Wednesday, June 22, 2011

லத்திக்கா சரண் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

பெட்டி, படுக்கைகளை எல்லாம் கட்டி வைத்துக் கொண்டு இருந்தார், சுவாமி வம்பானந்தா.

‘‘என்ன சுவாமி, ஆசிரமத்தை காலி பண்ணப் போறீங்களா?’’ கேட்டபடியே உள்ளே வந்தார் சிஷ்யை.

‘‘நான் எதுக்கு ஆசிரமத்தை காலி பண்ணணும்...? ஆசிரமத்தில் நிறைய மாற்றம் கொண்டு வரப்போறேன். பழசை எல்லாம் ஓரம் கட்டுறேன்... ஆனால் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்தான் வீட்டையும், ஆபீஸையும் காலி பண்ண ஆரம்பிச்சிருக்காராம்...’’

‘‘யார் அந்த அமைச்சர், சுவாமி...?’’

‘‘எதுவுமே தெரியாதது மாதிரி கேள்... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தயாநிதி மீது, இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்கிறார்கள். அதற்கு முன்பாக தயாநிதியிடம் விசாரணை நடத்தலாம் என்ற தகவலும் வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிரதமர் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் நடந்திருக்கிறது. கூட்டத்தில், தயாநிதி மாறனை ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாராம், பிரதமர்.’’

‘‘காங்கிரஸும் அவரை கைவிட்டுவிட்டதா?’’

‘‘ஆரம்பத்திலேயே சொந்தக் கட்சியான தி.மு.க. அவரைக் கைவிட்டுவிட்டது. டெல்லியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட இவருக்கு உதவ முன் வரவில்லை. ராகுல் காந்தியிடம் பேசிப்பார்த்தாராம். அவரும், ‘சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் இருப்பதால், நான் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டாராம். பிரதமர் தரப்பில் இருந்து அவரை ராஜினாமா செய்யச் சொன்ன விவரத்தை கருணாநிதியிடம் சொல்லியிருக்கிறார்.கருணாநிதியும் அவரை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டாராம்.இன்னும் இரண்டொரு நாளில் தயாநிதி ராஜினாமா செய்யக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.’’

‘‘தாத்தா ஏன் கைவிட்டார்...?’’

‘‘அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே... தாத்தாவிடம் சென்று, ‘என்னை திகாருக்கு அனுப்பிடுவாங்க போலிருக்கு...’ என்று வருத்தத்துடன் தயாநிதி முறையிட்டாராம். ‘பரவாயில்லை... போயிட்டு வா... எதையும் நீ சமாளிப்பியே...’ என்று முகம் பார்க்காமல் சொல்லிவிட்டாராம். இதில் தயாநிதிக்கு மிகவும் வருத்தமாம்...’’

‘‘இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ண... கனிமொழி வழக்கை விசாரிக்க வேண்டிய சதாசிவம் ஏன் மாட்டேன் என்று சொன்னார்...?’’

‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் நீதிபதியாக இருந்தவர். இப்போது தி.மு.க.வில் இருக்கும் முத்துசாமிக்கு மிகவும் நெருக்கமாம். அமைச்சராக இருந்த துரையானவருக்கும் நெருக்கமாம். அதோடு, கடந்த ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த அமைச்சர் ஒருவரின் உறவினரான ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் இவர் மிகவும் நெருக்கமாம்.குடும்ப நண்பர் என்று சொல்கிறார்கள். அவர் மூலமாகவும் நீதிபதியிடம் பேசினார்களாம். ஜாமீன் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்களாம். தேவையில்லாத பிரச்னையில் சிக்க வேண்டாம் என்று நினைத்த அவர், இந்த வழக்கே வேண்டாம் என்று முடிவு செய்து தலைமை நீதிபதியிடம் சொல்ல,வேறு பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.’’

‘‘கனிமொழி ஜெயிலில் எப்படி இருக்கிறாராம்...?’’

