Saturday, June 18, 2011

கனிமொழியுடன் ஏற்பட்ட பழக்கம்! - நீரா ராடியா வாக்குமூலம்-3


நீரா ராடியா கடந்த ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2-ஜி வழக்கில் சி.பி.ஐ-யிடம் (சி.ஆர்.பி.சி.161-ன்படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இரண்டாவது நாள் விசாரணை இங்கே...

நாள்: 27.1.2011

இடம்: நீரா ராடியாவின் ஆகாஷ் கங்கா ஃபார்ம்ஸ்.

விசாரணை அதிகாரி: எஸ்.பி. விவேக் ப்ரியதர்ஷி, சி.பி.ஐ.

கால் எண்: 7 (செப்.8 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் சந்தோலியாவுடன் பேசியது...

''2008 நவம்பர் 3-ம் தேதி கலைஞர் டி.வி-க்கு, டாடா லெட்டர் கொண்டுவருவது குறித்துப் பேசினேன். இந்த சமயத்தில் டாடாவை தொலைத் தொடர்புத் துறை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்து சந்தோலியாவிடம் பேசினேன். சந்தோலியா நான்கு மாநிலங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரிலீஸ் செய்யப் போவதாகக் கூறினார். ஆனால், அதில் டாடா டெலிசர்வீஸ் இடம் பெறவில்லை என்றார். இப்படிச் செய்யாதீர்கள். மற்ற நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் போது, டாடாவுக்கு வேறுபாடு காட்டுவது சரியல்ல என்றேன்.

அந்தச் சமயத்தில் நடந்தது முழுமையாக நினைவுக்கு வரவில்லை என்றாலும், அமைச்சர் அலுவலகத்தில் இருந்து, கலைஞர் டி.வி. ஒளிப்பரப்புக்கு டாடா ஸ்கையில் பிளாட்ஃபார்ம் கொடுக்கும் விவகாரம் நிலுவையில் இருந்தது. இந்த விஷயத்தை மனதில் வைத்துப் பேசியதால், சந்தோலியாவிடம் நான் மும்பைக்குப் போகிறேன். உடன்படிக்கையை அவர்கள் உடனடியாக அனுப்புவார்கள் என்றேன்.''

கால் எண்: 8 (செப்.18, 2008)

யுனிடெக் சி.இ.ஒ. ரோகித் சந்திராவிடம் பேசியது...

''அமைச்சர் ஆ.ராசா அலுவலகத்தில் இருந்து வந்த சிபாரிசு காரணமாக, நான் பேசியது. மொபைல் தொலைபேசிகளில் கூடுதல் சர்வீஸ்களுக்கு, ஓசியன் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுக்க யுனிடெக் டாடாவுக்கு சிபாரிசு செய்ய அமைச்சர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டனர். இதன்படி, நான் ரோகித் சந்திராவிடம் பேசினேன். டெண்டர் கோரப்பட்டு உள்ளதால், ஓசியன் நிறுவனமும் விண்ணப்பித்து இருந்தால் அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் கூறினார். இந்த ஓசியன் நிறுவனம், மகேஷ் ஜெயின் என்பவர் சம்பந்தப்பட்டது. மகேஷ் ஜெயினை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரை அமைச்சர் ஆ.ராசா வீட்டில் பார்த்துள்ளேன்.''

கால் எண்: 9 (டிச.10, 2008)

கே.ஆர்.ராஜா என்பவரோடு பேசியது...

''இந்த கே.ஆர்.ராஜா என்பவர் முகேஷ் அம்பானியின் கார்ப்பரேட் அலுவலக இயக்குநர். இவர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறத் தகுதி இல்லாதது என்பது குறித்து என்னிடம் பேசினார். 'இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கொண்டு சென்றால், அவர் இதை சரியானபடி எடுத்துச் சென்று பொது நலன் வழக்குத் தொடருவார். இது பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்...’ என்று சொன்னார். மேலும் அவர், தனக்கு சுப்பிரமணியன் சுவாமியை தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் இந்த உரையாடலின்போது குறிப்பிட்டார்.''

கால் எண்: 10 (டிசம்பர் 11, 2008)

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசியது...

''அமைச்சர் ஆ.ராசா நேரடியாக என்னிடம் பேசியது. அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பயோனியர் பத்திரிகையில் வந்த செய்தி குறித்துப் பேசினார். கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மற்றும் டைனமிக்ஸ் பால்வா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து வெளியாகி இருந்தது. அவர் இந்த செய்தியின் மூலம் மிகவும் கதிகலங்கிப்போய் இருப்பது தெரிந்தது.

நான், 'இந்த பத்திரிகை பி.ஜே.பி-யைச் சேர்ந்த சந்தன் மித்ராவுடையது. அதனால் அவரிடமோ அல்லது பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களிடமோ நேரடியாகப் பேசுங்கள்’ என்று கூறினேன். பின்னர் சந்தோலியாவிடம் இருந்தும் போன் வந்தது. அந்த சமயத்தில் அவர், அமைச்சர் ஆ.ராசா, சந்தன்மித்ரா மீது கோபம் கொண்டு கத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார். நானும் அமைச்சர் வீட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சந்தோலியாவிடம் பேசினேன்.

நாள்: 29.1.2011,

இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன்,

ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலுவலகம்.

அதிகாரி: டெப்டி சூப்பரின்டென்ட் ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.

கால் எண்: 11 (மே 14, 2009)

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன மூத்த நிர்வாகி மனோஜ் மோடியுடன் பேசியது...

