சம்பள உயர்வு கோரி, ஏர் இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால், விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பைலட்கள் தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறும்படி டில்லி ஐகோர்ட், பைலட் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
விமானப் பைலட்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் இருக்க வேண்டுமென, விமானப் பைலட்கள் கோரி வந்தனர். இது தொடர்பாக, தலைமை தொழிலாளர் கமிஷனர் முன் நிர்வாகத்தினர், இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பின் (ஐ.சி.பி.ஏ.,) பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக ஐ.சி.பி.ஏ., நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியிட்டது.இதனால், நள்ளிரவு முதல் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களை இயக்க முடியாமல் ரத்து செய்யப்பட்டன. அதே போல், மும்பை உட்பட உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை, ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்தது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பைலட்கள் கூட்டமைப்பின் தலைவர், பொதுச் செயலர் மற்றும் மேலும் நான்கு பைலட்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்; மேலும் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டில்லி மற்றும் மும்பையில் உள்ள ஐ.சி.பி.ஏ., அலுவலகங்கள் "சீல்' வைக்கப்பட்டன. ஏர் இந்தியாவில் மொத்தம் 1,200 பைலட்கள் உள்ளனர். இதில், இந்திய வர்த்தக பைலட் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் 800 பைலட்கள் உள்ளனர்; மீதமுள்ள 400 பைலட்கள் பெரும்பாலும் சர்வதேச விமானங்களை ஓட்டக்கூடியவர்கள். இவர்கள் இந்திய பைலட்கள் கில்டிற்கு கட்டுப்பட்டவர்கள். ஐ.சி.பி.ஏ.,வில் பைலட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். கடந்தாண்டு 2007ம் ஆண்டு ஏர் இந்தியாவுடன், இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. இன்று வரையில், ஏர் இந்தியா பைலட்கள் அதிகமான சம்பளம் பெறுகின்றனர். ஆனால், பழைய இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்களுக்கு குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை நீக்கி, ஒரே மாதிரியான சம்பளம் அளிக்க வேண்டும் என்பது கோரிக்கை.
ஐ.சி.பி.ஏ., தலைவர் ஏ.எஸ்.பிந்தர் கூறியதாவது: ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதாக நிர்வாகம், 2009ம் ஆண்டு நவம்பர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. மேலும், லாபம் வரக்கூடிய விமான ரூட்டுகளை எல்லாம் ரத்து செய்து, தனியாருக்கும், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டுள்ளனர். இது பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பிந்தர் கூறினார்.
பயணிகள் பாதிப்பு: பைலட்கள் ஸ்டிரைக் காரணமாக பல விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஸ்டிரைக் பற்றி தெரியாத பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்து, விமானங்கள் ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தனர். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் வரை எவ்வித அறிவிப்பும் செய்யாமல் , கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால், மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் பயணிகள் அவதியுற்றனர். சர்வதேச பைலட்கள், பயிற்சி பைலட்களை கொண்டும் விமானச் சேவையை தொடர்வதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதனால், சில விமான நிலையங்களில் விமானங்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. ஸ்டிரைக்கை பயன்படுத்தி, தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி அதிக லாபம் பார்த்தன. ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் கூறுகையில், "இந்த ஸ்டிரைக் துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்றது. யாரோ சிலரின் தவறான ஆலோசனையால் ஈடுபட்டுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது' என்றார்.
பணம் வாபஸ்: ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி வழங்கப்படும். மேலும், மாற்று ஏற்பாட்டிற்கான கட்டணத்திற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை வரை மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்களும், டில்லியிலிருந்து புறப்பட வேண்டிய 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல், விமானச் சேவையை சமாளிக்க சர்வதேச விமானப் பைலட்கள் பயன்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானச் சேவையை பழையபடி துவங்குவதற்கு, ஏர் இந்தியா ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டுமென, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
டில்லி ஐகோர்ட் கண்டிப்பு: "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா பைலட்கள் உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும்' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானப் பைலட்கள் திடீர் ஸ்டிரைக்கால், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கோர்ட்டை அவமதித்ததாகும் எனக் கூறிய ஏர் இந்தியா நிர்வாகம், இது தொடர்பாக மனு ஒன்றை டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது. இதை, நீதிபதி கீதா மிட்டல் நேற்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஏர் இந்தியா தரப்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் குப்தா, "இந்த ஸ்டிரைக் சட்டத்திற்கு புறம்பானது. இதனால், விமான நிறுவனத்திற்கு மட்டும் நஷ்டம் ஏற்படவில்லை. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொண்டார். பைலட்கள் கூட்டமைப்பு சார்பில் வாதிட்ட வக்கீல் சஞ்சய் கோஷ், "ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்கள் இடையே சம்பள முரண்பாடு உள்ளது. ஏர் இந்தியாவில் இணைக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்கள் இன்னும் குறைவான சம்பளத்தையே வாங்குகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீதா மிட்டல், "பொதுமக்கள் நலன் கருதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்கள் உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும்' என உத்தரவிட்டார். மேலும், பைலட்கள் கோரிக்கையை பரிசீலிப்பதில் ஏர் இந்தியா நிர்வாகம் தாமதம் காட்டி வருவதையும் கண்டிக்க அவர் தவறவில்லை.
No comments:
Post a Comment