‘‘அதை விடு, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளுக்கு கடந்த ஞாயிறன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் கருணாநிதி, கனிமொழி, பேரன் ஆதித்தியாவுடன் உற்சாகமாகக் கொண்டாடுவார். கட்சி பிரமுகர்கள் பலரும் அவரைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்.இந்த முறை வீட்டிற்கு யாரும் வரவில்லை. மகள் சிறையில் இருப்பதால் பிறந்த நாளைக் கொண்டாடவில்லையாம். அதோடு, ஞாயிறன்று மாலையே டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.’’

‘‘கனிமொழிக்கு பெயில் கிடைக்கலையே?’’

‘‘சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி தரப்பில், ‘பாஸ்போர்ட்டை ஒப்படைக்கிறோம். கோர்ட் சொல்லும் வரையில் வீட்டுக் காவலில் இருக்கத் தயார்’ என்றும் சொன்னார்கள். ஆனாலும் பயனில்லை.’’

‘‘ஏன்?’’

‘‘மூன்றாவது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கலாக இருப்பதால், ஜாமீன் கிடைக்கவில்லை...’’

‘‘முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூட ஜாமீன் கிடைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்...’’



‘‘அவர் தோட்டத்துக்கு நெருக்கமானவர் ஒருவரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறாராம். அவரிடம் ‘என்னை நீங்கள் மண்டபத்திலேயே ஐந்தாண்டுகள் வைத்திருங்கள். என் மீது வழக்கு எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் ஏற்கெனவே கொடுத்த ‘ஓல்டாஸ்’ ஃபைல் போல இன்னும் சில ஃபைல்களைக் கொடுக்கிறேன்’ என்று உறுதி அளித்து இருக்கிறாராம்.’’
‘‘இந்த இரட்டை வேடம் நல்லா இருக்குதே...’’

‘‘இவருடைய சித்து விளையாட்டு இரு தரப்புக்குமே தெரியும்... இவரைப் போலவே கடந்த ஆட்சியில் செல்வாக்காக இருந்த டி.ஜி.பி. லத்திகா மீது விஜிலென்ஸ் வழக்கு வரப்போகுதாம்...’’

‘‘அவர் என்ன தப்புச் செய்தார்...?’’

‘‘ஒன்றா இரண்டா சொல்ல... நிறைய செய்து இருக்கிறார். அதில் ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர் டி.ஜி.பி.யாக இருந்த போது, எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையில் ஒரு காரும், அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு சொகுசு கார் என இரண்டு டைப்பாக கார்கள் வாங்கப்பட்டது.ஏற்கெனவே அதிகாரிகளுக்கு இரண்டுக்கு மேல் கார்கள் இருக்கும் நிலையில் புதிதாக கார்கள் வாங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான ஃபைல்கள் அனைத்தும் இப்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் கையில் இருக்கிறதாம். அவர்கள் ஆய்வு செய்ததில், கார் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறதாம். விரைவில் வழக்குப் பதிவு செய்யப்படலாம்.’’

‘‘ஐயோ பாவம்... ஏன் அவரைப் போய் கஷ்டப்படுத்துகிறார்கள்...?’’

‘‘இது பற்றி நானும் போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் கேட்டேன். ‘அவரா பாவம்... அவர் டி.ஜி.பி.யாக வந்ததே பெரிய கதை. அவரைவிட சீனியர் அதிகாரிகள் இரண்டு பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு முடிந்தும், தான் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக அந்த ஃபைல்களை குளோஸ் பண்ணாமல் வைத்திருந்தார். இப்போது அவர் கோர்ட்டுக்குக் கூட போகலாம் என்று பேச்சு இருக்கிறது. விஜிலென்ஸ் வழக்கு இருக்கும் போது, அவருக்கு சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவி தரமுடியாது என்று சொல்ல முடியும். கோர்ட் மூலமாகக் கூட அவர் பதவிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.’’

‘‘அவர் செய்தது... அவருக்கே பாதகமாகத் திரும்பி இருக்கிறது...’’ என்று சொன்ன சிஷ்யை, ‘காவலன்’ படத் தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்று கூடுதல் கமிஷனர் அபாய் குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார்’’ என்றார். ‘‘நல்லது’’ என்று சொன்னபடியே வெளியேறினார், வம்பானந்தா.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment