Monday, June 20, 2011

கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!


டெல்லி: 2 ஜி வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி தொடரப்பட்ட கனிமொழி மற்றும் சரத்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி. கைதாகி, இன்றுடன் சரியாக ஒரு மாதம் முடிகிறது. டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடக்கோரி தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 10-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌஹான் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று கனிமொழி, சரத்குமார் இருவரின் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. கனிமொழி எம்.பி. சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், நீதிமன்றம் விதிக்கும் எத்தகைய நிபந்தனையையும் ஏற்க கனிமொழி தயாராக உள்ளார். நீதிமன்ற உத்தரவு அனைத்துக்கும் அவர் கட்டுப்பட்டு நடப்பார். அவர் தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், “கலைஞர் டி.வி.க்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் கொடுத்த ரூ.214 கோடி கடனாக பெறப்பட்டது அல்ல. அது ஊழல் பணம்தான். இது தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் சட்டவிரோதமாக நடந்த ரூ.214 கோடி பண பரிமாற்றத்துக்கான அசல் ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் கனிமொழி விடுதலை செய்தால், அவர் அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. சி.பி.ஐ. நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை இந்த காரணங்களுக்காகத்தான் ஏற்கனவே கனிமொழி மனுவை நிராகரித்து விட்டன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.

தள்ளுபடி….

சுமார் 1 1/2 மணி நேரம் வக்கீல் விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு நீதிபதிகள் சிங்வி, சௌஹான் இருவரும் தீர்ப்பை மதியம் 12.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

12.35 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சி.பி.ஐ. வக்கீலின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இருவரும், கனிமொழி, சரத்குமாரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சதியாளர்கள் என்று கனிமொழியும் சரத்குமாரும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், “குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் கோரலாம்,” என்றனர்.

எனவே ஜூலை வரை கனிமொழி திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment