Monday, September 26, 2011

இது கூட தெரியதா கருணாநிதிக்கு

தனியார் அமைப்பிடம் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் விருது பெற்ற விவகாரம், தற்போது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விருதின் பின்னணியைத் தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள் அணிவகுத்து நிற்கின்றன.
01
தமிழக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் தனது வானளாவிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தன் மனைவி பெயரில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு விவகார த்தில் சிக்கி தற்போது ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தவிர, ஜாபர் சேட் அனுமதியின்றி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தும் விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தான் விருது பெற்ற விவகாரத்தில் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் விருது வாங்கிக் கொண்டதற்காக சிக்கலில் மாட்டப் போகிறார் என்ற திடுக்கிடும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதுவும் அவருக்கு விருது கொடுத்த அமைப்பு சர்ச்சைக்குரிய அமைப்பு என்பதால் சிக்கல் கூடுதலாகி உள்ளது.

டிசம்பர் 2010-ல் தமிழக அரசின் பதக்கங்கள் வழங்கும் விழா நடந்த போது, ஒரு தனியார் அமைப்பு கொடுத்த விருதை, அரசு விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஜாபர் சேட்டுக்கு வழங்கியபோதே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.


‘சர்வதேச நீதிமான்களின் சங்கம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகளாக பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இருப்பது இந்த அமைப்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் டாக்டர் ஆதிஷ் அகர்வாலா. இவர் பல்வேறு அமைப்புகளுக்குத் தலைவராக இருப்பதாக கூறிக் கொள்கிறார். இந்த அமைப்பைப் பற்றியும், இதன் தலைவரைப் பற்றியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம்.

“இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் உச்ச நீதிமன்றத்திலோ, டெல்லி உயர்நீதிமன்றத்திலோ, எந்த வழக்குக்காகவும் ஆஜரானதில்லை. பெரும்பாலும் இவர் நீதிமன்றத்துக்கே வருவதில்லை. இந்த அமைப்பின் நிர்வாகிகளாக மற்ற நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இருப்பதாகப் போட்டிருந்தாலும், இந்த அமைப்பின் இணைய தளத்தில், மற்ற நிர்வாகிகளைப் பற்றிய செய்திகள் சுத்தமாக இல்லை.

இவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே இருக்கின்றன. ‘ஜுரிஸ்ட்’ என்று இந்த அமைப்பினர் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் ‘ஜுரிக்கள்’ என்ற முறையே கிடையாது. பிரிட்டிஷ் காலத்தோடு, ஜுரிக்கள் முறை ஒழிக்கப்பட்டு விட்டது’’ என்றார்.

இந்த அமைப்பு தரக் கூடிய விருதுகளைப் பற்றிக் கேட்ட போது, “இந்த அமைப்பு எந்த அடிப்படையில் விருதுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே சந்தேகமாக உள் ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் அப்போது இருக்கும் சட்ட அமைச்சருக்கு தவறாமல் விருது கொடுத்து விடுகிறார்கள்.

இந்த விருதுகள் சந்தேகமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம், இந்த அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கு, கிரிமினல் சட்டத்தில் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி விருது கொடுத்துள்ளனர்.

கிரிமினல் சட்டத்துக்கு ஏராளமான பணியை ஆற்றிய நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், அந்த அமைப்பிலேயே நிர்வாகியாக இருக்கும் ஒருவருக்கு விருது கொடுப்பதே அந்த அமைப்பின் நடத்தையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

அடுத்து அவர் சொன்ன குற்றச்சாட்டு பகீர் ரகமாக இருந்தது.

“இந்த நிறுவனத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்ற விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இந்த அமைப்பில் நிர்வாகிகளாக இருப்பதால், வெளிநாட்டு உளவு நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.

மேலும், இந்த அமைப்பு சமீபத்தில் சீனாவில் சட்ட வல்லுனர்கள் மாநாடு ஒன்றை நடத்தியது. இந்த மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு நபர்கள் சென்று வந்தனர். இந்த செலவுகளுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

reward
‘இத்தகைய ஒரு அமைப்பிடமிருந்து ஜாபர் சேட் விருது பெற்றது சரியா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர்.

இது குறித்து ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பேசும் போது, “ரோட்டரி கிளப் விருது கொடுத்தால் கூட, ஒரு காவல்துறை அதிகாரி அந்த விருதைப் பெறுவதற்கு முன், அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். சர்வதேச ஜூரிகள் சங்கத்தின் இந்த விருதை வாங்குவதற்கு முன்னால், ஜாபர் சேட், மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அரசு நடத்தும் பதக்கங்கள் பரிசளிப்பு விழா (மெடல் பெரேட்) என்பது, அரசு விருதுகளான, குடியரசுத் தலைவர் வழங்கும் வீரதீரச் செயல்களுக்கான பதக்கம், முதலமைச்சரின் பதக்கம், அண்ணா பதக்கம், மாநில அரசின் பதக்கங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காகவே நடத்தப்படும் ஒரு விழா.

இந்த விழாவில், காவல்துறை, வனத்தறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை போன்ற சீருடைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கும் பதக்கங்களை முதலமைச்சர் நேரில் வழங்கும் அரசு விழா இது. இந்த விழாவில், ஒரு தனியார் அமைப்பு கொடுத்த பதக்கத்தை எப்படி முதலமைச்சர் ஜாபர் சேட்டுக்கு வழங்கினார் என்பது புரியவில்லை. முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது கூடவா தெரியாது? தமிழக காவல்துறை வரலாற்றிலேயே நடக்காத ஒரு செயல் இது’’ என்றார்.

ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த சர்ச்சையைப் பற்றி வேறு விதமாக அலசுகிறார்.

“குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், தீவிரவாதத்தைத் தடுப்பதிலும் இவரின் அச்சமற்ற நடவடிக்கைகளால் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்’’ என்று அந்த அமைப்பு விருது கொடுத்திருக்கிறது.

ஏ.சி. அறையில் அமர்ந்து தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதைத் தவிர இவர் உருப்படியாக குற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டார் ? இவர் உளவுத் துறையில் இருந்த காலத்தில் தான், தமிழகமெங்கும் நில அபகரிப்புகள் நடந்தன. அந்த நில அபகரிப்புகளில் பாதிக்கப் பட்டவர்களே இப்போது புகார் கொடுத்து வரு கிறார்கள்.


இத்தனை நில அபகரிப்புகளும் உளவுத் துறைத் தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்குத் தெரியாமலா நடந்திருக்கும்? “நில அபகரிப்புப் புகார்களையும், தி.மு.க. தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவை சகாக்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதோடு, தன் பங்குக்கு இவரும் வீட்டு வசதி வாரிய நிலத்தை போலிச் சான்று கொடுத்து வாங்கி,அதை வைத்து வியாபாரமும் செய்திருக்கிறார். இவரைப் போன்ற நபர்களுக்கு குற்றங்களை கட்டுப் படுத்தினார் என்று விருது கொடுத்திருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

விருதுக்கு அனுமதி வாங்கினாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த விருதை தனக்கு வழங்கியதற்காக, அந்த அமைப்பின் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு இவர் செய்த கைமாறு என்ன என்பது விசாரிக்கப் பட வேண்டும். தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்கெனவே நெடுமாறன் என்ற வழக்கறிஞர் இருக்கும் போது, கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை அளித்து, ஆதிஷ் அகர்வாலாவை மார்ச் 1 அன்று நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

அந்த உத்தரவில், ‘உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்பான வழக்குகளை இவர் கையாள்வார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே தமிழக அரசு 5 கூடுதல் அரசு வழக்கறிஞர்களை நியமித்திருந்த நிலையில், ஆறாவதாக ஆதிஷ் அகர்வாலாவை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும், தமிழகத்தின் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 1 அன்றே இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று அடுக்கிக்கொண்டே போனார் அந்த அதிகாரி.

Jaffer-important-picture
விருது வாங்கிய போது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஜாபர்சேட்டுக்கு அதே விருது இப்போது கண்ணீரை வரவழைத்திருக்கிறது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கையால் பெற்றால் இந்த விருது பற்றி யாருக்கும் சந்தேகம் ஏற்படாது என்று ஜாபர்சேட் போட்ட கணக்கு வழக்கம்போல் தப்பாகவே போயிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்டர்

No comments:

Post a Comment