Sunday, September 18, 2011

'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம்!!!!

கூடங்குளம் வேண்டாம்!''

உக்கிரமாகும் உண்ணாவிரதம்!
'அணு சக்தி... அழிவு சக்தி!’ என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில்... நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் ஆதரவுடன் அணு உலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து, கொதித்தெழுந்து நெருப்பைக் கக்குகிறார்கள் மக்களும், மக்கள் இயக்கங்களும்!


ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் 13,500 கோடி முதலீட்டில் நடந்து வரும் இந்த அணு உலைகளின் மெகா திட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இந்த ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


இதை எதிர்த்து போராடிய மக்களின் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை ஒடுக்க, காவல் துறை அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்ய... கொந்தளித்த மக்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 127 பேர் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி!



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''அணு சக்தியால் லாபத்தைவிடவும் இழப்பே அதிகம். 'நமக்கு மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியையும் அழித்து ஒழிக்கக்கூடிய அணு உலையை இங்கே மட்டும் அல்ல, எங்கேயும் அமைக்க வேண்டாம்’ என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்த மக்களும், 'அணு உலையால் சாவதைவிடவும் பட்டினிகிடந்து அற வழியில் உயிரைவிடுவோம்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்!' என்றார்.


இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரைக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பால பிரஜாபதி அடிகள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குமாரதாஸ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அண்ணா ஹஜாரே, மேத்தா பட்கர் உள்ளிட்ட சமூகப் போராளிகளும் வருவார்கள் என்பதால், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.


இதனிடையே, 'அணு உலை அமைக்கும் பணி முடிவடையும் சமயத்தில், இத்தகைய போராட்டங்கள் நடத்துவது நியாயமா? இதற்காகச் செலவிட்ட பணம் இழப்பாகிவிடுமே?’ என அணு மின் நிலையத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்தவரும், தமிழகம் - புதுவை மீனவ மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான ஆண்டன் கோமஸிடம் கேட்டதற்கு, ''கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக நாமே சாவைத் தேடிக்கொள்ள முடியுமா? ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் நிறையப் பேருக்கு புற்றுநோய் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்து மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு, கடைசி நேரத்தில் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தால், 'இவ்வளவு செலவு செஞ்சுட்டோமே... பரவாயில்லை’னு விட்டு விடுவோமா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.


அணு சக்தித் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் பிரதமரின் காதுகளுக்கு எட்டுமா இந்த அபலை மக்களின் கூக்குரல்?


-
''எவ்வித ஆபத்தும் இல்லை...''


கூடங்குளம் அணு மின் திட்டத்தின் வளாக இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜியிடம் மக்கள் கூறும் புகார்கள் பற்றி கேட்டபோது, ''இந்தியாவில் செயல்படும் 6 அணு மின் நிலையங்களைப் போன்றுதான் கூடங்குளத்திலும் செயல்படப் போகிறது. எதிர்பாராத விபத்து, கதிர்வீச்சு போன்ற எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை.


உலக அணு சக்தி கழகம் வகுத்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை இங்கே பின்பற்றுகிறோம். தற்போது பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமோ என்றெல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலை எப்போதும் வராது.


உலகத்தில் எங்குமே இல்லாத விசேஷ பாதுகாப்பு ஏற்பாடு களாக, 40 மீட்டர் உயரத்தில் இயல்புநிலை குளிர்விப்பானை (ஹீட் எக்ஸ்சேஞ்சர்) வடிவமைத்து இருக்கிறோம். அதனால் கதிர் வீச்சு எந்தவகையிலும் வெளியேற வாய்ப்பே இல்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணு மின் நிலைய கட்டடத்தை அமைத்துள்ளோம்.

அணு மின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம். அதற்கு அப்பால் தாராளமாக மீன் பிடித்துக் கொள்ளலாம். இதுகூட, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதிதான். கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாபா அணு மின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் இயங்கி வருவது மக்களுக்குத் தெரியும்.

அணு மின் நிலையம் துவங்கியபிறகும் அந்த ஆய்வகம் தொடர்ந்து இங்கேதான் இயங்கப் போகிறது. புற்றுநோய் வரும் என்பதெல்லாம் வெறும் வதந்தியே. இங்கே கதிர்வீச்சு வெளியே வரவே வராது எனும்போது எப்படி பாதிப்புகள் ஏற்படும்?'' என்று கேள்விகளை எழுப்பினார்.




1. டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தால், குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கருத்துள்ளதே?

அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கலாம்!

கண்காணிப்பு கேமரா மற்றும் ஸ்கேனர் இயந் திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கோரிக்கை விடுத்து இருந்ததாம். ஏல நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தக் கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. டெல்லி போலீஸும் தங்களுக்குத் தேவையான சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவெடுக்க முடியாமல் நாட்களைக் கடத்தியது. இந்தக் காலதாமதமும் தான் இத்தனை உயிர்ப் பலிகளுக்குக் காரணம்!



ஏற்கெனவே மே 25-ம் தேதி இதே வளாகத்தில் குண்டு வெடித்தது. இப்போது இரண்டாம் முறை. 'உலகில் எங்குமே பயங்கரவாதிகள் ஒரே இடத்தை இரு முறை குறிவைத்துத் தாக்கியது இல்லை. இது இந்தியப் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் படுகேவலமான கேலிக்கூத்து’ என்று டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர் எழுதி உள்ளார். ஒரே இடத்தில் எத்தனை தடவை குண்டு வைத்தாலும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெரிந்திருக்கிறது.


பிரதமரும் உள்துறை அமைச்சரும் கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், காவலுக்குக் கெட்டிக்காரர்கள் இல்லை!



2. 'திருக்குறளின் நல்ல கருத்தைக் கேட்டுவிட்டு சபையைவிட்டு வெளியே வந்துவிடுகிறோம்’ என்கிறார்களே தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?

திருக்குறளின் நல்ல கருத்துகளைக் கேட்டு நடந்திருந்தால், எதிர்க் கட்சியாகும் நிலைமையே வந்திருக்காதே!

3. 'மதுவிலக்கு கொண்டுவருவதுபற்றியும் மது விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் வாய் கிழியப் பேசுபவர்கள்தான், கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்’ என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே! யார் என்று தெரிகிறதா?


இதில் ரகசியம் என்ன இருக்கிறது? ராமதாஸைத்தான் சொல்கிறார் ஜெயலலிதா. இதே வார்த்தைகளைக் கருணாநிதி சொல்லி இருந்தால் ராமதாஸ் என்ன கர்ஜனை செய்திருப்பார்? ஜெயலலிதா சொன்னதைக் கேட்டும்... கேளாதவர் மாதிரி ஆகிவிட்டார். டாக்டரிடம்தான் எவ்வளவு மாற்றம்?

4. எதிர்த்துப் பேசிப் பதில் அளிக்க... எந்த எதிர்க் கட்சியும் இல்லாத சட்டசபை நிகழ்ச்சிகள்பற்றி..?


'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்கிறார் முதல்வர். அவர் இதைத்தான் எதிர்பார்த்தார். அதுவே நடக்கிறது!


5. இரும்பு மண்வெட்டி 'ஸ்டாலின்’, வெள்ளி மண்வெட்டி 'அழகிரி’, தங்க மண்வெட்டி 'கனிமொழி’... போன்ற கதைகளை அமைச்சர் பேசியது சரியா?


அமைச்சர் ந.சுப்பிரமணியம் தனது ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படுத்த எத்தனையோ ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற வெட்டிக் கதைகளை விடுத்து உருப்படியான காரியங்களில் ஈடுபடு வது மட்டுமே... அவரின் பொது வாழ்வுக்கு நல்லது!

6. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்து சாதித்தது என்ன?


அதை அவர்தான் சொல்லவேண்டும். ஆனால், அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் விஷயத்திலும் அவர் மௌனமே பதில். தூக்கு போட தேதி குறித்த செய்தியைக் கேள்விப் பட்டதும் ப.சிதம்பரத்துக்கு வைகோ போன் செய்திருக்கிறார். லைனுக்கு வரவில்லை ப.சி. காலை முதல் மாலை வரை பல தடவை முயற்சித்தும் ப.சி. பேசவில்லையாம். 'செய்தி உண்மையா? இல்லையா? என்பதையாவது கேட்டுச் சொல்லுங்கள்’ என்று உதவியாள ரிடம் சொல்ல... அதற்கு மட்டும் 'உண்மைதான்’ என்று பதில் சொல்லச் சொல்லி இருக்கிறார்

. இதை எனக்குச் சொன்ன ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர், 'புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவை, சிவகங்கை தொகுதி பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தவரும் இதே சிதம்பரம்தான்’ என்றார்.


அரசியலும் பதவிகளும்தான் மனிதர்களின் குணங் களைத் தீர்மானிக்கின்றன!

7. ஓட்டுக்குப் பணம் குற்றம்... ஓட்டுக்குப் பின் இலவசம் குற்றம் இல்லையா?


அது அதைவிடப் பெரிய குற்றம்தான்! ஓட்டுக்கு பணம், இரவில் தரப்படுகிறது. இலவசங் கள், பட்டப்பகலில் கிடைக்கின்றன. அது ஒரு கட்சியின், தனி மனிதர்களின் பணம். ஆனால் இலவசங்கள்... அரசாங்கத்தின், அனைத்து மக்க ளின் பணம்!


ஓட்டுக்கு பணம் வாங்குவதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள். ஆனால், டி.வி., மிக்ஸி கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்கள். இரண்டுமே பாவங்கள்தான்!

8. தொடர்ந்து என்னைக் கவலைகள் வாட்டுகிறதே?

'கவலைகள் - பறவைகள். அவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால், உங்கள் தலையின் மேல் அவை கூடு கட்டவிடாமல் தடுக்க முடியும்’ என்கிறது சீனப் பழமொழி!

9. இன்றைய நிலையில் துணிச்சலான தமிழகத் தலைவர் யார்?


தங்கபாலுதான்!


'நானும் எவ்வளவு நாள்தான் தலைவராவே நடிக்கிறது?’ எனத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டும், எவ்வளவு தைரியமான 'தலைவராக’ வலம் வருகிறார்! அவரைவிடத் துணிச்சலானவர் உண்டா சொல்லுங்கள்?


2 comments:

  1. ரொம்ப அருமையான கதம்பம். சூடான கேள்விகள். சூதகமான பதில்கள்.

    http://unmayapoyya.blogspot.com/

    ReplyDelete
  2. Kindly remove word verification in the comment.

    ReplyDelete