''தொலைத் தொடர்பு தீர்ப்பு ஆணையத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டுப் போடப்பட்ட மனு டிஸ்மிஸ் ஆகிவிட, அது குறித்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

இதே தீர்ப்பு ஆணையத்தில் ஜே.எஸ்.சர்மா உறுப்பினர். இவர்தான் முன்பு தொலைத் தொடர்புச் செயலாளராகவும், பின்னர் உரத் துறை செயலாளராகவும், பின்னர் தீர்ப்பு ஆணையத்தில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், ஜே.எஸ்.சர்மா, அனில் அம்பானிக்கு எதிரானவர். அனிலின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட இரட்டைத் தொழில்நுட்ப விவகாரத்துக்குள் ஆழமாகப் போகவில்லை என்றார்.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த சமயத்தில், இவர் உரத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதற்குக் காரணம் தயாநிதி மாறன், டாடா நிறுவனத்தை தண்டிக்க நினைத்தார். டாடா டெலி சர்வீஸில் ஐடியா செல்லுலாரின் பங்குகள் 10 சதவிகிதம்வரை இருக்க... இது டெலிகாம் உரிம விதிமுறைகளுக்கு எதிராக இருந்தது. இதைவைத்து மாறன், விதிமுறைகளை டாடா மீறி விட்டதாக அறிவிக்க இருந்தார்.

ஆனால் சர்மா, டாடா மீது பரிவு கொண்டு, பிரச்னையை சுமுகமாக முடிக்க முயற்சித்தார். அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஜே.எஸ்.சர்மாவை 'டிராய்’க்குத் தலைவராக நியமித்தார். இது குறித்துத்தான் மனோஜ் மோடியும் நானும் பேசினோம். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் கொடுக்கவே ஆ.ராசா, சர்மாவை டிராய்க்குச் சேர்மனாக ஆக்கினார்’ என்பது போன்ற தகவல்களை மனோஜ் மோடியோடு பரிமாறிக் கொண்டேன்.''

கால் எண்: 12 (மே 21, 2009)

2009 பொதுத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கப்படும் நேரத்தில் ஆ.ராசாவின் உதவியாளராக இருந்த சந்தோலியா, கனிமொழி மற்றும் சில பத்திரிகையாளர்களுடன் பேசிய உரையாடல்கள்...

''கனிமொழியை எனக்குத் தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்ட சமயத்தில்... அதாவது 2005-ம் ஆண்டு முதலே தெரியும். சுனாமியின்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் என்னுடைய நிறுவனமும் டிரஸ்ட் மூலமாக நிறைய உதவிகளைச் செய்தன. இப்படி ஏற்பட்ட பழக்கம்தான் அவர் டெல்லிக்கு வந்தபோதும் தொடர்ந்தது.

2009-ல் புதிய அமைச்சரவை ஏற்பட இருந்த சமயத்தில், யார் யார் அமைச்சர்களாக வருவார்கள் என்கிற ஆர்வத்தில் சந்தோலியா மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டேன். கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.ஆர். பாலு போன்றவர்கள் அமைச்சர்களாக வருவார்கள் என்று சொல்லப்பட்டது. இதை ஒட்டி கனிமொழியுடனும் பேசினேன்.

என் நினைவின்படி... ஆ.ராசா அந்த சமயத்தில் தொலைத் தொடர்புத் துறையைப் பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆ..ராசாவுக்குத் தொலைத் தொடர்பு அமைச்சகம் கிடைப்பதற்கு நான் முயற்சித்ததாகச் சொல்லப்படுவதும் தவறு. என்னைப் பொறுத்தமட்டில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி கிடைக்கிறது என்பதை அறிய நான் பலரைத் தொடர்பு கொண்டது உண்மைதான்.

காரணம், என்னுடைய கிளையன்ட் டாடாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் உறவு சரியில்லாமல் இருந்ததால், மாறனுக்கு என்ன இலாகா கிடைக்கும் என்பதை அறியும் ஆர்வத்தில் இருந்தேன். இந்த உரையாடலில் ரிலையன்ஸ் மற்றும் சுனில் மித்தல் ஆகியோரைப் பற்றியும் பேசியுள்ளேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆ.ராசா ஆதரவாக இருந்து இரட்டை தொழில் நுட்ப உரிமத்தைப் பெற்றுத் தந்தார். இதே மாதிரி, பாரதி ஏர்டெல் சுனில் மித்தல் தனித்தன்மையோடு பெருமளவில் வளர்ச்சி அடைந்து இருந்தார்.

செல்லுலார் ஆபரேட்டர் அசோஸியேஷனை சேர்ந்தவர்கள் மொபைல் டெலிபோன் வர்த்தகத்தில் ஏகபோகமாக இருக்கத் திட்டமிட்டு செயல்பட்டனர். அந்த ஏகபோக வியாபாரக் கூட்டணியை ஆ.ராசா தகர்க்க முயற்சித்தார். அவர் மீண்டும் அமைச்சரானால், நாங்கள் எல்லாம் ஒத்துழைப்போம் என்று பல தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் என்னிடம் கூறினர்.

இதனால் நானும் அவர்களுடன் பேசும்போது, 'ஆ.ராசாவால் தொலைத் தொடர்புத் துறை வளர்ச்சி ஏற்படும் என்பதோடு டெலிகாம் நிறுவனங்களுக்குள் சமநிலை - சமவாய்ப்பு கிடைக்கும்’ என்றும் இந்த உரையாடலில் பேசினேன்.''


நன்றி : ஜூனியர்விகடன்-19-06-2011

No comments:

Post a Comment