ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, "2 ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க., சுற்றுவட்டாரங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேரடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் கனிமொழி. இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,? இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அப்படி என்ன முக்கிய முடிவு? என்னுடைய பார்வையில், "கழக எம்.பி., கனிமொழி மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை, சட்டத்தின் துணையோடு சந்திப்போம்' என்பதைத் தவிர, வேறெந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். "இதற்கு மேல் கருணாநிதி பொறுக்க மாட்டார். நிச்சயம் பொங்கியெழுந்துவிடுவார். அமைச்சரவையிலிருந்து விலகுவார். ஆதரவையாவது வாபஸ் பெறுவார்' என்றெல்லாம், சில நப்பாசைக்காரர்கள் தப்பாசைப்படுவார்கள். ஆனால், அது நடக்கப்போவதில்லை. காரணம் என்னவென்று விளக்குகிறேன்.
கடந்த 2009ல் இவர்கள் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கேட்ட துறைகளும் கிடைக்கவில்லை. "இவ்வளவு தான்; அதுவும், இன்னின்ன துறைகள் தான்' என காங்கிரஸ் தரப்பில் ஒரு பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ந்த தலைவர், "ஆட்சியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்' என ரோசத்தோடு சென்னை திரும்பினார். தி.மு.க., இல்லாமலேயே மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கருணாநிதி அதையும் தாங்கினார்.
"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில், மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்தது தான் தாமதம், அடுத்த நாளே, கேரளா அரசைக் கண்டித்து என அந்தப் போராட்டம் மாற்றப்பட்டது. இறுதியில், போராட்டமே கைவிடப்பட்டது. கருணாநிதி அதையும் தாங்கினார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நூறு முறை தமிழகம் வந்துவிட்டார். ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அதுபற்றி கேள்வி எழுப்பின. கருணாநிதி அதையும் தாங்கினார்.
ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது கூடிய தி.மு.க., பொதுக்குழு, "சட்டப்படி எதிர்கொள்வோம்' என சம்பிரதாயத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு முடித்துக்கொண்டது. தி.மு.க., சார்பில் அவருக்கு ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 85 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார். "தலித் என்பதால் தான் ராஜா கட்டம் கட்டப்படுகிறார்' என கவலைப்பட்ட கருணாநிதி, அதையும் தாங்கினார்.
சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், "63 சீட் வேண்டும்; அதுவும், நாங்கள் கேட்கிற தொகுதி தான் வேண்டும்' என, இதுவரை எந்தக் கூட்டணியிலும், எந்தக் கட்சியும் விதித்திராத நிபந்தனையை காங்கிரஸ் விதித்தது. "இது நியாயமா?' என பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட கருணாநிதி, "தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா' என அறிவித்தார். யாரும் கெஞ்சாமலேயே, ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டார். அனைத்து ஊடகங்களும் கேலி செய்தன. அதையும் தாங்கினார் கருணாநிதி.
தமிழக சட்டசபைத் தேர்தலில், வரலாறு காணாத அளவு கெடுபிடியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நான் முந்தைய பதிவிலேயே சொன்ன மாதிரி, காங்கிரசின் கண்ணசைவு இல்லாமல், இவ்வளவு கெடுபிடி சாத்தியமில்லை. கருணாநிதியும் உணர்ந்திருந்ததால் தான் அதை, "எமர்ஜென்சி'யோடு ஒப்பிட்டார். அந்த அளவுக்கு தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தேர்தல் கமிஷன். அதையும் தாங்கினார் கருணாநிதி.
இரண்டு நாட்கள் முன்பு கூட தலைமைச் செயலத்தில் ஒரு பெண் நிருபர், "கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவீர்களா?' எனக் கேட்க, "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படி இதயத்தை தூக்கியெறிந்துவிட்டு கேள்வி கேட்கலாமா' என, பதில் கேள்வி கேட்டார். இதற்கு என்ன அர்த்தம்? மேற்சொன்ன அத்தனையையும் தாங்கிய முதல்வர் கருணாநிதி, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகையையும், ஒருவேளை அவர் கைதானால், அதையும் கூட தாங்குவார் என்பது தான், அதன் அர்த்தம். ஏனெனில், அவருடையது, எதையும் தாங்கும் இதயம்.
No comments:
Post a Comment