Thursday, April 28, 2011

கனிமொழியும், கல்மாடியும்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.


காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.


காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.


இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.


சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?



- நன்றி தினமலர்

No comments:

Post a Comment