே.வாசன் தானே கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர். பின் எப்படி டி.ஆர்.பாலுவின் நிறுவனத்துக்கு இன்னும் இத்தனை சலுகைகள் அளிக்கப் படுகின்றன என்று.

DMK14

பணம் பாதாளம் வரை பாயும் போது, ஜி.கே.வாசனின் வீட்டுக்குள் பாயாதா என்ன ? அது மட்டும் இல்லாமல், தானே திறமையாக ஊழல் புரிந்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு ஜி.கே.வாசனுக்கு துப்பு இல்லை என்பதும் மற்றொரு உண்மை.

No comments:

Post a Comment