Friday, April 29, 2011

தப்பிய மனைவி.. சிக்கிய மகள்?


''எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் வந்தது இல்லை! 'தமிழ்நாட்டுக்கு எது உண்மையான தலைமைச் செயலகம்?’ என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தையும் சட்டசபையையும் மாற்றி, அண்ணா சாலையில் அமைத்து இருக்கிறார் கருணாநிதி. 'நான் புதிய தலைமைச் செயலகத்தில் காலடிவைக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டுள்ளார் ஜெயலலிதா. 'அடுத்து வரப்போகும் ஆட்சி... தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்று முடிவான பிறகுதான் இந்தக் கட்டடங்களுக்கு உண்மையான மரியாதை மீண்டும் பிறக்கும்!''

''ஏதோ, 'கோப்புகளைக் காணாமல் அடிக்கிறார்கள்’ என்கிறாரே ஜெயலலிதா?''

''கோப்புகளை இட மாற்றம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'பிப்ரவரி 24-ம் தேதிக்குள், கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு முழுமையாக அனைத்துத் துறைகளையும் மாற்றிவிட வேண்டும்’ என்று கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால், அப்படி முடியவில்லை. மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதி அறிவித்ததால், பணிகள் அப்படியே முடக்கப்பட்டன. இப்போது விதிமுறைகள் தளர்த்தப்பட, கோப்புகளை மீண்டும் இட மாற்றம் செய்ய அதிகாரிகள் முயன்றார்கள். இதைக் கேள்விப்பட்டுத்தான் ஜெயலலிதா கொந்தளித்தாராம்.''


''ம்...''



''தொழில், பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், பொது ஆகிய ஐந்து துறை தொடர்பான ஆவணங்​களையே அதிரடியாக மாற்றி இருக்​கிறார்கள். பணியாளர் நலன், சட்டம், வருவாய்த் துறையின் சில பகுதிகள், நிதி ஆகியவை பழைய கட்டடத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டு செல்ல நாமக்கல் மாளிகைக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. 'புதிய ஆட்சி வந்துதான் இந்த முடிவுகளை எடுக்க முடியும்’ என்கிறார் ஜெயலலிதா. கருணாநிதி, புதிய தலைமைச் செயலகத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து, அழகூட்டிக் கட்டியவர். ஆதங்கத்தில் அவர் முகமே மாறிவிட்டது. 'இந்தக் கட்டடத்தை சும்மா போட்டுவிடுவாரா அவர்?’ என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாராம். பழைய கோட்டையை அப்படியே தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து​விடுவது என்பதே கருணாநிதியின் திட்டம். அதற்கு ஜெயலலிதா போட்ட தடையைப் பொறுக்க முடியாமல், திங்கள்கிழமை காலை புதிய தலைமைச் செயலகத்துக்கே கருணாநிதி கிளம்பி வந்தார்!''


''அவர் புதிய தலைமைச் செயலகத்துக்கு வருவது ஒன்றும் புதிது இல்லையே?''



''சில நாட்களாக அவர் வராமல் இருந்தார். 'அங்க போய் என்னய்யா பண்றது? எதையும் பண்ணக் கூடாதுன்னுதான் தேர்தல் கமிஷன் சொல்லுதே?’ என்று கோபப்பட்டாராம். ஆனால், ஜெயலலிதா அறிக்கையைப் பார்த்ததும், ஆவேசம் அடைந்தவராக புதிய தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். ஆறாவது மாடியில், கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் பத்திரிகையாளர்களை வரச் சொல்லிச் சந்தித்தார். 'இது காபந்து சர்க்கார் அல்ல. தொடர்ச்சியான அரசுதான். தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை இருக்கும் அரசுக்கே காபந்து சர்க்கார் என்று பெயர்’ என்று தத்துவார்த்த விளக்கம் கொடுத்த கருணாநிதி முகத்தில் சோகம் தென்பட்டது. '2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!''


''தயாளு அம்மாள் பெயர் அதில் இடம் பெற​வில்லையே?''


''கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தபோது, குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகவில்லை. 'தயாளு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?’ என்று ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்... கருணாநிதி கொந்தளித்தார். 'சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள். நீயுமாம்மா?’ என்றாராம். ஆனால், அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டபோது, 'பெண்ணாக இருந்துகொண்டு இது மாதிரிப் பேசக் கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக் கூடாது’ என்று கனிவாக மாற்றப்​பட்டது.''


''இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்?''


''குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகிய இருவர் பெயரையும் சேர்க்க வேண்டாம் என்று இறுதி வரைக்கும் தி.மு.க. மன்றாடியதாம். 'தேர்தல் முடிவு வரும் வரைக்காவது தள்ளிவையுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'வாக்குப் பதிவு நடக்கும் வரை தள்ளிவைக்கச் சொன்னதால், கனிமொழி, தயாளு பெயரைச் சேர்க்கவில்லை. இப்போது, மீண்டும் தள்ளிவைக்கச் சொல்வது நல்லது அல்ல’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சினம் கொண்டார்களாம். 'காமன் வெல்த் ஊழலில் சம்பந்தப்பட்ட கல்மாடியைக் கைது செய்யாமல் ஆ.ராசாவைக் கைது செய்தீர்கள். இப்போது என் மனைவி, மகளையும் கைது செய்வீர்களா? தி.மு.க-வுக்கு மட்டும் ஓரவஞ்சனையா?’ என்று கேட்டாராம் கருணாநிதி''


''இந்தத் தகவலை டெல்லிக்குக் கொண்டுசென்றது யார்?''


''மூன்று நாட்களுக்கு முன்னதாக டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். பிரதமரையும், பிரணாப் முகர்ஜி​யையும் சந்தித்தார். கருணாநிதியின் கோபத்தை, முழுமையாக பாலு கொட்டினாராம். 'உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் வழக்கு என்பதால், எங்களால் ஓர் அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது. யாரையும் காப்பாற்ற முடியாது’ என்று சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டதையே, காங்கிரஸ் மேலிடம் தனது பதிலாகச் சொன்னது. கருணாநிதிக்கு பதில் சொல்வது மாதிரியே காலையில் சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தனர். மதியம் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைச் சேர்த்தார்கள்.''


''தயாளு அம்மாள்தான் விடுபட்டுள்ளாரே?''


''அவரைப் பொறுத்தவரையில், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டுவிதமான கருத்துகள் இருந்தனவாம். 'எனக்கு எதுவும் தெரியாது. சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டேன். நீங்க சொல்ற போர்டு மீட்டிங்குல இதுவரைக்கும் கலந்துகிட்டதுகூட கிடையாது’ என்பதை உண்மையான வார்த்தைகளாக சில அதிகாரிகள் நம்ப... 'அவரது வயதைக் காரணமாகச் சொல்லலாம்’ என்று சி.பி.ஐ. வக்கீல்கள் ஆலோசனை சொன்னார்கள். இதைவைத்தே தயாளு பெயர் நீக்கப்​பட்டதாகத் தகவல்!''


''இந்தச் செய்தி பரவியபோது, கருணாநிதி எங்கே இருந்தார்?''


''சி.ஐ.டி. காலனி வீட்டில்! ராஜாத்தி அம்மாள், கனிமொழி இருவரும் உடன் இருந்தனர். 'உடனே, மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரையும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று கருணாநிதி கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 'அமைதியாக முடிவெடுங்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் சமாதானப்​படுத்தினாராம். அதற்குள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவர் அணி வந்துவிட்டது. 'வக்கீல்​களின் ஆலோசனையை வாங்குங்கள்’ என்று கருணாநிதி சொல்லி ஒரு மணி நேரம் கடந்தது. உடனேயே, டெல்லியில் இருந்து அடுத்த தகவல்... 'மே 6-ம் தேதி கனிமொழி ஆஜராக வேண்டும்’ என்று! 'அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’ என்று பதறினாராம் ராஜாத்தி.''


''என்ன ஆகும்?''


'' 'குற்ற உடந்தை’ என்ற கடுமையான வார்த்தையைக் கனிமொழி மீது சி.பி.ஐ. பயன்படுத்தி உள்ளது. சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு, ஆ.ராசாவைப்போலவே பல மாதங்கள் ஆகலாம். கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது. ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.க-வும் தயாராகி விட்டது. வரும் 27-ந்தேதி உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது தி.மு.க. காங்கிரசுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட தி.மு.க. கடந்த மார்ச் 4-ந்தேதி தான் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி 'செக்’ வைத்து பின்வாங்கியது. ஒன்னறை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது''


No comments:

Post a Comment