Saturday, June 18, 2011

நீரா ராடியாவின் ஒப்புதல் வாக்குமூலம்-1

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்தான் எத்தனைவிதமான திருப்பு முனைகள்!

நீரா ராடியா தொலைபேசி டேப் லீக்-அவுட்டும், சி.ஏ.ஜி. அறிக்கையும் முதல் முக்கியத் திருப்பு முனைகள். சி.ஏ.ஜி. அறிக்கையில் உள்ள கணக்கு வழக்குகள், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த அளவுக்குப் பயன்பட்டதோ, அதே அளவு நீரா ராடியா டேப் விவகாரங்களையும் பயன்படுத்தியது சி.பி.ஐ... ஆனால், நீரா ராடியா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சி.பி.ஐ. முன்பு, ராடியா நான்கு தடவை ஆஜராகிக் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் இப்போது வெளியில் கசிந்துள்ளது.

அதன் முழு விவரம்...


நாள்: 21.12.2010

இடம்: சத்ரபூர் பண்ணை வீடு

விசாரணை அதிகாரி: சி.பி.ஐ. எஸ்.பி. விவேக் ப்ரியதர்ஷி

நீரா ராடியா சொல்கிறார் :

''நான் வசித்து வந்தது இங்கிலாந்தில். என் தந்தை, க்ரவுன் மார்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். அவரிடம் நிறைய வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகள் இந்திய கலாசாரத்தையும் பழக்க, வழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், 1994-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். என் மாமனார் லண்டனில், ஏர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தினார். அவர் மூலமாக விமானப் போக்குவரத்துத் தொழில் ​பற்றி அறிந்துகொண்டேன். அதன்படி, இந்தியாவுக்கு வந்து சஹாரா நிறுவனத்துக்கு விமானத் தொழில் தொடங்குவதற்கு உதவி​னேன்.

டாடாவுக்கு சிக்கல்

பின்னர், வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடங்​கினேன். 2001-ம் ஆண்டு முதல், டாடா நிறுவனத்துக்கும், 2005-ம் ஆண்டு முதல், யுனிடெக் நிறுவனத்​துக்கும் பொதுத் தொடர்புப் பணிகளை மேற்கொண்டேன். டாடா நிறுவனத்தில், டாடா டெலி சர்வீஸ் விவகாரங்​களுக்கு உதவினேன். 2005-ம் ஆண்டு, டாடா நிறுவனத்துக்கு, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிக்​ கொண்டு இருந்தார். இதனால், டாடா குரூப் நிறுவனம் இது போன்ற விவகாரங்களுக்கு ஆலோ​சனை கூறவும்... உதவி புரியவும் என்னைக் கேட்டுக் கொண்டனர்.

இப்போது 'டிராய்’ அமைப்பின் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) தலைவராக இருக்கும் டாக்டர் ஜெ.எஸ்.சர்மா, அப்போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தார். அவரை சந்தித்துப் பேசுவேன். அப்போது தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த பிரதீப் பைஜாலையும் சந்திப்பேன்.

2007-ல் நான் நோசிஸ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்ஸி நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் கே.நரூலா. பின்னர் இதே நிறுவனத்தில் பிரதீப் பைஜாலும் பணியாற்ற வந்தார். இவருக்கு என்னுடைய நிறுவனத்தில் 10 சதவிகிதப் பங்குகளைக் கொடுத்தேன்.

2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் கொடுக்கப்பட்ட இரட்டைத் தொழில் ​நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருந்தது. இந்த உரிமம் கிடைப்பதற்காக என் உதவியைக் கேட்டனர். இந்த உரிமம் டாடாவுக்குக் கொடுக்கப்​​படவில்லை.

தொலைத் தொடர்புத் துறையில் அணுகியபோது, விண்ணப்பம் முதலில் வரவில்லை என்றனர். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இந்த இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால், தொலைத் தொடர்புத் துறையில் இருந்த சர்மா போன்ற​வர்கள், டாடா​வுக்கு உரிமம் கொடுக்கப்​படாதது குறித்து வருத்தம் தெரிவித்​தார்கள்.

இது தொடர்பாக, செல்லு​லர் ஆபரேட்டர்ஸ் அசோஸி​யேசனை சேர்ந்தவர்​கள் தொலைத் தொடர்புத் தாவா தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், டாடா டெலி சர்வீஸ் நிறுவனமும் இருந்தது. இரட்டைத் தொழில் நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வரவேற்றது டாடா. ஆனால், தொலைத் தொடர்புத் துறை, இந்தக் கொள்கை முடிவை அறிவிப்பதற்கு முன்பேயே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் வழங்கிவிட்டதை எதிர்த்தது.

அதன் பிறகு, தொலைத் தொடர்புத் துறை, 10.1.2008 அன்று டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்கு இந்த உரிமத்தைக் கொடுக்க கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், ஸ்பெக்ட்ரம் கொடுப்பதில், சீனியாரிட்டி வரிசையில் இருந்த கம்பெனிகளில் டாடா நிறுவனத்தைக் கீழே வைத்திருந்தனர். முறைப்​படி, மற்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இரட்டைத் தொழில் நுட்பத்துக்கான உரிமக் கட்டணத்தையும் டாடா நிறுவனம் ஏற்கெனவே செலுத்தி இருந்தது.

அப்போது கொடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில், ஸ்வான் நிறுவனத்துக்கு மட்டுமே டெல்லி சர்க்கிள் உரிமம் கிடைத்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்த பங்குகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்துக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற டெலிகாம் சர்க்கிள்களுக்கு, 2006-ம் ஆண்டு சி.டி.எம்.ஏ. சர்வீஸுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்துக்கு டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்க மறுத்தார். இதற்குக் காரணமாக, பைசெல் என்ற நிறுவனம் டாடாவுக்கு முன்பே விண்ணப்பித்து இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கு வழங்கிவிட்டுத்தான், டாடாவுக்குக் கொடுக்க முடியும் என்று கூறினர்.

ஆனால், பைசெல் நிறுவனத்தின் மனு, உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் கிளியரன்ஸ் ஆகாமல் இருந்தது. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்கிற கொள்கையின்படி, பைசெல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் டாடாவுக்குக் கொடுக்க முடியாது என்று கூறினார். ஆனால், ஆ.ராசா அமைச்சரான பின்னர், 10.1.2008 அன்று, 25.9.2007-வரை விண்ணப்பித்தவர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.

ரியல் எஸ்டேட் விவகாரம்

என்னுடைய வைஷ்ணவி நிறுவனத்தின் மூலம் 2005 முதல் யுனிடெக் நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் விவகாரங்களில் உதவி புரிந்தேன். டாடா டெலி சர்வீஸ் நிறுவனம், யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தனர்.

டாடா ரியாலிட்டி நிறுவனம், தலைநகர் பகுதிகளில் நிலங்​களைத் தேடிக் கொண்டு இருந்தது. இந்த சமயத்தில், குஸேகான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களிடம் நிலங்கள் இருந்தன. அதனால், இந்த இரு நிறுவனங்களையும் நான் அறிமுகம் செய்துவைத்தேன். இதற்காக டாடா சுமார் 1,700 கோடியை யுனிடெக் நிறுவனத்துக்குக் கொடுத்தது. ஆனால், ரியல் எஸ்டேட் மார்க்கெட் நிலைமை சரியாக அமையாது போகவே, இந்த கூட்டு நடவடிக்கை கைவிடப்பட்டது. அதன் பின், டாடா தனியாக ரியல் எஸ்டேட் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. டாடா நிறுவனம் கொடுத்த பணத்தை, யுனிடெக் திருப்பிக் கொடுத்துவிட்டது.

அடுத்து, யுனிடெக் நிறுவனத்தில் யுனிநார் நிறுவனம் முதலீடு செய்தது. யுனிடெக் டெலிகாம் விவகாரங்களை, டி.டி. அசோசியேட்ஸைச் சேர்ந்த தீபக் தல்வாரும், யுனிநார் விவகாரங்களை பெர்ஃபெக்ட் ரிலேஷனைச் சேர்ந்த தீபக் செரியனும் கவனித்தனர். எங்களுடைய நிறுவனம் அதிகாரபூர்வமற்ற வகையிலேயே, சில ஆலோசனைகளை யுனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திராவுக்கு வழங்கியது.

டாடா.காம் நிறுவனத்தோடு எனக்கு எந்த விதமான வியாபாரத் தொடர்பும் கிடையாது. ஆனால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நஹாடாவை தொடர்பு கொள்வேன். ஒரு முறை அவர், தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாகவும், அதற்கான முதலீட்டாளர்களைத் தேடிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். இப்படியான பேச்சுவார்த்தைகள் தவிர, வேறு எந்தத் தலையீடும் எனக்கு இல்லை.

ஆனால்...

நன்றி : ஜூனியர்விகடன்-12-06-2011

No comments:

Post a Comment