Monday, June 27, 2011

முதலில் அவங்களை சமாதனம் பண்ணுங்க


கழுகார் உள்ளே நுழையும்போது, அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்-கள் அடுத்​தடுத்து வந்துகொண்டே இருந்தன. ''எல்லாம் டெல்லியில் இருந்து!'' என்றார் சுருக்கமாக!

''காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.

''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஜெ., 'அரசின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்து பேசி, கேபிள் தொழிலுக்கு நல்லது செய்கிறேன்’ என்று உறுதி சொன்னாராம். அதற்கு முந்தைய நாள், தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மூவரும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினர். விரைவில் இதற்கான தனிச் சட்டம் வரப் போகிறது. ஆனால், இதில் ஒரு கூத்து நடந்துள்ளதாக இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.''

''என்னவாம்?''

''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''

''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!

நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011



No comments:

Post a Comment