Wednesday, June 22, 2011

எப்படி இருக்க வேண்டும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி? அரசு கண்டிப்பு

தமிழக அரசு இலவசமாக வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை மார்க்கெட்டில் உள்ள பொருட்களை விட உயர்தரத்திலும், இரண்டு ஆண்டு வாரன்டியுடன், அனைத்து பகுதிகளிலும் சேவை மையங்கள் கொண்டதாக இருக்க வேண்டுமென, தமிழக அரசு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மிக்சி, மின்விசிறி மற்றும் கிரைண்டர் ஆகியவை, வரும் செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக மிக்சி, கிரைண்டர், மேஜை மின்விசிறி சப்ளை செய்யும் நிறுவனங்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பங்கள், ஜூலை 11 வரை பெறப்படுகின்றன. அன்றைக்கே டெண்டர் திறக்கப்பட்டு, நிறுவனங்கள் முடிவாகும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, தரம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் சிறப்பு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், டெல்லி, மும்பை, சென்னை, புனே, கோவை உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. பிரபலமான மகாராஜா, ப்ரீத்தி, ப்ரெஸ்டீஜ், பட்டர்பிளை, காஞ்சன், கென்ஸ்டார் ஆகிய நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி, வணிகப்பிரிவு பொதுமேலாளர் கோதண்டராமன், வணிகப்பிரிவு முதுநிலை மேலாளர் பாலகிருஷ்ணன், தரக்கட்டுப்பாட்டு பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்தனர். டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனத்தினர், தரம் குறித்து பலவித சந்தேகங்களை எழுப்பினர்.


இதற்கு, மேலாண் இயக்குனர் வீரசண்முகமணி பதில் கூறியதாவது: டெண்டர் அறிவிப்பில் அனைத்து தகவல்களும் உள்ளன. தற்போது மார்க்கெட்டில் மக்கள் விரும்பும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை விட அதிக தரமாக இருக்க வேண்டும். அதே தரத்தில் கூட இருக்கலாம்; ஆனால், குறைந்த தரத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். குறைந்தது இரண்டு ஆண்டுகள், "வாரன்டி' (உத்தரவாதம்) தர வேண்டும். அனைத்து பிளாக் (பகுதி) வாரியாக, "சர்வீஸ் சென்டர்கள்' இருக்க வேண்டும். ஏற்கனவே இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். சேவை மையங்கள் விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது. முறையான அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதற்கான அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய வேண்டும். ஐ.எஸ்.எஸ்., தர அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்.ஏ.பி.சி., மற்றும் பி.ஏ.எஸ்., "லேப்'களில் சோதனை செய்யப்பட்டு, தரச்சான்று பெற்றிருத்தல் மிக அவசியம். உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருளும், லேப்களில் சோதிக்கப்பட்டு, தர முத்திரை சான்றுடன் மட்டுமே பெறப்படும்.


தேர்வாகும் நிறுவனம், ஆண்டுக்கு 30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தது இரண்டு லட்சம் பொருட்களை தயாரித்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் 1.83 கோடி பொருட்கள் தேவையுள்ளது. தர உறுதி மற்றும் அனைத்து வித அங்கீகார சான்றுகள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். "மிக்சி ஜார்'கள் ஒரு லிட்டரில் ஒன்றும், 400 மில்லி லிட்டரில் ஒன்றும் தர வேண்டும். துருப்பிடிக்காத "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பயன்படுத்த வேண்டும். "ஜார்' அடிப்பகுதி அலுமினியமா? பிளாஸ்டிக்கா என்பதை தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்வர். மிக்சி மூடிகளில், உடையும் வகை பாலி புரொப்பலின் பயன்படுத்தாமல், புல்லட் புரூப் பொருட்களில் பயன்படும் உடையாத பாலி கார்பொனைட்டாக இருக்க வேண்டும். மோட்டார்கள் 550 வாட் திறனிலும் இருக்க வேண்டும். பொருட்களை வழங்கும் போது அவை சேதமாகாமல் இருக்க, பெட்டிகளில் தெர்மோகோல் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். பொருட்களில் நிறுவன பெயர்கள் போடுவதா அல்லது வேறு எந்த தகவல் இருக்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.


கிரைண்டர்களில் தரமான கல் பயன்படுத்த வேண்டும். அதிலும், மோட்டார்கள் அதிக வெப்பத்தை தாங்கவல்ல காயில் கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு லிட்டர் வகை வெட் கிரைண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேஜை மின்விசிறி இறக்கைகள், தரமான நைலான் பிளாஸ்டிக் கொண்டதாக இருக்க வேண்டும். பட்டன்கள் உடையாத வகையிலும், சரியான சுழற்சி தரும் வகையிலும், காயில் போகாததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கண்டிப்பான விதிகளை தெரிவித்தார். முதற்கட்டமாக, 600 கோடி ரூபாயில் 25 லட்சம் டேபிள் டாப் வெட்கிரைண்டர்கள், 250 கோடியில் 25 லட்சம் மேஜை மின்விசிறிகள் மற்றும் 500 கோடியில் 25 லட்சம் மிக்சிகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தரம்... நிரந்தரம்: அரசு தரவிருக்கும் இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:

No comments:

Post a Comment